நம்மைச் சுற்றி ஏராளமான சுகாதார சீர்கேடுகள் உள்ளன. அவை நம்மை அடிக்கடி நோய்வாய்ப்பட வைக்கின்றன. சில நேரங்களில் இந்த நோய்கள் விரைவில் குணமாகின்றன. இன்னும் சில நேரங்களில் அவை நம்முடன் நீண்ட காலம் அல்லது வாழ்நாள் முழுவதும் இருந்துவிடுகின்றன. எனவே, இந்த நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க நாம் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
குறிப்பாக, நாம் உண்ணும் உணவுகளை கவனிக்க வேண்டும். ஏனெனில், நாம் உண்ணும் உணவுகளின் மூலம்தான் நமக்கு நோயை எதிர்த்துப் போராடும் திறன் உடலுக்குக் கிடைக்கிறது மற்றும் பல பிரச்னைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றவும் உதவுகிறது. நமது உணவில் புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அவசியம் இருக்க வேண்டும்.
இவை அனைத்தும் உலர்ந்த இஞ்சி / சுக்கு பாலைக் குடிப்பதன் மூலம் உடலுக்குக் கிடைக்கிறது. ஆகவேதான் சுக்கு பால் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. அதோடு, இதில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளும் உள்ளன. சுக்கு பாலின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
உங்களுக்கு காய்ச்சல், சளி மற்றும் தொண்டை வலி இருந்தால் உலர்ந்த இஞ்சி அல்லது சுக்கு பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் சுக்கு பொடியை பாலில் போட்டு குடிக்க ஆரம்பித்த ஓரிரு நாட்களில் தொண்டை புண் மாயமாய் மறையும். மேலும், சுக்கு தொற்றுநோயைக் குறைப்பதில் மிகச்சிறந்த பங்காற்றுகிறது.
சுக்கு மலச்சிக்கல் மற்றும் அஜீரணப் பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கிறது. செரிமானம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபட சுக்கு ஒரு அற்புதமான மருந்துப் பொருளாகக் கருதப்படுகிறது. உங்களுக்கு உணவு உண்ட பின் வயிறு உப்புசமாக இருந்தால், அதிலிருந்து விடுபட சுக்கு பொடியை பாலில் போட்டு குடியுங்கள்.
சுக்கு பாலைக் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். அதுவும் சுக்கு பாலில் தேன் சேர்த்து கலந்து குடித்தால், அதன் சத்து இன்னும் அதிகரித்து, உடலுக்கு இன்னும் அதிக நன்மைகளை அளிக்கும்.
உங்களுக்கு தொடர்ந்து விக்கல் வருகிறதா? என்ன செய்தாலும் விக்கல் நிற்கவில்லையா? சுக்கை தட்டி பாலில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, ஓரளவு குளிர்ந்ததும் குடிப்பதன் மூலம் விக்கலை நிறுத்தலாம்.
சுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஏனெனில், சுக்குவில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் இருப்பதால், சுக்கு வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றை எதிர்க்கும் அளவில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதற்கு தினமும் ஒரு டம்ளர் சுக்கு பால் குடிக்க வேண்டும்.
சுக்கு பொடியை பாலில் போட்டு குடிப்பதால், அது மூட்டு வலி மற்றும் கீல்வாதம் / ஆர்த்ரைடிஸ் போன்றவற்றில் இருந்து பெரும் நிவாரணம் அளிக்கும். இதற்கு தினமும் இரவு தூங்கும் முன்பு ஒரு டம்ளர் சுக்கு பால் குடிக்க வேண்டும்.