ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையில் இருந்தபோது சவுகந்தி மலரின் நறுமணம் அவரது நாசியை தழுவியது. ‘இந்த மலர் துவாரகையில் கிடையாதே. இது குபேர பட்டணமான அழகாபுரியில் அல்லவா இருக்கிறது. அங்குள்ள மலரின் மணம் பூலோகம் வரை வருகிறது என்றால் இங்கு அந்த மலர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என யோசித்து, சவுகந்த மலரைப் பறித்து வரவேண்டும் என்ற எண்ணத்தில் கருடனை அழைத்தார்.
இந்த சமயத்தில் கருடனுக்கும் சக்கரத்துக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது. “நீ கிருஷ்ணரை சுமப்பவன். கிருஷ்ணரோ என்னையே சுமக்கிறார்” என்று பெருமை பேசியது சக்கரம். கருடனோ, “என்னைப் போல விரைவாக செல்பவர் யார் உண்டு. ‘ஆதிமூலமே’ என கதறிய யானையை முதலையிடம் இருந்து காக்க பரமாத்மா என் மீது ஏறித்தான் வந்தார். நான் மின்னல் வேகத்தில் பறந்து சென்று அந்த இடத்தை அடைந்ததால்தான் யானையை மீட்க முடிந்தது. இன்னும் எத்தனையோ சாகசங்கள் புரிந்துள்ளேன்” என்றது.
இவர்களின் ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஸ்ரீகிருஷ்ணர் முடிவு செய்தார். கருடனிடம், “நீ குபேர பட்டணம் சென்று சவுகந்தி மலர்களைப் பறித்து வா” என்றார்.
“இவ்வளவுதானா? விரைவில் வருகிறேன்” என்ற கருடன் குபேர லோகம் சென்று அந்த மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தது. அந்தத் தோட்டத்தை அனுமன் பாதுகாத்து வந்தார். அவர் கருடனிடம், “ஏய், நீ யார்? அனுமதியின்றி மலர் பறிக்கிறாயே” என்றதும், கருடன் ஆணவமாக “பரமாத்மா சொல்லித்தான் நான் வந்துள்ளேன். ஒழுங்காகப் போய்விடு. உலகில் பூக்கும் எல்லா பூக்களும் பரமாத்மாவுக்கே சொந்தம்” என்றது.
“ஸ்ரீராமன் மட்டுமே பரமாத்மா. அவரைத் தவிர வேறு யாரும் எனக்குத் தெரியாது. பூவை போட்டு விட்டு ஓடிவிடு. இல்லாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன்” என மிரட்டினார் அனுமன்.
கருடன் அவரை கண்டுகொள்ளாமல் பூப்பறிக்க, அதைப் பிடித்துக் கட்டி வைத்தார் அனுமன். இது கிருஷ்ணருக்குத் தெரியாதா என்ன? இந்த லீலையை நிகழ்த்துபவரே அவர்தானே. அடுத்து, சக்கரத்தை அழைத்து, “நீ போய் அனுமனிடம் சிக்கி இருக்கும் கருடனை மீட்டு வா” என்றார்.
“நொடியில் வருகிறேன்” என்று சக்கரம் மின்னல் வேகத்தில் குபேர லோகத்தை அடைந்து அனுமனை மிரட்டியது. “கருடனை விடுகிறாயா? இல்லை உன் தலையை சீவட்டுமா” என்று ஆணவத்துடன் பேசியது. அனுமன் அதையும் பிடித்துக் கட்டி வைத்தார். இரண்டும் அனுமனின் இறுக்கம் தாங்காமல் கதறின. “நாங்கள் இருவரும் கிருஷ்ணரின் ஆட்கள். விட்டு விடு” என்று கெஞ்சின. அனுமன் அதைக் கண்டு கொள்ளாமல், ‘யாரடா அந்தக் கிருஷ்ணன்? பார்த்து விடலாம்’ என்று துவாரகைக்கு வந்தார்.
ஸ்ரீ கிருஷ்ணரிடம், “இந்த கருடன் தோட்டக் காவலனான என்னிடம் அனுமதி பெறாமல் பூ பறித்தான். அவனை நான் பிடித்து வைத்த வேளையில் இந்த சக்கரம் தேவையில்லாமல் தொந்தரவு செய்தது” என்றார். இதற்கு மேலும் சோதிக்க விரும்பாத ஸ்ரீகிருஷ்ணர், அனுமனுக்கு ஸ்ரீராமனாக உருமாறி காட்சி அளித்தார். கிருஷ்ணரும் ராமரும் ஒன்றே என்ற உண்மையை புரிந்துகொண்ட அனுமனிடம், “கருடனையும் சக்கரத்தையும் மன்னித்து விட்டு விடு” என்றார்.
ஆணவம் அழிந்த கருடனும் சக்கரமும் தங்களின் பலம் கடவுளின் பலத்தின் முன் சாதாரணமானது என்பதை உணர்ந்தனர்.