உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைப்பதற்கு இயற்கை ஏற்பாடாக வியர்வை உடல் வெளியேற்றுகிறது. அதிகப்படியான வெப்பம், அதிகப்படியான உடற்பயிற்சி போன்ற சமயங்களில் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறுவது சகஜம். இவை அல்லாமல் சாதாரண நேரங்களில் வியர்வை அதிகம் வருவதற்குக் காரணமாக சில சூழலைச் சொல்கின்றனர். பிரைமரி ஹைப்பர் ஹைட்ராசிஸ் மற்றும் செகண்டரி ஹைப்பர் ஹைட்ராலிக் என்று அதனை இரண்டு காரணிகளாகச் சொல்வர்.
பிரைமரி என்பது சாதாரணமானது. இது குழந்தையிலிருந்து மரபணு, பருவ மாற்றம், பதற்றம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படும் வியர்வையாகும். இது இயல்பானது. செகண்டரி ஹைப்பர் ஹைட்ராசிஸ் என்பது உடலில் உள்ள நோய்களைக் குறிக்கும் அறிகுறிகளாகக் கொள்ளலாம். தைராய்டு குறைபாடு, நீரிழிவு நோய் போன்றவை அதிக வியர்வையின் காரணமாகச் சொல்லலாம்.
நாள்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு உள்ளங்கை, கால்கள் வியர்க்கும். பெண்கள் சிலருக்கு கர்ப்ப காலத்தில் தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவே இருக்கும். இதுபோன்ற தைராய்டு பிரச்னை இருந்தால் உள்ளங்கை வியர்க்கும்.
சரும ஒவ்வாமை, நரம்பு மண்டல பாதிப்பு, இதயக் கோளாறுகள் என பல காரணங்களையும் அதிக வியர்வை ஏற்படுவதற்கான காரணங்களாகச் சொல்லலாம். இதோடு, தலைவலி, நெஞ்சு வலி, தலைச் சுற்றல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சிலருக்கு சிறு வயது முதலே அதீத பதற்றம், பயம் இருக்கும். இதை உளவியல் பிரச்னையாக மருத்துவர்கள் சொல்வர்.
இதற்குத் தீர்வாக ஆன்டிபெஸ்பரண்ட் எனும் க்ரீம் தடவி வர வியர்வை அதிகம் வருவது மட்டுப்படும். பாட்டலினம் டாக்சின் எனும் மருந்தும் அதிக வியர்வையைத் தடுக்க உதவும். மூன்றாவது மைக்ரோ நீடிலிங் ட்ரீட்மெண்ட். இதன் மூலம் நிரந்தரமாக அதிகப்படியான வியர்வையை தடுக்க முடியும். வியர்வை சுரப்பிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணிகளால் அதிக வியர்வை பிரச்னை வரும் என்பதால் அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டியது அவசியம். மனப் பதற்றத்தை குறைத்தல், ஒவ்வாமை ஏற்படக் காரணத்தை கண்டறிந்து தவிர்க்க இந்த பிரச்னையை சரிசெய்து விடலாம்.