ராம நாமத்தை உச்சரித்தால் மட்டும் போதுமா?

Raama
Raama
Published on

தினமும் ராம நாமத்தை ஜபிப்பார் ராமசரண் என்னும் தீவிர ராம பக்தர். ஒருநாள் தன் வீட்டின் அருகே கிளி குஞ்சு ஒன்று வந்து விழுந்ததை எடுத்து கூண்டில் அடைத்து வளர்த்து வந்தார். அதற்கு ராம நாமத்தையும் சொல்லிக் கொடுத்தார். கிளியும் அடிக்கடி ராம நாமத்தை சொல்லி வந்தது. சில நேரம் ராமாயணத்தில் உள்ள சில விவரங்களை கேட்கும் கிளி. அதற்கு விளக்குவார் ராம்சரண் .

ஒருநாள் ஒரு ஞானியை சந்திக்கப் புறப்பட்டார் ராம்சரண். அப்போது அவரிடம், "ராம நாமத்தை ஜபித்தால் நன்மை கிடைக்கும் என்கின்றனர். நான் ராம நாமத்தை தினமும் ஜபிக்கிறேன். எனக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஏன் என்று அந்த ஞானியிடம் கேட்டு வாருங்கள்," என்றது கிளி.

ஞானியை சந்தித்து விட்டு வந்த ராம்சரணிடம், "என் கேள்விக்கு ஞானி என்ன பதில் கூறினார்?" என்றது கிளி.

"கிளியே! உன் கேள்வியை கேட்டதும் ஞானி மௌனமானார்," என்றார் ராம்சரண். கிளி பதிலே கூறவில்லை. மறுநாள் கூண்டிற்குள் இறந்து கிடந்தது கிளி. மிகவும் துயரப்பட்டார் ராம்சரண்.

கிளியை எடுத்துச் சென்று மரப்பொந்தில் வைத்து மலர்களால் மூடி கிளியின் ஆத்ம சாந்தி அடைவதற்காக ராம பாடலை பாடினார். உடனே கிளி பறந்து மரக்கிளையில் அமர்ந்தது .

மிகவும் கவலையோடு, "நீ இறந்தது போல நடித்து ஏமாற்றினாயா?" என்று கேட்டார் ராம்சரண்.

"சுவாமி நான் உங்களை ஏமாற்றவில்லை. என் கேள்விக்கு எந்த பதிலும் கூறாமல் ஞானி மௌனமானார் என்று சொன்னீர்களே, அதன் தத்துவத்தை நான் புரிந்து கொண்டேன். இராம நாமத்தை வாய்விட்டு கூறினால் மட்டும் போதாது. 'ராம நாமத்தை ஆவி ஒடுங்கும் அளவிற்கு ஆத்மாவோடு கலக்க வேண்டும்' என்பதுதான் அவர் கூறிய விளக்கம். அதை நான் கடைபிடித்து மயக்க நிலையில் இருந்தேன். 'ராம நாமத்தை ஜபிக்க வேண்டும்' என்று எனக்கு கூறிய உங்களுக்கு, என்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணமே வரவில்லையே" என்று கூறியபடி பறந்து சென்றது.

தன்னறியாமைக்காக வெட்கப்பட்டார் ராம்சரண். பகவானின் நாமத்தை உச்சரிப்பதால் மட்டும் நன்மை வந்து விடாது. அதை ஆத்மார்த்தமாக உள்வாங்கி தர்மத்தின் படி நடக்க வேண்டும்!

(படித்ததில் பிடித்தது...)

இதையும் படியுங்கள்:
முகப்பொலிவிற்கு கடலை மாவு காம்போ இருக்க கவலை எதற்கு?
Raama

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com