
நம் அனைவருக்குமே கோவிலுக்கு செல்லும் பழக்கம் இருக்கும். அவ்வாறு கோவிலுக்கு செல்லும் போது சிலர் கோவிலின் நிலைவாசல்படியைத் தாண்டியும், மிதித்தும் செல்வதையும் கவனித்திருப்போம். இன்னும் சிலர் நிலைவாசல்படியை தொட்டு வணங்குவார்கள். இதில் எதை செய்வது சரியானது. அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
நாம் வீடு கட்டும் போது நம்முடைய வீட்டின் நிலைவாசலில் பஞ்ச உலோகங்களை வைத்து குலதெய்வத்தை வைத்து நிலைவாசலை அமைப்போம். அத்தகைய வீட்டின் நிலைவாசலை குலதெய்வமாகவும், மகாலக்ஷ்மியாகவும் கருதுவோம். அத்தகைய நிலைவாசலில் உட்கார்ந்தாலே தவறு என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
அப்படியிருக்கையில் கோவிலின் நிலைவாசல் எத்தகைய சக்தி பெற்றதாக இருக்கும். கோவிலுக்கு செல்வதற்கு முன்பு அகம், புறம் இரண்டையும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும். கோவிலில் அமைந்திருக்கும் குளம் போன்ற புனித நீர்நிலையில் சென்று கால்களை தூய்மையாக கழுவிய பிறகு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
கோவிலுக்கு சென்று இறைவழிப்பாடு செய்வதற்கு முன்பு கோபுரத்தில் இருக்கும் கலசத்தை வழிப்பட வேண்டும். 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று சொல்வார்கள். இதற்கு பிறகே கோவிலின் நிலைவாசல் வழியாக உள்ளே செல்ல வேண்டும்.
நம் மனதில் எண்ணற்ற கவலை, துயரம், தீய எண்ணங்கள் இருக்கும். அத்தகைய மனநிலையுடன் நாம் கோவிலுக்கு செல்லும் போது நம்மில் இருக்கும் பல்வேறு விதமான கெட்ட எண்ணங்களை தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த கோவில் நிலைவாசல்படிக்கு உண்டு.
இந்த கோவில் நிலைவாசல்படியை மிதித்துவிட்டு உள்ளே செல்லும் போது நம்முள் இருக்கும் துயரம், கவலை, தீய எண்ணங்கள் அப்படியே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதுவே கோவிலில் உள்ள நிலைவாசல்படியை தாண்டி செல்லும் போது நம்முள் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், கெட்ட விஷயங்கள் நீங்கி மனம் தூய்மைப்பெறும் என்று சொல்லப்படுகிறது. பிறகு கருவறைக்கு சென்று இறை வழிப்பாடு செய்யும் போது அங்கிருக்கும் நேர்மறை ஆற்றல் நமக்குள் முழுமையாக கிடைக்கும்.
இன்னும் சிலர் நிலைவாசல்படியை தொட்டு வணங்கிவிட்டு கோவிலுக்குள் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு செய்யும் போது அது இன்னும் சிறப்பாகவும், அதிஷ்டமாகவும் கருதப்படுகிறது.
எனவே, கோவிலுக்கு இனி செல்லும் போது நிலைவாசல்படியை மிதிக்காமல் தாண்டி செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.