
பிரச்னைகள் நிறைந்த இந்த உலக வாழ்வில் சிறிது நேரம் நிம்மதியைத் தேடிப்போகும் இடம்தான் கோயில்கள். ஆனால், அங்கும் முறையற்ற செயல்களால் தானும் நிம்மதி இழந்து, மற்றவர்களையும் நிம்மதி இழக்கச் செய்வது சிலரின் பழக்கமாக உள்ளது. கோயில்களுக்கு என்று சில விதிமுறைகள் உண்டு. அவற்றை பின்பற்றினால் இறைவனும் மகிழ்வார், மற்றவர்களும் மகிழ்வார்கள். ஆலயம் எதுவானாலும் அங்கு நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இங்கு காண்போம்.
1. நம்மை விட சக்தி மிக்கவர்களைக் காணச் செல்லும்போது உடல் சுத்தம், மன சுத்தம் அவசியம் தேவை. ஆகவே, குளிக்காமல் இறைவனைக் காண எந்த கோயிலுக்குள்ளும் செல்வது முறையன்று. அறிவியல் ரீதியாகவும் ஆரோக்கியம் பெற குளித்துவிட்டுச் செல்வது சிறப்பு.
2. தீய பழக்க வழக்கங்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. மது அருந்துதல், வெற்றிலை பாக்கு போடுதல், எச்சில் துப்புதல் போன்றவைகள் கோயிலுக்குள் செய்யக் கூடாது.
3. நம் வீட்டுக்குள் போடும் சண்டைகளை கோயிலுக்குள்ளும் பேசி விவாதிப்பது , அங்குமிங்கும் படுத்து உறங்குதல் மற்றும் தேவையற்ற கெட்ட வார்த்தைகள் பேசுதல் ஆகியவை கூடாது. இவையனைத்தும் அங்கிருக்கும் மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.
4. இறைவனுக்கு நேராக கால்களை நீட்டி அமரக்கூடாது. அங்கு போவோர் வருவோருக்கு இடைஞ்சலாக இருக்கும். மேலும், கடமைக்கு அவசர அவசரமாக வழிபாட்டை முடிக்காமல் நின்று நிதானமாக வழிபடுவதுதான் நன்று.
5. இறைவனின் பிரசாதத்தை வாங்கி தூண்கள் மற்றும் ஓரங்களில் போடக்கூடாது. தற்போது சேவை அமைப்புகள் பெருகி விட்டதால் அன்னதானங்கள் அதிகமாகி தேவைக்கு மிஞ்சிய சாப்பாடு கோயிலுக்குள் வீசுவது தவறான செயல். அவற்றைக் கொண்டுபோய் தேவைப்படுபவர்களுக்கு தருவது நல்லது.
6. தீபங்களையும் சூடங்களையும் கோயில் வாசல் படிகளில் ஏற்றக்கூடாது. அதற்குரிய இடங்களில் மட்டுமே ஏற்ற வேண்டும். அதேபோல் எண்ணெய் படிந்த கைகளைத் துடைக்க துணிகளை எடுத்துச் செல்லவும்..தூண்களில் எண்ணெய் தடவுவதைத் தவிர்க்கவும்.
7. ஆள் பாதி ஆடை மீதி என்பார்கள். செல்லும் இடங்களுக்குத் தகுந்த ஆடைகளை அணிவது முறையாகும். முக்கியமாக, பிறர் கண்களை உறுத்தாத வகையில் ஆடைகளை அணிய வேண்டியது அவசியம்.
8. ஆலயத்திற்குள் அவசியம் ஏற்பட்டாலொழிய அலைபேசிகளை உபயோகிக்காமல் இருப்பது மிகவும் நல்லது. அலைபேசியின் கதிர்வீச்சுகள் கோயில் சக்தியை மட்டுப்படுத்துவதோடு, முழுமையான கவனம் அலைபேசியின் மீதே இருக்கும் என்பதால் இறைவன் வழிபாட்டில் மனநிறைவை அடைய முடியாது.