ஒரு முறை நாரத மகரிஷி கவலையுடன் காணப்பட்டார். அவரது கவலையை கண்ட அன்னை மஹாலக்ஷ்மி "மகனே ஏன் கவலையாக இருக்கிறாய்" என்று கேட்டாள். அதற்கு நாரதர், "நான் செய்யும் செயல்கள் யாவும் இறுதியில் நன்மையில் முடிந்தாலும், அந்த நேரம் ஏற்படும் கலகங்களுக்கு நான் தானே காரணமாக விளங்குகிறேன். அதை எண்ணித்தான் வருத்தமாக உள்ளது தாயே," என்றார் . அதைக் கேட்ட மஹாலக்ஷ்மி, "நாரதா அப்படி என்றால் ஒன்று செய். ரிஷிகேசம் சென்று புனித கங்கையில் நீராடிவிட்டு வா. உன் கவலை யாவும் போய்விடும்," என்றாள்.
நாரதரும் ரிஷிகேசம் வந்தார். கங்கையில் நீராடலாம் என்று நினைக்கும் போது, பல வண்ணங்கள் கொண்ட விசித்திரமான மீன் ஒன்று நீரில் நீந்திக்கொண்டே நாரதரிடம், "என்ன நாரதரே சௌக்கியமா'?" என்றது.
பேசும் மீனை அதிசயமாக பார்த்துக்கொண்டே நாரதர், "ம்ம்... சௌக்கியமாக இருக்கிறேன். நீ நலமா மீனே?" என்று திருப்பி கேட்டார். மீன் கொஞ்சம் சலித்து கொண்டே, "நானும் எதோ நலமாக இருக்கிறேன் நாரதரே." என்றது.
உடனே நாரதர், "மீனே உன் சலிப்புக்கு என்ன காரணம்? ஏதாவது தேவையா என்று சொல். நான் வரவழைத்து தருகிறேன்," என்றார். அதற்கு மீன், "நாரதரே என் நலத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை. ஆனால்..." என இழுத்தது.
அதைக் கேட்ட நாரதர், "என்ன பிரச்னை; என்னிடம் சொல்," என்று கேட்க, மீன், "எனக்கு தாகமாக இருக்கிறது. குடிக்க தண்ணீர் தான் கிடைக்க மாட்டேங்கிறது. அதுதான் என் சலிப்புக்கு காரணம்,"என்றது.
மீன் கூறியதை கேட்டதும் நாரதருக்கு கோபம் வந்தது. "என்ன மீனே என்னிடமே விளையாடுகிறாயா? நீருக்குள் நீந்தி கொண்டே தாகத்துக்கு நீர் கிடைக்கவில்லை என்று என்னிடம் சலித்து கொண்டு சொல்கிறாயே. உன் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது?" என்றார்.
அதற்கு மீன் சிரித்துக்கொண்டே, "நீங்கள் மட்டும் என்னவாம். பேரானந்தம் தரும் நாராயண மந்திரத்தை உம்முள் வைத்துக்கொண்டே கவலையுடன் 'ஏதோ நலமாக இருக்கிறேன்' என்று கூறுகிறீரே. நீர் கூறுவது மட்டும் நியாயமோ?" என்று கேட்க, நாரதர் வியப்புடன் மீனை பார்க்க, மீன் உருவம் மறைந்து, திருமால் நாரதர் முன் காட்சியளித்து "நாரதா என் பெயரை கூறிக்கொண்டு நீ செய்யும் செயல்கள் யாவும் நன்மையில் தானே முடிவடைகிறது. கலகம் என்பது அவரவர்கள் மனநிலையை பொறுத்து உள்ளது. அதை நினைத்து நீ வருந்தி என்ன பயன்? யாவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணி தானே நீ உன் கலகத்தை துவக்குகிறாய். உன் நோக்கம் உயர்வாக இருக்கும் போது அதில் நடக்கும் செயல்களை கண்டு நீ ஏன் வருந்தவேண்டும்?" என்று கூறி நாரதரை ஆசிர்வதித்து விட்டு மறைந்து போனார். நாரதரும் உள்ளம் தெளிவடைந்து புனித கங்கையில் நிம்மதியாக ஆனந்தமாக நீராடினார்.
நம்மில் பலரும் இப்படித்தான் ஆண்டவரிடம் தன்னை ஒப்படைக்காமல் பிரச்சனைக்கு மேல் பிரச்சினை வருகிறதே என மனமுடைந்து காணப்படுகிறோம். நம்முடைய வாழ்வையே ஆண்டவனிடத்தில் ஒப்படைத்து விட்டு, எது நடந்தாலும் நன்மைக்கே என்ற மனநிலையில் சென்றால் நமக்கு நடப்பது எல்லாமே நன்மையாகவே முடியும். முதலில் ஆண்டவனிடத்தில் நம்மை ஒப்படைக்க தயாராகுங்கள். அதன் பின்னர் நடப்பதை நீங்கள் கண்கூடாக காணலாம். என்ன கவலையாக இருந்தாலும் சரி, கூறுவோம் நாராயண மந்திரம். அதுவே நாளும் பேரின்பம்யாவும் நலமாகவும் முடியும்.