meta property="og:ttl" content="2419200" />

பிள்ளையார் புத்த மதக் கடவுளா?

Pillaiyar
Pillaiyar
Published on

முழு முதல் கடவுளான விநாயகர் உலகம் முழுக்க வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். வெளி நாடுகளிலும் வேற்று மதங்களிலும் விநாயகர் எப்படி கொண்டாடப்படுகிறார் என்று பார்ப்போம். இந்தியாவில் விநாயகரை ஹிந்துக்கள், சமணர்கள், பெளத்தர்கள், சீக்கிய மதத்தினர் வழிபடுகின்றனர்.

சீனா மற்றும் திபெத்தில் புத்தம், போன் புத்தம், பெரிய மதமான சீனநாடோடி மதம் , கன்பூசியம், தாவோயிசம் என அனைத்து மதத்தினரும் வழிபடும் கடவுளாக விநாயகர் உள்ளார். சீனாவில் மதம் எதுவாக இருந்தாலும் அனைத்து பூர்வகுடி மதக்கடவுள்களையும் வழிபாடு செய்வது தான் அங்குள்ள சிறப்பு. சீனாவில் தாய் நாடோடி மதம், தந்தை புத்த மதம், மகன் தாவோ, மகள் போன் புத்த மதத்தை பின்பற்றி ஒரே வீட்டில் இருப்பார்கள். அடிக்கடி மதங்களை மாற்றிக் கொள்வார்கள்.

திபெத் மற்றும் சீனாவில் பிள்ளையார் புத்த மதக்கடவுள். முதலில் விநாயகர் அங்கு தடைகளை அழிக்கும் கடவுள். அவர் நாட்டியமாடிக் கொண்டிருப்பார் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில். திபெத்திய மொழியில் அவரது பெயர் மஹாரக்தா. அவர் தாந்தீரீக புத்திரின் ஒரு வடிவமாக போற்றப்படுகிறார்.

ஜப்பான் ஷின்டோ மதம், புத்தமதத்தில் விநாயகர் புனித தேவர் என்று பொருள் படும் ஷோட்டன் மற்றும் காக்னிட்டன் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் புனிதமானவர் என்பதால் சில இடங்களில் மறைவாக வைத்து தான் வழிபடுகிறார்கள். புனிதமான துறவிகள் மட்டுமே ஷோட்டனை சடங்குகள் செய்து வழிபடுகின்றனர். அவர் ஞானம் மற்றும் விரும்பும் அனைத்தையும் கொடுக்கும் கடவுள். காதல்,உறவுகள் மற்றும் வணிகத்தில் வெற்றி பெறுவதற்காக அவர் பரவலாக வணங்கப்படுகிறார்.

இந்தோனேஷியாவில் விநாயகர் கிபி முதல் நூற்றாண்டில் இருந்தே காணப்படுகிறார். சோழர்கள் படையெடுப்புக்கு முன்னரே கணபதி அங்கு இருந்துள்ளார். முன்பே ஹிந்து மதம் அங்கு பரவி இருத்தல் வேண்டும். பாலி மற்றும் ஜாவா தீவுகளில் மலாய் ஹிந்துக்கள் அதிகமாக உள்ளனர். அங்குள்ள பல பழமையான விநாயகர் சிலைகள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அங்குள்ள காடுகளில் பெரிய விநாயகரின் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு விநாயகர் ஹிந்துமதம் சார்ந்தவர் ஆயினும் புத்த மதத்தினரும் விரும்பி வழிபடுகின்றனர். இந்தோனேஷியா இஸ்லாமிய நாடாக இருந்த போதிலும் விநாயகர் படத்தை ரூபாயில் அச்சிட்டு வெளியிட்ட ஒரே நாடு என்ற பெருமை அவர்களுக்கு மட்டுமே உண்டு.

மியான்மரில் விநாயகர் ஹிந்து, புத்தம், பர்மிய நாடோடிமதத்தில் வழிபாடு செய்யப்படுகிறார். பர்மிய புராணப்படி அர்சி (பிரம்மதேவர்) ஒருமுறை சக்ரா (இந்திரன்)விடம் தோற்றதால் அவரது தலையை கொய்து அதற்கு பதிலாக யானையின் தலையை பொருத்தியதாக அங்குள்ள புத்த மதத்தினர் நம்புகின்றனர். ஆனால் அங்குள்ள ஹிந்துக்கள் தமிழர் மற்றும் பெங்காலிகளாக இருப்பதால் அவர்கள் இந்திய புராணங்களை நம்புகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பழநி முருகன் கையில் இருக்கும் தண்டத்தில் அமர்ந்திருக்கும் கிளியின் ரகசியம் தெரியுமா?
Pillaiyar

தாய்லாந்தில் விநாயகர் பிரா பிகானெட், பிரா பிகனேசுவான்(விக்னேஸ்வரன்) என்று அழைக்கப்படுகிறார். அங்கு விநாயகர் புத்த மதத்தின் கல்வி மற்றும் செல்வத்தின் கடவுள். அப்சரா தேவதை தன் குற்றத்தினால் அசுரபங்கி நீர்யானையாக பிறந்து முவுலகங்களையும் தொல்லை செய்கிறாள். நீர்யானையை அழிக்க சிவன் கந்தகுமானை (கந்தகுமாரன்) அனுப்பினார். அப்போது விஷ்ணுவின் தூக்கத்தை இந்திரன் சங்கூதி கலைத்தார். அந்நேரம் எதிரில் வந்த கந்தகுமானை தலையில்லாமல் போ என்று விஷ்ணு சபிக்க அவரின் ஆறு தலைகளும் மறைந்தது. சிவன் விஸ்வகர்மாவிடம் பொருத்தமான மனித தலையை தேடச் சொன்னார். அது கிடைக்காமல் போனதால் ஒரு யானை தலையை கந்தனுக்கு பொருத்தி கணேஷ் என்று பெயரையும் மாற்றினார்கள். தாய்லாந்தில் இந்தியாவை விட உயரமான 100 அடிகளை தாண்டிய விநாயகரின் பிரம்மாண்ட சிலைகள் பல உள்ளன.

வியட்நாம் மற்றும் கம்போடியாவில் குபேரனுக்கு பதிலாக விநாயகர் கொண்டாடப்படுகிறார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட விநாயகர் சிலைகள் கிடைத்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com