களேபரமான யுத்த பூமியில் உபதேசம் சாத்தியமா? அப்போ கீதோபதேசம்...?

Geethopadesam
GeethopadesamImg Credit: Pinterest
Published on

மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போர். இரு தரப்பிலும் ஏராளமான படைகள், யுத்தம் ஆரம்பிப்பதற்காகக் காத்திருக்கின்றன. அப்போது அர்ஜுனன் மனம் சோர்ந்துவிட அவனுக்கு உபதேசம் செய்து தேற்றுகிறான், கிருஷ்ணன். 

ஆனால் வெகுநேரம் நீடித்திருக்கக் கூடிய இந்த உபதேச அவகாசத்தில் துரியோதனப் படைகள் எப்படி பொறுமை காத்தன? இது சாத்தியம்தானா?

-இந்தக் கேள்விக்கு, சுவாமி சின்மயானந்தர் வெகு தெளிவான விளக்கம் அளித்திருக்கிறார்: 

'இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சுய ஆட்சியை அளித்துவிட்டு பிரிட்டிஷார் தம் நாட்டுக்குத் திரும்பினர். இரு நாட்டிடமும் அவர்கள் விட்டுச் சென்ற ஏராளமான போர் ஆயுதங்கள் இருந்தன. இதே சமயம், ‘காஷ்மீர் யாருக்கு?‘ என்ற பிரச்னை எழுந்தது. இதனால் காஷ்மீரை அடைய, இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பிலும் போர் முஸ்தீபோடு அணி வகுத்தனர்.

அப்போது ‘நாங்கள் முடிவு தெரிவிக்கும்வரை போர் நடத்துவதை ஒத்திப் போடுங்கள்,‘ என்று ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து ஓர் ஆணை அறிவிப்பு வந்தது. உடனே இரு நாடுகளும் போர் சிந்தனையைக் கொஞ்சம் தள்ளிப் போட்டன. ஆனால் இரு படையினரும் தத்தமது நாட்டிற்குள் திரும்பவும் இல்லை. ஐ.நா. சபை முடிவு சொல்லட்டும், அதன் பிறகு போரிடுவதா, திரும்பச் செல்வதா என்று தீர்மானிக்கலாம் என்ற யோசனையில் ஒருவரை ஒருவர் எதிர்நோக்கியபடி அப்படியே நின்றுவிட்டனர். 

இப்படி ஒருநாள், இருநாள் இல்லை, பல வாரங்கள் இரு தரப்பிலும் ஒரு குண்டுகூட வெடிக்காமல், ஆனால் எந்தக் கணமும் போரிடத் தயார் நிலையில் காத்திருந்தார்கள்.

போர்க்களத்துக்கு வந்தபிறகும், போர் நிறுத்தம் எப்படி சாத்தியமாயிற்று? 

போரின் நியாயத்தை முடிவு செய்ய, இரு தரப்பிற்கும் பொதுவான ஒரு மேலிடம் குறுக்கிட்டிருக்கிறது. அதன் முடிவு தெரிந்த பிறகு போரிடுவதா, வேண்டாமா என்று முடிவு செய்யலாம், என்ற எண்ணத்துடன் அதுநாள்வரை சகோதரர்களாகப் பழகி வந்த இந்திய-பாகிஸ்தானிய வீரர்கள், இப்போது எதிரிகளாகி, தனித்தனியே அணிவகுத்து நின்றார்கள்! 

இதையும் படியுங்கள்:
‘பக்தியில் ஆணவம் கூடாது’ என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் திரௌபதிக்கு உணர்த்திய சம்பவம் தெரியுமா?
Geethopadesam

குருக்ஷேத்திர களத்தில் நடந்ததும் இதுபோன்றதுதான். அதுவரை சகோதரர்களாக வாழ்ந்த பாண்டவர்களும், கௌரவர்களும் தத்தமது படைகளுடன் எதிரெதிர் அணிகளாக நிற்கிறார்கள். அப்போது தேரை ஓட்டிக்கொண்டு வந்து நடுவில் நிறுத்துகிறான் கிருஷ்ணன். எதிரணியில் சகோதரர்கள், தாத்தாக்கள், குருமார்கள் எல்லோரையும் பார்த்து கலங்கிப்போய் போர் புரியமாட்டேன் என்று சொல்லி வில்லைக் கீழே போட்டுவிட்டான் அர்ஜுனன். ஆனால் போரின் முக்கியத்துவத்தையும், அவனுடைய தலையாய பொறுப்பையும் வலியுறுத்தும் வகையில் அவனுக்கு உபதேசம் செய்கிறான் கிருஷ்ணன். இது இவ்விருவருக்குமிடையே நடந்த உரையாடல்தான். ஆனால் தொலைவிலிருந்து இதை கவனிக்கும் இரு தரப்புப் படையினரும் என்ன நினைக்கிறார்கள்?

‘அர்ஜுனன் வில்லைக் கீழே போட்டுவிட்டான். கிருஷ்ணன் அவனுக்கு ஏதோ அறிவுரை சொல்கிறான். ஒருவேளை யுத்தமே மேற்கொள்ளாமல் பாண்டவர்கள் பின்வாங்கிச் சென்றுவிடலாம்,‘ என்று கௌரவர்கள் நினைக்கிறார்கள். 

இதையும் படியுங்கள்:
அனுமனாக அவதரித்த சிவபெருமான்!
Geethopadesam

‘எத்தகைய உத்திகளால் எதிரிகளை வீழ்த்தலாம் என்று கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு சொல்லிக் கொடுக்கிறான். சிறிது நேரம் போகட்டும், அந்த உத்திகளை வைத்து அர்ஜுனன் அம்புகள் தொடுப்பான். அதற்குப் பிறகு யுத்தம் தொடரலாம்,‘ என்று பாண்டவப் படைகள் நினைக்கின்றன. 

இப்படி இவர்கள் காத்திருக்க, கீதோபதேசம் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல், இரு தரப்பிலும் தர்மத்தைப் போற்றும் கிருஷ்ணனின் அவதார மகிமையை உணர்ந்த பெரியவர்களும், அவன் முடிவெடுக்கும்வரை போரை ஆரம்பிக்க வேண்டாம் என்று காத்திருக்கிறார்கள்.  

இந்தியாவும், பாகிஸ்தானும், ஐ.நா. சபை முடிவுக்காகக் காத்திருந்தது போலத்தான், பாண்டவர்களும், கௌரவர்களும், கிருஷ்ணனின் கீதோபதேசம் முடிவதற்காகக் காத்திருந்தார்கள் என்று சொல்லலாம். ஆக, குருக்ஷேத்திர போர்க்களத்தில் கீதோபதேசம் நிகழ்ந்திருக்க நிச்சயமாக சாத்தியமிருக்கிறது!'

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com