டாரத்தி, எல்லீஸ் என்று இரு சிறுமியர் இருந்தனர். எல்லீசுக்கு பிறந்த நாள் வந்தபொழுது, பக்கத்து வீட்டினர் சைக்கிள் பரிசாகக் கொடுத்தனர். மற்றவர்கள் சாக்லேட் கொடுத்தனர். அந்த சாக்லேட்டை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு, சைக்கிளில் எல்லீஸ் சிறிது தூரம் சென்று வந்ததும் அவளுக்கு மனதில் திருப்தி, சொர்க்கமே தன் கையில் இருந்தது போல் உணர்ந்து சந்தோஷப்பட்டாள்.
ஆனால், டாரத்தியின் பிறந்த நாளின்போது அலங்காரமான அணிமணிகள், ஆடம்பரமான உடைகள், விலை உயர்ந்த கேக், தின்பண்டங்கள் என்று நிறைய செலவு செய்திருந்தபோதிலும், ‘தான் விமானத்தில் சென்று பல்வேறு நாடுகளை சுற்றிப் பார்க்க இயலவில்லையே’ என்று எண்ணி அவள் பிறந்த நாளை நரகமாக நினைத்துக் கொண்டாடினாள் என்று சிறு வயதில் கதை படித்திருக்கிறோம். சொர்க்கமும், நரகமும் நம் கையில்தான் என்பதற்கு சொல்லப்படும் கதை இது. அதைப்போலவே புராணத்தில் வரும் கதை ஒன்றும் சொர்க்கமும், நரகமும் நம் கையில்தான் உள்ளது என்பதை உணர்த்துகிறது.
கடவுளைக் காண்பதற்கு அசுரர்களும், தேவர்களும் வந்திருந்தனர். ‘பாற்கடலில் இருந்து அமிர்தம் வந்தபோது அதைத் தங்களுக்குக் கொடுக்கவில்லை’ என்று அசுரர்கள் மனு கொடுத்தனர்.
கடவுள், ‘‘இன்றைக்கு உங்களுக்கு அமிர்தத்தை விருந்தாகப் படைத்தால் போயிற்று” என்று கூறி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தனர்.
அமிர்தம் கிடைக்கப்போகிறது என்ற எண்ணத்தில் தேவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல், தாங்களும் அமிர்த விருந்து உண்ணப்போவதை எண்ணி அசுரர்களும் ஆனந்தமாக இருந்தனர்.
விருந்து நேரம் வந்தது. அசுரர்கள் பந்தி ஒரு பக்கம். அங்கே தேவர்கள் இல்லை. தேவர்கள் பந்தி ஒரு பக்கம். அங்கே அசுரர்கள் இல்லை. பந்தியில் எல்லாம் பரிமாறப்பட்டன. முடிவாக அமிர்தம் பரிமாறப்பட்டது. எல்லோரும் அமிர்தத்தை எடுக்கப் போனார்கள். ஆனால், அனைவரின் கைகளையும் வாய்க்கு உயராதபடி முடக்கி விட்டார் இறைவன். இதனால் யாராலும் அமிர்தத்தை உண்ண முடியாமல் போயிற்று.
சற்று நேரத்தில் அங்கு வந்த இறைவன் அசுரர்கள் யாரும் அமிர்தத்தை உண்ணாமல் பரிதவிப்போடு இருப்பதைப் பார்த்தார். அவர்களின், “ஏன் சாப்பிடவில்லை?” என்று இறைவன் கேட்டார். அதற்கு அவர்கள், “எங்களால் கையை உயர்த்த முடியவில்லை. எனவே, உண்ண முடியவில்லை' என்று வருத்தமுடன் கூறினார்கள்.
“சரி தேவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். என்னோடு வாருங்கள் என்று அசுரர்களைக் கூட்டிக்கொண்டு வந்தார் இறைவன்.
அங்கு தேவர்களாலும் தங்கள் கையால் உண்ண முடியவில்லை. ஆனால், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அமிர்தத்தை ஊட்டிவிட்டுக் கொண்டு சந்தோஷமாக இருந்தனர்.
இந்தக் காட்சியை அசுரர்கள் பார்த்து மனம் வெதும்பினர்.
தனது கையால் தனக்கு ஊட்டிக்கொள்ள முடியாதபோது, பிறருக்கு ஊட்டி விடுவதன் மூலம் தாமும் பசியாறலாம் என்பதுதான் தேவர்களின் பொதுநல புத்திசாலித்தனம். தனக்கு தானே ஊட்டிக்கொண்டு தாம் மட்டுமே பசியாற வேண்டும் என்பதுதான் அசுரர்களின் சுயநல புத்தி. இதன் மூலம் தாம் ஒருவருக்கு உதவினால் இன்னொருவன் தமக்கு உதவுவான் எனும் பாடத்தை இறைவன் அனைவருக்கும் உணர்த்தினார்.