‘புனிதர்’ என்று அறிவிக்கப்படும் இத்தாலிய இளைஞர்!

Carlo Acutis
Carlo Acutis
Published on

லண்டனில் பிறந்த இத்தாலிய இளைஞர் கார்லோ அகுட்டிஸ், ‘ஆயிரமாண்டு புனிதர்’ என்று போப் பிரான்சிஸ் அவர்களால் அறிவிக்கப்படும் பேறு பெற்றுள்ளார்.

இலண்டனிலிருந்து, பெற்றோருடன் சிறு குழந்தையாக இருந்தபோதே, மிலான் நகருக்குக் குடி பெயர்ந்தார் கார்லோ. ஏழு வயது முதலே சர்ச்சில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார். தன்னுடைய சொந்த முயற்சியால் கணினி செயல்பாட்டைக் கற்றுக் கொண்ட கார்லோ, வலை தளத்தின் மூலமாகத் தன்னுடைய இறை நம்பிக்கைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதனால், ரோமன் கத்தோலிக்கர்கள் மத்தியில், ‘வலைத் தளத்தின் புரவலர் துறவி’ என்று போற்றப்பட்டார். கால் பந்து, வீடியோ விளையாட்டுகள் ஆகியவற்றில் ஆர்வம் மிகுந்த கார்லோ தனக்கென்று இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலமாக அற்புதங்கள் நிகழ்த்தினார்.

லுகேமியா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கார்லோ, அவருடைய 15வது வயதில், 2006ஆம் வருடம் கர்த்தரின் பாதம் சேர்ந்தார். அவருடைய மறைவிற்குப் பின்னர், அவருடன் இணைய தளத்தில் இணைந்திருந்த பலரும் அவருடைய அருளால் புற்று நோய் நீங்கியதாகவும், குழந்தை செல்வம் வேண்டியவர்களுக்கு குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்தனர். வலைதளத்தின் இருண்ட பகுதிகளால் சமுதாயத்தில் நிறைய தீமைகள் பெருக்கெடுக்கும் காலத்தில், வலைதளத்தின் உதவியால் மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியும் என்பதற்கு கார்லோ ஒரு உதாரணம் என்று கூறினர்.

இத்தாலியின் அசிசி மறை மாவட்டத்தைச் சேர்ந்த கார்லோவின் பெற்றோர், அவருக்கு, ‘புனிதர்’ பட்டம் வழங்க வேண்டுமென்று வாடிகனுக்கு மனு அளித்தனர். புனிதர் பட்டம் பெறுவதற்குக் குறைந்தது, இரண்டு அற்புதங்கள் நிகழ்த்தி இருக்க வேண்டும்.

முதல் அற்புதம்: சீராக வேலை செய்யாத கணையத்தைப் (Pancreas) பெற்றிருந்தான் ஒரு சிறுவன். அவன் கார்லோ அணிந்திருந்த சட்டை ஒன்றைத் தொட்டதின் மூலம் பூரண குணமடைந்தான்.

இதையும் படியுங்கள்:
தொழிலதிபர்களை, ‘பிசினஸ் மேக்னட்டு’ என அழைப்பதன் 9 சுவாரஸ்ய காரணங்கள்!
Carlo Acutis

இரண்டாவது அற்புதம்: கோஸ்டாரிகன் நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி, ப்ளாரன்ஸ் நகரில் சைக்கிளிலிருந்து விழுந்தாள். அந்தப் பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டு, மூளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர் மருத்துவர்கள். ஆனால், அந்தப் பெண் பிழைப்பது கடினம் என்று கருத்து தெரிவித்தார்கள். அந்தப் பெண்ணின் தாயார், அசிசி நகருக்குச் சென்று, கார்லோவின் கல்லறையில் தன்னுடைய மகள் பிழைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள். கல்லறையில் பிரார்த்தனை செய்து பத்து நாட்களில், அந்தப் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் சுவாசம், பேச்சு, நடை ஆகியவை சீரானதாக வாடிகன் சொல்கிறது. மூளையிலிருந்த இரத்தக் கசிவு அறவே நின்றது. அறுவை சிகிச்சை தேவையில்லையென்று அந்தப் பெண். புனர் வாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டார்.

இந்த இரண்டு அற்புத நிகழ்வுகளுக்குப் பிறகு, மற்ற கார்டினல்களுடன் கலந்து ஆலோசித்து, கார்லோவைப் புனிதர் என்று நியமனம் செய்யப்போவதாக போப் பிரான்சிஸ் வாடிகனில் அறிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com