நாம் கட்டும் வீட்டை என்னதான் வாஸ்து பார்த்து கட்டினாலும், வீட்டின் நிலை வாசலுக்கு எதிரே சில குறிப்பிட்ட பொருட்கள் இருக்கக் கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருந்தால் அது நமக்குக் கஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அந்தப் பொருட்கள் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.
1. நம் வீட்டின் நிலைவாசலுக்கு எதிரில் பள்ளம் இருக்கக்கூடாது. இது ஒருவிதத்தில் எதிர்மறையான அறிகுறியை குறிக்கிறது. காலையில் எழுந்து பள்ளத்தைப் பார்த்தால், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது. மேலும், மழைக்காலத்தில் பள்ளத்தில் நீர் தேங்குவதால் கொசுக்கள் வீட்டிற்குள் வரத்தொடங்கும். இதனால் நோய்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
2. நிலைவாசல் எதிரில் முள் செடிகள் இருக்கக் கூடாது. இது நம் மனதில் எதிர்மறையான விஷயங்களைத் தூண்டிவிடும் என்று சொல்லப்படுகிறது.
3. நிலைவாசலுக்கு எதிரில் குட்டிச்சுவர் இருக்கக் கூடாது. இதை பார்க்கும்போது நம் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்தாமல், நம் முன்னேற்றத்தை தடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
4. வீட்டின் நிலைவாசல் படியில் கண்ணாடி மாட்டுவது வழக்கம். இது வீட்டிற்கு வரும் துர்சக்திகளை தனக்குள் எடுத்துக்கொண்டு நேர்மறையான ஆற்றலைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், அந்தக் கண்ணாடி உடைந்திருந்தால், அது வீட்டிற்கு எதிர்மறையான ஆற்றலைத் தரும். அவ்வாறு கண்ணாடி உடைந்திருந்தால், அதை உடனடியாக மாற்றி விட வேண்டியது அவசியமாகும்.
5. நிலைவாசலுக்கு எதிரில் கோயில் கோபுரம் தெரியக்கூடாது. இது சாஸ்திர ரீதியாக தவறு என்றும் நமக்கு இதனால் கோளாறுகள் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது.
6. நிலைவாசலுக்கு எதிரில் குப்பைத்தொட்டி இருக்கக்கூடாது. இதனால் நோய் ஏற்படுவது மட்டுமில்லாமல், நம் வீட்டிற்கு அதிர்ஷ்டம் வருவதும் தடைப்படும்.
7. நம்முடைய வீட்டு வாசலுக்கு எதிரிலே சந்து இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அதற்கு ஏற்றவாறு பிளாட் வாங்குவதோ அல்லது வீடு கட்டுவதோ இருக்க வேண்டும். நிலைவாசல் எதிரில் சந்து இருந்தால், அந்த வழியாக வருபவர்கள் பார்வை வீட்டிலே விழும். இதனால் திருஷ்டி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
8. நிலைவாசலின் எதிரில் நாம் விடும் காலணிகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நிலைவாசல் இல்லாத வேறு பகுதியில் காலணிகளை நல்ல முறையில் அடுக்கி வைப்பது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும், பலனையும் தரும் என்று சொல்லப்படுகிறது.