மழைக் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கும் ஜெகந்நாதர் கோவில்!

Jagannathar Temple
Jagannathar Temple

நமது முன்னோர்கள் வானத்தைப் பார்த்தே மழை வருமா? வராதா? என்பதை சொல்லி விடுவார்கள் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், ஒரு கிராமத்து மக்கள் மழை வருமா? வராதா? என்பதைக் கோவிலுக்குச் சென்றுதான் தெரிந்துக் கொள்வார்களாம்.

பொதுவாகவே நாம் ஏற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்களைக் கோவில்களில் காண முடியும். நம்பமுடியாத விஷயங்களையே நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இன்றைய மனிதர்கள்தான் அறிவியலை வைத்து பலவற்றை கண்டுப்பிடிக்கிறார்கள் என்று கர்வம் கொள்கிறோம். ஆனால், பல வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்கள் அறிவியலில் கைத்தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அன்றைய காலத்தின் அறிவியலின் சூட்சுமம் விளங்காத நமக்கு, அவை அதிசயங்களாகத் தெரிகின்றன.

அந்தவகையில், ஒரு கோவிலில் நிகழும் அதிசயத்தைதான் நாம் பார்க்கவுள்ளோம். அக்கோவிலின் மேற்கூரையிலிருந்து வரும் நீர் தூளிகளை வைத்தே அந்த கிராமத்து மக்கள் மழை வருமா? வராதா? என்பதை கண்டறிந்துவிடுகிறார்கள்.

உத்திர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் பென்தா என்ற கிராமத்திலருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, ஜெகந்நாதர் ஆலயம். சுமார் 1000 வருடங்கள் பழமையான இக்கோவிலின் மேற்கூரையில் இருந்து திடீரென தண்ணீர் சொட்டத் துவங்கும். சொட்டும் நீரின் அளவை பொருத்து அந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்யும் என அப்பகுதி மக்கள் கணக்கிட்டு விடுகிறார்கள்.

இந்த கோவிலில் நீர் சொட்ட துவங்கிய 7 நாட்களில் பருவமழை பெய்ய துவங்கி விடும். வெளியில் பருவமழை துவங்கியதும், கோவிலுக்குள் சொட்டிக் கொண்டிருந்த நீர் நின்று விடுகிறது. கோவிலை சுற்றிலும், மரங்களோ, மலையோ ஏதும் இல்லாத நிலையில் எங்கிருந்து நீர் சொட்டுகிறது, இதற்கு என்ன காரணம் என இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இந்த கோவில் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்பதும் தெரியவில்லை. ஆனால் 11 வது நூற்றாண்டில் கடைசியாக இந்த கோவில் புனரமைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலின் சுற்றுச் சுவர் 14 அடி தடிமன் கொண்டதாகும். வழக்கமாக எந்த கோவிலும் இது போல் அமைக்கப்படுவதில்லை. இந்த கோவில் முற்றிலும் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. அதேபோல், கோவிலுக்குள் நீர் சொட்ட ஆரம்பித்த 7 நாட்களுக்கு பின்னரே மழை பெய்ய ஆரம்பிக்கும் என்பதால், அந்த 7 நாட்களும் அங்குள்ள மக்கள் அதனை விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இந்த கோவிலில் லட்சுமணர், மகாவிஷ்ணு, சந்திரன், சூரியன் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மூலவரான ஜெகந்நாதர் சிலை 6 முதல் 7 அடி உயரம் கொண்டது. இது கருங்கல்லால் செய்யப்பட்டதாகும். ஜெகந்நாதரின் இரு புறங்களிலும் சுபத்ரா தேவி மற்றும் பாலபத்ரா ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். இக்கோவிலின் சுவர்களில் தசாவதார கோலங்களும் கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் இக்கோவிலில் மிக அரிதான பஞ்சமுக விநாயகர் சிலையும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
கோவாவின் மிகப்பழமையான கோவில் எது தெரியுமா?
Jagannathar Temple

பத்மநாப சுவாமி உள்ளிட்ட மகாவிஷ்ணுவின் 24 அவதாரங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. 100 அடி ஆழம் கொண்ட கிணறையும் இங்கு நீங்கள் பார்க்கலாம். கோவிலின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள வட்ட வடிவ அமைப்பு எந்த உலோக கலவையால் உருவாக்கப்பட்டது என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபோன்ற பல மர்மங்கள் அடங்கிய இந்தக் கோவிலுக்கு பல முறை ஆராய்ச்சியார்கள் வந்து ஆராய்ச்சி செய்திருக்கின்றனர். ஆனால், அங்கு நீர் சொட்டுவதற்கான காரணம் என்னவென்று கண்டுப்பிடிக்க முடியவில்லை. அதேபோல், உச்சியில் இருக்கும் வட்ட வடிவ அமைப்பைப் பற்றியும் எதுவும் தெரியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com