சென்னை, கொளத்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு அமுதாம்பிகை சமேத ஸ்ரீ சோமநாதீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் 800 ஆண்டுகள் பழைமையானது. 1745ல் ஆற்காடு நவாப் மன்னர் காலத்தில் அவருக்குக் கீழ் திவானாகப் பணிபுரிந்த முத்துக்குமாரப்ப முதலியார் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது இந்தக் கோயில். இக்கோயில் அமைந்துள்ள ஊர் முற்காலத்தில் திருக்குளந்தை என்றும், திருக்குளத்தூர் என்றும் அழைக்கப்பட்டு நாளடைவில் கொளத்தூர் என அழைக்கப்படுகிறது.
சந்திரன் தனது சாபம் நீங்க இத்திருத்தலத்து ஈசனை வணங்க, சந்திரனுக்குக் காட்சி கொடுத்து அருளியதால் மூலவர் சோமநாதர் என்று அழைக்கப்படுகிறார். சந்திரனுக்கு சோமன் என்கிற பெயரும் உண்டு. இக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாக இது வணங்கப்படுகிறது. இக்கோயில் சந்திர தலம் என்பதால் ஜாதகத்தில் சந்திரன் நீசம் பெற்றவர்கள் இங்கு வந்து தரிசிக்க நலம் பெறுவார்கள். சந்திரதோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.
கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இக்கோயிலில் அம்பாள் அமுதாம்பிகை சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது. வெளிப்பிராகாரத்தில் வன்னி மர விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ அமிர்தராஜ பெருமாள் சன்னிதியும் உள்ளது. அகத்திய முனிவர் வழிபட்ட பெருமை உடையது இத்தலம்.
மிகவும் தொன்மை வாய்ந்த இக்கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. காலை ஆறு மணி முதல் 11 மணி வரையிலும், மாலை ஐந்து முதல் எட்டு மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். இக்கோயிலில் சிவராத்திரி, அமாவாசை, பிரதோஷம் போன்ற நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. அருள்மிகு அமுதாம்பிகை சமேத ஸ்ரீ சோமநாதரை தரிசித்து வணங்க, இன்னல்கள் நீங்கி, வாழ்வில் வளம் பெறலாம்.