இன்று (ஜூலை 14ம் நாள்) ஸ்ரீ ஸுதர்ஸன ஜயந்தி. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பயங்களைப் போக்கி என்றுமே நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியையே கொடுக்க வல்லவர் சக்கரத்தாழ்வார் என்று போற்றப்படும் ஸ்ரீ ஸுதர்ஸனர்தான். திருமாலின் திருக்கரத்தில் முக்கியமான அடையாளமாக இருப்பவர் ஸுதர்ஸனரே. தீமைகள் ஒழியவும், நவக்கிரக சுழற்சிகளால் ஏற்படும் துன்பங்கள் தீரவும், பிணிகள் நீங்கவும், கண் திருஷ்டிகளிலிருந்து தப்பிக்கவும், பில்லி, சூன்யம் போன்றவை ஒழியவும் ஒருவர் ஸுதர்ஸனாழ்வாரை மனதில் நிறுத்திக்கொண்டால் போதும்.
திருமாலுக்குரிய ஆயுதங்கள் ஐந்து. அவை ஸுதர்ஸனம் எனப்படும் சக்கரம், பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கம், கெளமோதகீ எனப்படும் கதை, நந்தகம் எனப்படும் வாள் மற்றும் சார்ங்கம் எனப்படும் வில். இந்த பஞ்சாயுதங்களே பெருமாளுக்கு ஆபரணங்களாக இருக்கின்றன. இந்த பஞ்சாயுதங்களில் முதன்மையானது ஸுதர்ஸன சக்கரமே. திருமால் தனது வலக்கரத்தில் ஏந்தி இருக்கும் ஸுதர்ஸன சக்கரத்தை மனதில் நினைத்து விட்டாலேபோதும், சகல விதமான பாவங்களும் தானாகவே நீங்கி விடும் என்பர் பெரியோர்.
ஸுதர்ஸனர் என்ற திருநாமத்தின் பொருள், பார்வைக்கு இனியவர் என்பதே. தாமும் பார்வைக்கு இனிமையாக இருந்து தம்மை தரிசிக்கும், மனதில் நினைக்கும் அனைவரது வாழ்விலும் இனிமை சேர்ப்பவரே சக்கரத்தாழ்வார். ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 1000வது திருநாமம், ‘ஸர்வ ப்ரஹரணாயுத:’ அதாவது, அடியவர்களுடைய எதிரிகளைப் போக்கக்கூடிய அனைத்துவிதமான ஆயுதங்களையும் கொண்டவர் திருமால் என்பதே இதன் பொருள். நம்முடைய எதிரிகள் யார்? ஐம்புலன்கள்தானே? அந்த ஐம்புலன்களை நாம் ஜெயிக்க வேண்டும் என்றால் நாம் தொடர்ந்து ஜபிக்க வேண்டிய ஒரே மந்திரம், ‘ஜய ஜய ஸ்ரீ ஸுதர்ஸனா’ என்பதை மட்டும்தான். ஐம்புலன்களையும் தந்திரமாக ஜெயிக்க செய்திடும் மந்திரம், ஸுதர்ஸன மந்திரமும், ஸுதர்ஸன சக்கரத்தின் தரிசனமும்தான். ஸுதர்ஸனர் திருமாலின் அம்சம். இவரையே திருமாலாக வழிபடுகிறோம்.
ஹேதிராஜன், திருவாழி ஆழ்வான், திகிரி, சக்கரத்தண்ணன், நேமிதரங்கம் என்று பல பெயர்களால் போற்றப்படும் சக்கரத்தாழ்வார் சன்னிதி இல்லாத பெருமாள் கோயிலை நாம் பார்க்கவே முடியாது. அவர் திருக்கையில் ஏந்தி இருக்கும் 16 ஆயுதங்களையும் சேர்த்தே வணங்கவே 16 முறை அவரை வலம் வருவோம். ஆழ்வார்களில், திருமழிசை ஆழ்வார் ஸுதர்ஸனத்தின் அம்சமாகவே அவதரித்தவர். பெருமாள் எடுக்கும் எல்லா அவதாரங்களிலும், ஸுதர்ஸனரும் அவரை விட்டு பிரியாது அவரோடு அவதாரம் செய்திருக்கிறார். வாமன அவதாரம் எடுத்தபோது சுக்ரனின் கண்ணைக் கிளறி அழிக்க பவித்ர தர்பத்தின் நுனியில் அமர்ந்து செயல்பட்டது ஸுதர்ஸனரே. நரசிம்ம அவதாரத்தில், விரல் நகங்களில் பல் உருவமாக இருந்து இரண்யகசிபுவை கிழித்தெறிய உதவியது இவரே.
‘ஸுதர்ஸனா’ என்றால், அழகான கருணை பார்வை கொண்டு நல்ல பாதையை காட்டுவது என்றே பொருள். எம்பெருமானின் திவ்ய ஆயுதம் ஸுதர்ஸன சக்கரம்தானே? பெருமாளின் திவ்ய ஆபரணமாக இருந்து பக்தர்களை ஆபத்திலிருந்து பகவானுக்கு முன்பே ஓடோடி வந்து அடியவர்களின் கஷ்டங்களை போக்கவல்லது ஸுதர்ஸன சக்கரமே. கஜேந்திரன் எனும் யானை, முதலையின் வாயில் அகப்பட்டு, ‘ஆதி மூலமே என்று அழைத்தபோது அந்த யானையை முதலையின் வாயிலிருந்து காப்பாற்றிய பெருமை ஆதிமூலத்தின் திருக்கரத்தில் இருந்த சக்கரத்தாழ்வாரையே சேரும்.
‘ரதாங்கபாணி’ என பெருமாளை நாம் அழைப்பதற்கு முக்கியக் காரணமாக இருப்பவர் ஸுதர்ஸனரே. ‘ரதாங்கம்’ என்றால் சக்கரம். பாணி என்றால் கை. தம் கரத்தில் சக்கரத்தை ஏந்தி ரதாங்கபாணியாய் நம்மை எல்லாம் காத்துக்கொண்டிருக்கிறார் பெருமாள்.
‘எதிரிகளின் படைக்கு பயங்கரமானவரே, உயர்ந்த குணக் கூட்டங்களுக்கு பூஷணமாக இருப்பவரே, மீண்டும் மீண்டும் ஜன்மத்திற்கான காரணமான பயத்தை போக்குபவரே, சம்சார பயத்தை கடக்க வைப்பவரே, இந்த உலகமே நிலை பெறுவதற்கு காரணமாக இருப்பவரே, எல்லா பாவங்களையும் போக்கடிப்பவரே, வேதத்தில் சொல்லி இருக்கக்கூடிய நல் தர்மங்களைக் காண்பித்து தரக்கூடியவரே, மங்கலமான இந்த உலகத்தை வடிவமாகக் கொண்ட மகாவிஷ்ணுவிற்கு அலங்காரமாய் இருப்பவரே, ஸ்ரீ ஸுதர்ஸனரே உமக்கு ஜயம். உமக்கு பல்லாண்டு பல்லாண்டு’ என்று ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மகா தேசிகன் தம்முடைய, ‘ஸ்ரீ ஸுதர்ஸனாஷ்டகத்தில்’ அருளி இருக்கிறார். பற்பல பெருமைகள் வாய்ந்த கோடி சூர்யனுக்கு ஒப்பான பிரகாசத்தோடு சுற்றிக்கொண்டே இருக்கும் அந்த சக்கரத்தாழ்வரை மனதில் நிறுத்துவோம். வாழ்வில் நமக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறச் செய்து என்றுமே வெற்றியைத் தரக் காத்திருக்கிறார் ஸுதர்ஸனர்.