வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக இவற்றைச் செய்தாலே போதும்!

Just do these things to increase Mahalakshmi Kataksham at home
Just do these things to increase Mahalakshmi Kataksham at homehttps://www.nataji.com

ருவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும் வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க வேண்டும், வாங்க வேண்டும். செல்வம் நிலைக்கவும், விருத்தியடையவும் பணம் கொடுக்கல், வாங்கல் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவராலும் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்பக் கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது விசேஷம்.

வாசல்படி, உரல், ஆட்டுக்கல் மற்றும் அம்மி இவற்றின் மீது உட்கார கூடாது. அதேபோல், இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது. வெற்றிலை, வாழை இலை இவற்றை வாட விடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக்கூடாது. எரியும் குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது. வாயால் ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தினால்தான் அணைக்க வேண்டும். வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. இழவு என்றும் கூறக்கூடாது.

அதிகமாக கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது. உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது தரையில் சிந்தக்கூடாது. இவற்றை பின்பற்றினாலே உங்கள் வீடுகளில் லட்சுமி கடாட்சம் தழைத்து, செல்வம் பெருகும்.

ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்து விடுவான். அதேபோல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில் அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்து விடுகிறார். ஆகவே, இல்லம்தோறும் காலை வேளையில் வேங்கடேச சுப்ரபாதமும் மாலை வேலைகளில் விஷ்ணு சஹஸ்ர நாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். மகாவிஷ்ணுவின் அம்சமாக நெல்லி மரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு, ‘ஹரி பலம்’ என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் இது திகழ்கிறது. நெல்லி மரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுக முடியாது. நெல்லி மரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூரணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை, தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லட்சுமிக்கு மிகவும் பிடித்தவை. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கி கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும்  எனும்போது, அவற்றுக்கு தீவனங்கள் வாங்கித் தந்து போஷித்தால் லட்சுமி கடாட்சம் கொட்டும்.

இதையும் படியுங்கள்:
செப்பு வளையல் அணிவதால் மூட்டு வலி வராதா?
Just do these things to increase Mahalakshmi Kataksham at home

தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும் தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜன்மங்கள் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும் பொருளும் சந்தோஷமும் பெருகும்.

எந்தப் பொருளையும் இல்லை இல்லை என்று கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியது இருக்கிறது என்று சொல்ல வேண்டும். எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது. சர்ச்சை செய்யாத, சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக்கூடாது. அமாவாசை அன்று எண்ணை தேய்த்துக் குளிக்கக் கூடாது. வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும். இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது. வீட்டு வாசலில் போடும் கோலத்தில் பசு சாணம் போட்டாலும் கோமியம் பெய்தாலும் இல்லத்தில் செல்வம் பெருகும். மகாலட்சுமி வீடு தேடி வந்திருக்கிறாள் என்று பொருள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com