
தமிழ் வருடத்தில் ஆனி மாதம் மிகவும் விசேஷம் வாய்ந்த மாதமாகும். உத்திராயணத்தின் கடைசி மாதமாகிய ஆனி மாதம் சைவ, வைஷ்ணவ கோயில்களில் உத்ஸவங்கள் நடைபெறும் மாதமாகும். ஆனி உத்திரத்தன்று சிதம்பரம் ஸ்ரீ நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் என்னும் விசேஷ அபிஷேகம் நடைபெறும். ஆனி மூலம் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு மிகவும் விசேஷம். பெருமாள் கோயில்களில் ஆஞ்சனேயப் பெருமானுக்கு இன்று விசேஷ அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.
ஆனி மாதத்தை ‘ஜேஷ்டா மாதம்’ என்று சொல்வார்கள். அது போல, கேட்டை நட்சத்திரத்தையும் ஜேஷ்டா நட்சத்திரம் என்று அழைப்பதுண்டு. ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்னும் சிறப்புமிக்க மகா அபிஷேகம் நடைபெறும். இது சைவ, வைஷ்ணவ கோயில்களில் பிரசித்தி பெற்ற அபிஷேகம்.
சைவ கோயில் என்று எடுத்துக்கொண்டால் பழனி முருகப்பெருமானுக்கு இன்று ஜேஷ்டாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும். அதேபோல, எல்லா பெருமாள் கோயில்களிலும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றாலும், திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற பெருமாள் திருத்தலங்களில் ஆனி கேட்டையன்று ஜேஷ்டாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறும். இன்று பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து வழிபடுவார்கள்.
இன்று ஆனி மாத கேட்டை. அரசனைப் போல செல்வ வளம் பெற்று வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்று முருகப்பெருமானையோ, பெருமாளையோ அபிஷேகம் செய்து வழிபட்டால் அரச பதவி தேடி வரும். அது மட்டுமல்ல, உயர் பதவிகள் வகிப்பவர்கள், தங்கள் பதவியை தக்கவைத்துக் கொள்ளவும் ஜேஷ்டாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது சிறப்பானது. அரச பதவிக்கு நிகரான அரசியல் பதவிகள் வேண்டுவோர் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று ஜேஷ்டாபிஷேக வழிபாட்டில் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்யலாம்.
கேட்டை நட்சத்திரம் தேவேந்திரனின் நட்சத்திரமாகும். இந்திரன் தனது பதவியை தக்கவைத்துக் கொள்ளவும், தனது நிர்வாகத் திறனை புதுப்பித்துக்கொள்ளவும் ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று ஜேஷ்டாபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம்.
அதேபோல, ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதரை ஆனி மாதம் கேட்டையன்று வழிபட்டால் செல்வ வளம் பெருகும். இந்த நாளில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள், பெரிய தொழிலதிபர்கள் அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திலோ, பெருமாள் கோயிலிலோ இறைவனுக்கு விசேஷ அபிஷேகம், பூஜைகள் செய்து வழிபட, அவர்கள் நிர்வாகத் திறமை பளிச்சிட்டு வாழ்வில் மென்மேலும் உயர வழி கிடைக்கும்.