

கார்த்திகை பொரியில் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது. வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும் பொரியுடன் தேங்காயின் சரவலைச் சேர்க்கிறோம். தூய பக்திக்கு அடையாளமாக வெல்லத்தை சேர்க்கிறோம். தூய பக்திக்கு வசப்படும் இறைவன் பொரிக்கு முன்பும் தோன்றுவான் என்பது தத்துவம்.
கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி விரதம் இருப்பதன் பலனை தேவி புராணம் விரிவாகக் கூறுகிறது. ஒரு சமயம் அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்தபோது தவறுதலாக சிவலிங்கத்தை உடைத்து விட்டார். அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக கார்த்திகை தீபம் ஏற்றி விரதம் இருந்தாள். இதன் பலனை அம்பிகை பெற்றது போல் தீபம் ஏற்றி பலன் பெறுவதை நாமும் கடைபிடிக்கிறோம்.
சிவபெருமான் ஜோதி வடிவமாக திருவண்ணாமலையில் வீற்றிருப்பது போல மகாவிஷ்ணு ஜோதி வடிவமாக காஞ்சிபுரத்தில் தீபப்பிரகாசர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார். பிரம்மா யாகம் செய்தபோது ஜோதி வடிவில் பெருமாள் விளங்கியதால் விளக்கொளி பெருமாள் என்று அவர் அழைக்கப்படுகிறார்.
வைணவர்கள் கார்த்திகை தீபத்தன்று விளக்கொளியில் பெருமாளை விளக்கேற்றிக் கொண்டாடுகின்றனர். இதற்கு பெருமாள் கார்த்திகை என்று பெயர். கார்த்திகை முதல் நாள் பரணி தீபம். மாலை நேரத்தில் வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் வரிசையாக விளக்கேற்றி வைத்தல் மகிழ்ச்சியையும், ஐஸ்வர்யங்களையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை திருவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். கார்த்திகை பௌர்ணமியன்று ரங்கநாதர் சக்கரத்தாழ்வார் சன்னிதியில் எழுந்தருளியிருப்பார். அப்போது கார்த்திகை கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனையை பெருமாள் முன்னிலையில் ஏற்றுவார்கள்.
பெருமாள் அக்காட்சியை கண்டருள்வார். பிறகு சந்தன மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கே அரையர்கள், திருமங்கையாழ்வார் பாடிய ‘வாடினேன்’ எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடி வரவிருக்கும் மார்கழி மாத திருவிழாவுக்காக நம்மாழ்வாருக்கு விவரமாக கடிதம் எழுதுவார்கள். இதனை ஸ்ரீமுக பட்டயம் என்பர். நம்மாழ்வாருக்கு ஸ்ரீமுக பட்டயம் எழுதியருளும் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் பெருமாள் கோயிலுக்குச் செல்வார்.
வயலூர் முருகனுக்கு கார்த்திகை தீபத் திருநாளில் இரும்பால் செய்யப்பட்ட வேல் காணிக்கையாக வழங்கப்படும். திருச்சிக்கு அருகே திருக்கரம்பனூர் உத்தமர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளில் பெருமாளும், சிவனும் சேர்த்து திருவீதியுலா வருவர். கார்த்திகை தீபங்களை ஏற்றி விட்டு மூன்று முறை, ‘தீபம் ஜோதி பரம்பிரம்மம், தீபம் சர்வதாமோவஹம், தீபே சாத்யதே சர்வம், சந்த்யா தீப நமோஸ்து தே’ என்று சொல்லி பிரார்த்திக்க வேண்டும். விசேஷ பலன்களைத் தரும் தீப வழிபாட்டை மேற்கொள்வோம். மேன்மை பெறுவோம்.