

பைராகி மடம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரப் பெருமாள் கோவிலில், கருடன் பெண் வடிவில் அலமேலு மங்கைத் தாயாருக்கு தனி வாகனமாக இருப்பது அதிசயமான ஒன்றாகும். அதிகம் அறியப்படாத பைராகி சமூகத்தினரின் நிர்வாகத்தின் கீழ் இன்றும் நிர்வகிக்கப்படும் கோவில் இது. பைராகி மடம், தென்னிந்திய வகை பெரிய கோவில், ஒரு சிறிய வட இந்திய கோவில் என அனைத்தும் ஒரே வளாகத்தில் உள்ளது. பைராகி ஒரு இந்து வைணவ பிரிவாகும். இது 14ஆம் நூற்றாண்டில் துறவி ராமானந்தரால் தொடங்கப்பட்டது. பைராகிகள் மகாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் பகுதியிலும் அதிகம் காணப்படுகின்றனர்.
சென்னை சௌகார்பேட்டையில் 500 ஆண்டுகள் பழமையான பிரசன்ன வெங்கடேஸ்வரர் என்று அழைக்கப்படும் திருவேங்கடமுடையான் திருக்கோவில் உள்ளது.
இங்கு தாயார் பெயர் அலமேலுமங்கைத் தாயார்.
மூலவர் பிரசன்ன வெங்கடேசர்.
வராக புஷ்கரணி தீர்த்தம்.
இப்புனித தலத்தின் விமானம் 'பத்ம விமானம்' என்று அழைக்கப்படுகிறது.
திருப்பதி கோவிலில் உள்ள விதிமுறைகளின் படி இங்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. கருவறையில் 'பஞ்ச பேரர்கள்'என்று அழைக்கப்படும் ஐந்து பெருமாள்கள் உள்ளனர். சீனிவாச பெருமாள், லட்சுமி நரசிம்மர், கஜேந்திர வரதர், வராக சுவாமி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் என ஐந்து பெருமாள்கள் இங்கு உள்ளனர்.
திருவேங்கடமுடையான் கோயிலின் பிரதான நுழைவாயில் கிழக்கு திசையை நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது. உள்ளே பெருமாள் 7 அடியில் பிரம்மாண்டமாக நின்ற நிலையில் காட்சி தருகிறார். இங்கு நின்று நிதானமாக திருப்பதி பெருமாளை தரிசிக்கலாம். வாரத்தில் ஒரு நாள் தவிர மற்ற நாட்களில் இங்கு நேத்ர தரிசனம் காண முடியும்.
தாயார் கருட சேவை:
அலமேலுமங்கைத் தாயார் தனி சன்னதியில் உள்ளார். பொதுவாக விஷ்ணு ஆலயங்களில் கருட சேவையில் இறைவன் மட்டுமே காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் தாயார் கருட சேவையில் காட்சியளிப்பது வித்தியாசமானதாகும். கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு 9 நாட்கள் தீர்த்த உற்சவம் நடைபெறும். அப்போது கருட வாகனத்தில் ஏறி பிரகாரத்தை சுற்றி வருவார். இதற்கென தனி பெண் கருட வாகனம் உள்ளது.
புனித நீர்:
இங்குள்ள லட்சுமி நரசிம்மர் மேற்கு நோக்கி தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். அவரது காலடியில் 'நரசிம்ம யந்திரம்' உள்ளது.
பொதுவாக கோயில்களில் அபிஷேக தீர்த்தம் பக்தர்களின் கைகளில் வழங்கப்படும். ஆனால் இங்கு அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இந்த நீர் நோய்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
தனி சன்னதியில் திருமங்கை ஆழ்வார் தன் மனைவி குமுதவல்லியுடன் வீற்றிருக்கிறார். சமஸ்கிருதத்தில் பைராகி என்றால் சன்னியாசி என்று பொருள். பெருமாள் சன்னியாசி முன் தோன்றியதால் இத்தலம் பைராகி வெங்கடேச பெருமாள் என்று அழைக்கப்படுகிறது.
திருவிழாக்கள்:
சித்திரையில் 10 நாட்கள் உடையவர் உற்சவம். வைகாசி வரதருக்கு 10 நாட்கள் உற்சவம். ஆடிப்பூரம், புரட்டாசியில் பிரம்மோற்சவம். வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் நாட்களில் திருக்கல்யாணம், ஸ்ரீ ராம நவமி என்று திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.
எப்படி செல்வது?
NSC போஸ் சாலையில் இருந்து ஜெனரல் முத்தையா தெரு என்னும் சிறிய பாதையில் நுழைந்தால் பைராகி மடத்தின் கிழக்கு நுழைவாயில் உள்ளது. பைராகி மடத்தை ஒட்டி திருவேங்கடமுடையான் கோயிலின் பிரதான நுழைவாயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு என மூன்று திசைகளில் நுழைவாயில்கள் உள்ளன.
கோவில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.