காலத்தால் முந்தைய மூத்த கணபதி அருளும் திருத்தலம் எது தெரியுமா?

மூத்த விநாயகர்
மூத்த விநாயகர்https://www.youtube.com

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிபட்டிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலுக்கு 2015ம் ஆண்டு திருப்பணிகள் செய்தபோது, விநாயகார், முருகன், மகாவிஷ்ணு, லகுலீசுவரர் ஆகிய சிலைகள் கிடைத்தன. இவையனைத்தும் பல்லவர் காலத்தை சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இப்படிக் கண்டெடுக்கப்பட்ட ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட பிள்ளையார் சிலைதான் தமிழகத்திலேயே மிகவும் பழைமையானதாகக் கூறப்படுகிறது. இந்த விநாயகர் சிலையில் காணப்படும் தமிழ் வட்டெழுத்துக்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பிள்ளையார் சிலை, பிள்ளையார்பட்டி விநாயகரை விட காலத்தால் மிகவும் பழைமையானது என்றும், அதனால் இவரே 'மூத்த விநாயகர்' என்றும் கூறுகிறார்கள். அது மட்டுமின்றி, இவரே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கும் மூத்தவர் என தொல்பொருள் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

பதினாறு வயதை தனது ஆயுள் காலமாகக் கொண்ட மார்க்கண்டேயன் தன்னுடைய ஆயுளின் இறுதி நாளை அறிந்து சிவ பூஜை செய்யத் தொடங்கினான். அவனுடைய உயிரை எமதர்மன் கவர்ந்து செல்ல வந்தபோது மார்கண்டேயன் சிவபெருமானிடம் சரணாகதி அடைந்து சிவலிங்கத்தை கட்டிக்கொள்ள, எமன் வீசிய பாசக்கயிறு சிவன் மீதும் விழ  இதனால் கோபம் கொண்டு சிவபெருமான் காலனை  காலால் எட்டி உதைத்து மார்கண்டேயனுக்கு சிரஞ்சீவி வரமளித்தார்.

சிவபெருமான் மீது பாசக்கயிற்றை வீசியதால் உண்டான பாவம் அவனுடைய தர்மத்தை செய்ய விடாமல் தடுத்தது. பாவம் நீங்க பல தலங்களுக்கும் சென்ற எமன், இந்த ஆலகிராமம் திருத்தலத்தை வந்தடைந்து ஈசனை நோக்கி தவமியற்றினான். எமனின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், அவனுக்கு காட்சி கொடுத்து ஆறு முறை கங்கையில் நீராடினால் பாவம் போகும் என்று கூறியதுடன் அங்கிருக்கும் குளத்தில் கங்கையை வரவழைத்தார். எமனுக்கு காட்சி தந்து அருள்பாலித்ததால் இத்தல இறைவனுக்கு எமதண்டீஸ்வரர் என்பது திருநாமம்.

இதையும் படியுங்கள்:
கருப்பு வெள்ளை சிந்தனை ஏற்படுத்தும் விளைவுகள் தெரியுமா?
மூத்த விநாயகர்

லகுலீஸ்வரர் என்பது சிவபெருமானின் 28வது நாமமாகும். இங்கு அன்னை திரிபுரசுந்தரி ஆறடி உயரத்தில் இரு கரங்களிலும் நீலோத்பலம் மற்றும் தாமரைப் பூக்களை ஏந்தியபடி வலது கரம் அபயம் அளிக்க, இடது கரம் வரமருள நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். ஆலயத்தின் எதிரில் உள்ள குளத்தில் கங்கா தேவியின் சிலை ஒன்றுள்ளது. இங்கு நீராடுவதன் மூலம் கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம் என்று கூறப்படுகிறது.

பொதுவாக, சிவாலயங்களில் நவக்கிரக சன்னிதி இருக்கும். ஆனால், இக்கோயிலில் இறைவனே சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்வதால் நவக்கிரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லை. இக்கோயிலில் திருமணம் செய்வதும், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்வதும் விசேஷமாக சொல்லப்படுகிறது. சித்திரை மாத மக நட்சத்திரத்தன்று மார்க்கண்டேயருக்கு வரமளித்த விழா இக்கோயிலில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com