
கபீரின் போதனைகள், இந்து, இஸ்லாமிய மதங்களைக் கடந்து சீக்கியர்களின் தெய்வமும் புனித நூலுமான 'குருகிரந்த சாஹிப்'பில் இடம்பெற்றிருக்கின்றன. எல்லா உயிர்களிலும் இறைவன் ஒளிர்கிறான் என்பதை பல இடங்களில் மெய்ப்பித்த அவதாரப் புருஷர் இவர்.
1440-ம் ஆண்டு (1398-ம் ஆண்டு என்ற கருத்தும் உண்டு) வாரணாசியில் கங்கைக்கரையில் பிறந்தவர் என்றும், இவரை தமால், ஜீஜா பீபி என்ற இஸ்லாமிய தம்பதிகள் வளர்த்தனர் என்றும் இவரது சரிதை கூறுகிறது. திருக்குரானைத் திறந்து பார்த்ததும் தென்பட்ட 'கபீர்' என்ற சொல்லே இவருக்குப் பெயராகச் சூட்டப்பட்டது. 'கபீர்' என்றால் 'பெரிய' என்று பொருள். ஸ்ரீமன் நாராயணரின் ஆணைப்படி ஸ்ரீசுகப்பிரம்மமே கபீராக அவதரித்தார் என்றும் கூறப்படுகிறது.
நெசவாளி குடும்பத்தில் வளர்ந்த கபீர், இறையருளால் நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்று இறைவனைப் பாடி வளர்ந்துவந்தார். பாடுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்ததால், நெசவு செய்வதில் சற்றும் விருப்பமின்றி இருந்தார். இரவில் இவர் ஒரு முழம் நெய்தால், இவரது பாடலைக் கேட்டபடியே இறைவன் ஒரு முழம் நெய்வாராம்.
கபீருக்கு குருவென்று ஒருவரும் இல்லை. இதனால் இவருக்கு எழுதவும் படிக்கவும் தெரியாமல் போனது. ஆனாலும், ஞானம் வளர்ந்தபடியே இருந்தது. தக்க வயதில் இவருக்குத் திருமணமாகி மகனும் மகளும் பிறந்தார்கள். குடும்ப வாழ்வில் ஈடுபட்டாலும், இவருடைய மனம் ஆன்ம ஞானத்தைத் தேடியபடி இருந்தது. அந்தத் தேடல் அவர் இயற்றிய பாடல்களிலும் பிரதிபலித்தது.
இஸ்லாமிய முறைப்படி வளர்ந்தாலும், ராமரின்மீது பக்தி கொண்டு வாழ்ந்தார். இரு மதங்களிலும் நிலவிய மூட நம்பிக்கைகளைக் கண்டித்தார். இதனால் ஊர் மக்களால் தண்டிக்கப்பட்டார். இருந்தும் தன் நிலையிலிருந்து மாறவே இல்லை.
மகான் ராமானந்த தீர்த்தரின் சீடனாக ஆக ஆசைப்பட்டு, அவரை அணுகினார். ஆனால், தீர்த்தரின் சீடர்கள் அவரை உள்ளே அனுமதிக்காமல் அனுப்பிவிட்டனர். அன்றிரவே ஸ்ரீராம, லட்சுமணர்கள் அந்த மடத்தைவிட்டுக் கோபித்துக்கொண்டு போவதைப்போல தீர்த்தர் கனவு கண்டார். உடனே அலறிக்கொண்டு, 'அவரை ஏன் விரட்டினீர்கள்' என்று கங்கைக்கரை நோக்கி ஓடினார். ஓடிவரும் வழியில் படுத்துக்கொண்டிருந்த கபீரை மிதித்துவிட்டார் தீர்த்தர். அப்போது 'ராம ராம' என்று ஜபித்த திருநாமமே கபீருக்கு முதல் வேத பாடமானது.
கபீர்தாசர் தான் நெய்த துணியை விற்கச் செல்வது வழக்கம். அப்படி ஒருநாள் சென்றபோது மாயக் கண்ணனின் லீலையால் ஒரு பெரியவர் அவரிடம் வந்து துணியை விலைக்குக் கொடுக்கும்படி கேட்டார். விலை பேசிக்கொண்டிருந்த போதே, அந்தப் பெரியவர் துணியைப் பிடுங்கிக்கொண்டு செல்ல, அவரைத் தொடர்ந்து ஓடிய கபீர், ''ஐயா, துணிக்கு காசு கொடுங்கள்'' என்று கேட்டார். பெரியவர் பணம் கொடுக்க மறுத்ததும், கபீர் பெரியவரிடமிருந்த துணியைப் பிடுங்கினார். துணி இரண்டாகக் கிழிந்து ஒரு பாதி பெரியவரின் கையிலும், மறு பாதி கபீரின் கையிலும் வந்துவிட்டது. பெரியவரின் கையில் இருக்கும் துணிக்கான விலையை மட்டுமாவது கொடுக்கும்படி கபீர் கேட்டார். ''நான் இந்த வஸ்திரத்தை கண்ணனுக்காகக் கேட்கிறேன். இதற்குப் பணம் கேட்காதே'' என்ற பெரியவர், கண்ணனின் பெருமைகளை விளக்கிக் கூறியதுடன், ''இனி யார் வந்து கண்ணனின் பெயரைச் சொல்லிக் கேட்டாலும் அவர்களுக்குத் துணியைக் கொடுத்துவிடு'' என்று கூறினார். கபீர் நெய்த துணிகளை விற்கச் செல்லும்போதெல்லாம், கண்ணனின் லீலையின் காரணமாக யாரேனும் ஒருவர் வந்து கண்ணனின் பெயரைச் சொல்லி, துணியை வாங்கிச் செல்வது வழக்கமாகிவிட்டது. இதனால் கபீருக்கு வருமானம் இல்லாமல் குடும்பம் வறுமையில் தவித்தது.
பழுத்த ஆன்ம ஞானியாக விளங்கிய கபீர்தாசர் 'எல்லா உயிரிலும் ஆண்டவன் உறைகிறான்’ என்று உபதேசித்தார். எழுதப் படிக்கத் தெரியாத கபீரின் பாடல்கள் மக்களின் மனங்களில் ஆழப் பதிந்துவிட்டன. வாரணாசியில் ஏழை எளிய மக்கள் இவருடைய பாடல்களை மனப்பாடம் செய்துகொண்டார்கள். அதுவே பின்னாளில் நூலாக வெளிவர உதவியது. 500 ஆண்டுகளுக்கு முன்னரே பல புரட்சிகரக் கருத்துகளைக் கூறியவர் மகான் கபீர்தாசர். சீதா, ராம திவ்ய தரிசனத்தைப் பலமுறை கண்டவர். இவர் 1518-ம் ஆண்டு இவர் இறைவனைத் துதித்தவாறே மறைந்தார்.