

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி வரும் 16-ந்தேதி மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நடக்கிறது.
ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பஞ்சபூதத் தலங்களில் வாயு தலமாக விளங்கும், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில். பக்தியுடன் ஒருவன் செய்யும் எந்தவொரு பூஜையும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை விளக்கும் ஸ்தலமாக ஸ்ரீ காளஹஸ்தி அமைந்துள்ளது.
இந்த கோவிலில் தொன்றுதொட்டு ஆண்டுதோறும் 2 முறை கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் சிறப்பு நிகழ்ச்சி பாரம்பரியமாக நடந்து வருகிறது. அதில் ஒன்று சங்கராந்தி பண்டிகையையொட்டி காணும் பொங்கல் நாளில் நடக்கும். மற்றொன்று வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி நடக்கும். ஆண்டுக்கு இருமுறை மட்டும் இந்த நிகழ்வு நடைபெறுவதால் இதில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வருவார்கள்.
அதாவது ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின்போது சாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கும். அந்தத் திருக்கல்யாண உற்சவத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களையும், முனிவர்களையும் பங்கேற்குமாறு முன்கூட்டியே அழைப்பு விடுப்பதற்காக கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
அப்போது உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து 21 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கைலாசகிரி மலைக்கு கிரிவலம் சென்று திரும்புவார்கள். வழியில் 16 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும், சுவாமி-அம்பாளுக்கு வரவேற்பு அளிக்கப்படும். பக்தர்கள் இந்த மலையைச் சுற்றி 21 கி.மீ தூரம் கிரிவலம் செல்வார்கள். இது திருவண்ணாமலை கிரிவலத்தைப் போன்றது.
இந்த வருடம் மாட்டு பொங்கலான ஜனவரி 16-ம்தேதி வெள்ளிக்கிழமை அந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
கோபூஜை முடிந்த பின் கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் ஞானபிரசுனாம்பிகை அம்மனுக்கும், காளஹஸ்தீஸ்வரருக்கும், சோமாஸ்கந்தமூா்த்திக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்ட பின்னர் தனித்தனி சப்பரங்களில் கோவிலிலிருந்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக தொடங்கி கிருஷ்ணாரெட்டி மண்டபம், பேரிவாரி மண்டபம் வழியாக 21 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் புறப்பட்டு செல்வார்கள்.
இறைவனுடன் ஏராளமான பக்தர்களும் கிரிவலம் செல்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கிரிவலத்தில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழிநெடுகிலும் ஆங்காங்கே சாமி-அம்பாள் சிறிது நேரம் ஓய்வெடுத்து கிரிவலத்தைத் தொடர்வார்கள். ஊர்வலத்துக்கு முன்னால் கலைஞர்கள் கோலாட்டம் ஆடிக்கொண்டும், கேரள செண்டை மேளம் இசைத்துக்கொண்டும், பக்தர்கள் சிவன், பார்வதி போல் வேடமிட்டும் ஆடிப்பாடி செல்வார்கள். சாமி-அம்பாள் கைலாசகிரி மலையை அடைந்ததும் அங்கு அவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் நடந்தப்படும்.
கிரிவலம் செல்லும் நிகழ்ச்சியால் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் 2 நாட்கள் பக்தர்களின் அபிஷேக சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில் சார்பில் மட்டுமே சாமிக்கு அபிஷேகம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைலாசகிரி மலை, கயிலை மலையில் இருந்து உடைந்த ஒரு சிறிய துண்டு என்று நம்பப்படுவதால், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி மற்றும் மாட்டுப் பொங்கல் என ஆண்டுக்கு இருமுறை காஹஸ்தீஸ்வரா் கிரிவலம் வருவது குறிப்பிடத்தக்கது.