குருவாயூர் ஏகாதசி என்னும் கைசிக ஏகாதசி!

குருவாயூர் ஏகாதசி என்னும் கைசிக ஏகாதசி!
Published on

குருவாயூர் ஏகாதசி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் கைசிக ஏகாதசி கார்த்திகை மாதத்தில் வரும் சுக்லபட்ச ஏகாதசி. இந்த ஏகாதசி வைகுண்ட ஏகாதசியை விடவும் உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஏகாதசியன்று விரதம் இருந்தால் வருடம் முழுவதும் எல்லா ஏகாதசிகளுக்கும் விரதம் இருந்த பலன் கிடைக்குமாம்.

‘கைசிகம்’ என்பது ஒரு வகை பண்ணாகும். வாராஹ புராணத்தில் இந்த கைசிக ஏகாதசி தோன்றியதைப் பற்றிய ஒரு கதை இருக்கிறது. பாணர் குலத்தில் தோன்றிய நம்பாடுவான் மிகச் சிறந்த பெருமாள் பக்தர். இவர் திருக்குறுங்குடி திருத்தலத்தில் குடிகொண்டுள்ள நம்பிப் பெருமானை வழிபடுவதற்காக கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று கைசிகப் பண் இசைத்துக் கொண்டு கிளம்பினார். வழியில் ஒரு பிரம்ம ராட்சசன் ‘எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. எனக்கு நீதான் இன்றைக்கு உணவு!’ என்று அவரைப் பிடித்துக் கொண்டான். நம்பாடுவார், ‘என் உடல் உனக்கு உணவாகும் என்றால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியும்?’ என்றவர், ‘ஆனால், நான் போய் பெருமாளை தரிசனம் செய்து விட்டு வருகிறேன். அதன் பின் என்னை உணவாக ஏற்றுக் கொள்!’ என்றார்.

நம்பாடுவார் பெருமாள் சன்னிதிக்குச் சென்று மிக உருக்கமாக ஒரு கைசிகப் பண்ணைப் பாடினார். அவர் திரும்ப வந்தபோது பிரம்ம ராட்சசனுக்கு அதுவரை இருந்த பசி மறைந்து விட்டது. எனவே, அவன் நம்பாடுவாரை உண்ண மறுத்தான். மேலும் தனக்கு சாப விமோசனம் அருளுமாறும் அவரை வேண்டினான். நம்பாடுவாரும் தான் பாடிய கைசிகப் பண்ணின் புண்ணியத்தை அவனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க அவனுக்கு சாப விமோசனம் கிடைத்தது. இந்தக் கதை கைசிக ஏகாதசியின் சிறப்பை கூறுகிறது.

இந்த ஏகாதசி குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குருவாயூரில் குருவாயூர் கேசவன் என்று அழைக்கப்பட்ட கஜராஜன் மறைந்த நாள் குருவாயூர் ஏகாதசி நாளாகும். அதனால் அந்த நாள் குருவாயூர் கேசவனின் நினைவு நாளாகவும் குருவாயூரில் அனுசரிக்கப்படுகிறது. குருவாயூர் ஏகாதசியை முன்னிட்டு, ஒரு மாதம் முன்பிருந்தே குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் விளக்கேற்றும் உத்ஸவமும் ஆரம்பித்து நடைபெறுகிறது. கோயில் முழுவதும் லட்சக்கணக்கான விளக்குகளால் ஜகஜ்ஜோதியாக ஜொலிக்கிறது. இரவு நேரத்தில் எப்போதும் போல் 'யானை சீவேலி' என்றழைக்கப்படும் பிரதட்சணம் உண்டு. யானையின் மேல் ஒரு அர்ச்சகர் கையில் குருவாயூரப்பன் படத்தை வைத்துக் கொண்டு உட்கார, அந்த யானை பிரதட்சணமாக கோயில் உள்ளே வலம் வரும். ஏராளமான பக்தர்கள் கூடியிருந்து 'யானை சீவேலி'யை தரிசிப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
பயனில்லாத அற்புதங்கள் அற்பமே!
குருவாயூர் ஏகாதசி என்னும் கைசிக ஏகாதசி!

கேரளாவில் வசிக்கும் பக்தர்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கூட குருவாயூர் ஏகாதசி அன்று முழு விரதம் இருந்து தங்கள் ஊர்களில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு மாலையில் சென்று விளக்கேற்றி, அங்கே நடைபெறும் ஆரத்தி தரிசனம் செய்து விட்டு தான் தங்கள் விரதத்தை முடிப்பார்கள். இவ்வளவு சிறப்பு மிக்க கைசிக ஏகாதசி 23.11.23 (வியாழக்கிழமை) அன்று மாலை நடைபெற உள்ளது. நாமும் கைசிக ஏகாதசி என்னும் குருவாயூர் ஏகாதசியன்று விரதம் இருந்து நம் வீட்டுக்கருகேயுள்ள பெருமாள் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணரை தரிசித்து வணங்கி வாழ்வில் எல்லா நலங்களையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com