

அஷ்டமி வழிபாடு என்பது ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதியில் செய்யக்கூடிய ஒரு வழிபாடாகும். அந்த வகையில் அஷ்டமி என்றாலே பக்தர்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது காலபைரவர் வழிபாடு. பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்றும் அடியார்கள் செய்த பாவங்களை நீக்குபவர் என்றும் பொருள் ஆகும். கால பைரவர் நமக்கு வரக்கூடிய துன்பங்களை மாற்றி அமைப்பார்.
கால பைரவர் தோன்றிய திருநாள் மகாதேவாஷ்டமி, கால பைரவர் ஜெயந்தி, காலபைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இந்தாண்டு (2025)காலபைரவாஷ்டமி நாளை (நவம்பர் 12-ம்தேதி) அனுஷ்டிக்கப்படுகிறது. அஷ்டமி திதி இன்று இரவு (நவம்பர் 11-ம்தேதி) இரவு 11:08 மணிக்கு ஆரம்பித்து நாளை இரவு 10:58க்கு முடிவடைகிறது.
இந்து மதத்தில், காலபைரவர் சிவனின் உக்கிரமான வடிவமாகக் கருதப்படுகிறார். இந்து வேதங்கள் அவரை காலம் மற்றும் மரணத்தின் இறைவன் என்று விவரிக்கின்றன. பைரவர் என்ற சொல்லுக்கு 'பயங்கரமானவர்' அல்லது 'பயத்தை அழிப்பவர்' என்று பொருள்.
காலபைரவாஷ்டமி அல்லது மகா கால பைரவ அஷ்டமி என்பது சிவன், பைரவ அவதாரமாக அவதரித்ததை நினைவுகூரும் ஒரு புனித நாளாகும். இது தமிழ் மாதங்களில் தேய்பிறை அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. கால பைரவர் காலத்தின் கடவுள். கல் என்றால் 'நேரம்' மற்றும் 'பைரவா' என்பது சிவனின் வெளிப்பாடு. பௌர்ணமிக்குப் பிறகு எட்டாவது நாள், கால பைரவரை வழிபட உகந்த நாளாகக் கருதப்படுகிறது. மகாகாலேஷ்வர் வடிவில் இருந்த சிவபெருமான் பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டி இந்த நாளில் தவம் செய்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன.
தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்காகவும், எதிரிகளை வெல்லவும், பயத்தை போக்கவும், கஷ்டங்கள் நீங்கி, நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்கவும் காலபைரவாஷ்டமி நாளில் பக்தர்கள் காலபைரவரை வழிபடுகிறார்கள். காலபைரவரை பக்தியுடன் வழிபடுபவர் அச்சமற்றவராகி, மனதில் இருந்து அனைத்து விதமான பயங்களும் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நாளில் பக்தியுடன் விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், ஒருவர் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு உயர்ந்த ஆன்மீக நிலையை அடைவார்கள்.
கால பைரவர் ஜெயந்தியைக் கடைப்பிடிக்க விரும்புவோர் அதிகாலையில் எழுந்து, குளித்து, தூய ஆடையை அணிந்து விரதத்தை தொடங்க வேண்டும். விரத காலத்தில் எந்த உணவையும் தவிர்ப்பது நல்லது. தேவைப்பட்டால், நீங்கள் பழங்கள் மற்றும் பால் மட்டுமே உட்கொள்ளலாம். அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். மேலும் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருந்து கால பைரவருக்கு உரிய மந்திரத்தை ஓதுவது சிறப்பு.
அஷ்டமி நாட்களில் காலைப் பொழுதில் சிவபெருமானையும், மாலைப் பொழுதில் அதாவது சூரிய அஸ்தமனத்தில் பைரவரை வழிபாடு செய்வது என்பது மிகுந்த நற்பலனை ஏற்படுத்தும். இந்த நாளில், அன்னதானம் செய்வது மிகவும் விசேஷம்.
பைரவரைக் காலை நேரத்தில் வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும். பகல் வேளையில் தொழுதால் நாம் விரும்பியது கிட்டும். மாலை நேரத்தில் வழிபட, செய்துள்ள பாபம் எல்லாம் விலகும். அர்த்த சாம வழிபாட்டால் மனச்சாந்தியும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும் வளமான வாழ்வும் பெறலாம்.
சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு செவ்வரளி அல்லது எலுமிச்சை மாலை அல்லது உளுத்தம் பருப்பால் செய்த வடைமாலை அணிவித்து, கடுகு எண்ணெய், கருப்பு எள், சேர்த்து விளக்கு போட்டு வழிபட வேண்டும்.
மாதந்தோறும் வரும் அஷ்டமி தினங்களில் கருப்பு நாய்களுக்கு உணவளித்தால் எதிர்ப்புகளை வெற்றி கொள்ளக்கூடிய சூழ்நிலைகளையும், துஷ்ட சக்திகள் நம்மை நெருங்கவிடாமல் பைரவர் காத்தருள்வார்.