
குடும்பப் பிரச்னைகள் அனைத்தும் தீர பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும் என்பது பலருக்கும் தெரியும் (இன்று தேய்பிறை அஷ்டமி தினம்). தேய்பிறை அஷ்டமி நாளில் மட்டுமின்றி, வளர்பிறை அஷ்டமி நாளிலும் பைரவரை முறைப்படி வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். அஷ்டமி வழிபாட்டை மாலை நேரத்தில்தான் செய்ய வேண்டும். பழைமையான சிவன் கோயிலுக்கு சென்று, அங்கு நடைபெறும் பைரவர் அபிஷேகத்தில் கலந்துகொண்டு வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. மேலும், நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வாங்கியும் கொடுக்கலாம்.
தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபட ஏற்ற நேரம் ராகு காலம் ஆகும். இன்று காலபைரவருக்கு செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபடலாம் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும் எந்த மலராக இருந்தாலும் அதைச் சாத்தி பைரவரை வழிபடலாம். சிலர் ஆலயங்களில் பைரவருக்கு வடைமாலை சாத்தியும் வேண்டிக் கொள்வார்கள். அதேபோல், பைரவருக்கு விளக்கேற்றியும் வழிபடலாம். அதிலும், பைரவருக்கு பஞ்ச எண்ணெய் விளக்கு ஏற்றுவது மிகவும் விசேஷமானதாகும். பைரவர் சன்னிதியில் பஞ்ச தீபம் ஏற்றி வைத்து காலபைரவ அஷ்டகம் பதிகத்தை படித்தால் பைரவரின்பரிபூரண அருள் கிடைக்கும்.
பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்தையும் தனித்தனியாக ஐந்து அகல் விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வைத்து வழிபட, நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தீரவே தீராது என்ற பிரச்னைகள் கூட தீர்ந்து விடும். சிவன் ருத்ர ரூபமாக விளங்குபவர். பைரவர் சிவன் கோயிலின் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்.
சிவ மகா புராணத்தில் அஷ்டமி விரதம் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. அஷ்டமி என்பது திதிகளில் எட்டாவது திருநாள். தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாத தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாத அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. மார்கழி தேய்பிறை அஷ்டமி – சங்கராஷ்டமி, தை தேய்பிறை அஷ்டமி - தேவ தேவாஷ்டமி, மாசி தேய்பிறை அஷ்டமி – மகேஸ்வராஷ்டமி, பங்குனி தேய்பிறை அஷ்டமி – திரியம்பகாஷ்டமி, சித்திரை தேய்பிறை அஷ்டமி – ஸ்சாதனாஷ்டமி, வைகாசி தேய்பிறை அஷ்டமி – சதாசிவாஷ்டமி, ஆனி தேய்பிறை அஷ்டமி – பகவதாஷ்டமி, ஆடி தேய்பிறை அஷ்டமி – நீலகண்டாஷ்டமி, ஆவணி தேய்பிறை அஷ்டமி – ஸ்தானுஷ்டமி, புரட்டாசி தேய்பிறை அஷ்டமி – ஜம்புகாஷ்டமி, ஐப்பசி தேய்பிறை அஷ்டமி - ஈசான சிவாஷ்டமி, கார்த்திகை தேய்பிறை அஷ்டமி – ருத்ராஷ்டமி.
அஷ்டமி நாட்களில் பைரவருக்கு அர்ச்சனை செய்வதும், விரதம் இருப்பதும் நல்ல பலன்களைத் தரும். அஷ்டமி விரதம் இருப்பவர்கள் அழகிய உருவத்தை பெறுவார்கள். உடல் ஊனம் இல்லாமலும் செல்வ செழிப்புடனும் இருப்பார்கள் என்றெல்லாம் சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது. தேய்பிறை அஷ்டமியான இன்று காலபைரவரை வழிபட்டு அவரின் அருளைப் பெறுவோம். கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் வளமான வாழ்வைக் காண்போம்.