காலனின் சாபத்துக்கு விமோசனம் தந்த காலகாலேஸ்வரர்!

Kalakaleshwarar, who freed  from the curse of Kala!
Kalakaleshwara Temple
Published on

க்தர்களின் பிரியத்துக்கு உரிய சிவபெருமான் இந்த உலகில் நிகழ்த்திய திருவிளையாடல்கள் அநேகம். அதில் ஒன்று தான் கோவில்பாளையம் ஶ்ரீ காலகாலேஸ்வரர் திருக்கோவிலில் நிகழ்ந்த எமதர்மனின் சாபவிமோசனம்.

கோயம்புத்தூரிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்னூர் வட்டத்தைச் சேர்ந்த கோவில் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோவிலின் வரலாறும் சிறப்புகளும் சுவாரஸ்யமானது.

என்றும் பதினாறு என சிவபெருமானின் அருளைப் பெற்ற சிவபக்தனான மார்க்கண்டேயன் பற்றிய வரலாறை அறிந்திருப்போம். பதினாறு வயது முடிந்ததும் மார்க்கண்டேயனின் உயிரை எடுப்பதற்காக வந்த எமதர்மன் வீசிய பாசக்கயறு மார்கண்டேயன் சரண் அடைந்த சிவபெருமானின் மீது விழுந்தது. காரணம் அப்போது மார்கண்டேயர் திருக்கடையூரில் இருக்கிற சிவபெருமானின் லிங்கத் திருமேனியை தன் இரு கைகளால் கட்டி அணைத்து தன்னை காக்கும்படி வேண்டி சரணனடைந்ததே.

தன் பக்தரின் உயிரை பறிக்க வந்து பாசக்கயிறை வீசிய எமன் மீது கோபம் கொண்ட சிவபெருமான் அவரை உதைத்து சக்தியை இழக்க சாபமிட எமதர்மன் மானுட ரூபம் கொண்டு கெளசிக நதியிருக்கும் இந்த இடத்தில் வந்து சேர்ந்தார். சிவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற எண்ணிய எமனுக்கு சிவ வழிபாடு செய்ய எந்த வித கல்லோ, ருத்ராக்‌ஷமோ அல்லது விபூதியோ கிடைக்கவில்லை.

எனவே எமன் ஒரு குச்சியை எடுத்து நிலத்தில் குத்த அதிலிருந்து பெருகிய நுரையை மணலோடு குழைத்து அதில் சிவலிங்கம் செய்து வழிபட்டதாகவும் அதே கெளசிகாபுரியில் தவத்திலிருந்த விஸ்வாமித்ரர் இந்த நிகழ்வை உணர்ந்து எமனிடம் "நீ சிவபெருமானை தொழுததால் உன் சாபம் நீங்க பெற்றது. இனி நீ பழையவாறே உன் தொழிலை தொடங்கலாம்" எனக் கூற அதன் பின் எமதர்மன் இழந்த சக்தியுடன் சுயரூபம் பெற்று எமலோகம் சென்றதாகவும் எமதர்மர் வழிபட்டு விட்டுச் சென்ற அந்த லிங்கத்தை அதன் பின் விஸ்வாமித்ரரே நிர்மாணித்ததாகவும் தகவல்கள் கூறுகிறது.

கிட்டதட்ட 2000 ஆண்டுகள் பழமையான கோவிலான இங்குள்ள சிவபெருமான் காலனுக்கே குருவாக இருந்து சாபத்தை நீக்கியதால் காலகாலேஸ்வரர் என்ற திருப்பெயருடன் அருள் புரிகிறார். அம்பாள் கருணாகரவல்லி என்ற திருப்பெயருடன் விளங்குகிறார்.

இதையும் படியுங்கள்:
திருஷ்டி சுற்றுவதில் இத்தனை வகைகளா?
Kalakaleshwarar, who freed  from the curse of Kala!

இந்தக் கோவில் பல சிறப்புகளை கொண்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய திருவுருவ சிலையாக இங்கு அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி திருவுருவம் சொல்லப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை போலவே இங்கிருக்கும் நந்தியும் ஒரு காலத்தில் பச்சை நிறத்தில் தோன்றியதாகவும் அதனால் இவரை மரகத நந்தி என்றும் அழைப்பதுண்டு என்கின்றனர்.

மேலும் மூலவரின் திருவுருவம் மணல் மற்றும் நுரையால் செய்யப்பட்டதால் இவருக்கு தயிர், நெய், பஞ்சாமிர்தம் ஆகியவற்றில் அபிஷேகம் செய்யப்படுவதில்லை என்பதும் இங்கு சிறப்பு.

இவைகளுடன் சிவபெருமான் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையே கால சுப்ரமணியர் என்ற பெயரில் உள்ள முருக பெருமானின் சந்நிதி சோமஸ்கந்தர் வடிவில் அமைந்துள்ளதும் இவ்விடத்தின் சிறப்பு.

திருக்கடையூருக்கு இணையாக இங்குள்ள காலகாலேசுவரை வழிபட ஆயுள் பலமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. எனவே இக்கோவிலில் நிறைந்த ஆயுள் தரும் சாந்தி ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ஆகியவற்றை செய்வது சிறப்பானதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com