வாழ்க்கையில் நல்ல நிலையில் இருந்தவர்கள் கூட திடீரென்று பொருளாதாரம் இழந்து மனக் கஷ்டங்களுடன் வாழும் நிலை ஏற்படும். இந்த நிலை எதனால் ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலும் அவர்களின் மீதான கண் திருஷ்டியாகத்தான் இருக்கும்.
‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று சொல்கிறார்கள் அல்லவா? அது உண்மைதான். இதுபோன்ற பிறரின் பொறாமை கொண்ட கண் திருஷ்டியினால் பலரின் வாழ்க்கை சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற கண் திருஷ்டிகளிலிருந்து எப்படி தப்பிப்பது? இருக்கவே இருக்கிறது எளிதாகக் கிடைக்கும் ஊமத்தஞ்செடி.
தெய்வ சக்தி நிறைந்த செடியாகக் கருதப்படும் ஊமத்தஞ்செடியின் காய், பூ, இலைகள் என அனைத்தும் தீய சக்திகள் விரட்ட பரிகாரத்துக்குப் பயன்படுகிறது. பொதுவாக, ஊமத்தம் காய்க்கு கெடுதலை அகற்றக்கூடிய சக்தி உண்டு என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். நம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை அகற்றுவதற்கு ஊமத்தங்காய் தீபம் சிறந்த பரிகாரமாகிறது.
தெய்வீக மகத்துவம் நிறைந்த ஊமத்தங்காய் மற்றும் பூவையும் எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்கருகில் இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த இரண்டு பொருட்களையும் மஞ்சள் தண்ணீரை கொண்டு நன்றாகக் கழுவி விடுங்கள். சிறிது நேரம் அவற்றிலுள்ள ஈரம் போக ஆற விட்டு, பிறகு அவற்றை ஒரு மஞ்சள் துணியில் குலதெய்வத்தை வேண்டி 1 ரூபாய் நாணயத்தோடு சேர்த்து முடிந்து வீட்டின் நிலைப்படியில் கட்டி தொங்க விடுங்கள். இந்த முடிச்சை வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் தயார் செய்து வாசல் படியில் கட்டுவது சிறப்பு. தினமும் வீட்டில் தீபம் ஏற்றி காண்பிக்கும்போது இந்த முடிச்சுக்கும் காண்பிக்கவும்.
இதேபோல், ஊமத்தம் இலைகள் கிடைத்தால், அந்த இலைகளை சுத்தமான மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு, அவற்றைக் கொண்டு வீட்டில் இருக்கும் விநாயகருக்கு திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து வர வேண்டும். ஊமத்தம் பூவையும் விநாயகருக்கு சூட்டலாம். மூன்று வாரங்கள் தொடர்ந்து திங்கட்கிழமைகளில் விநாயகருக்கு ஊமத்தை இலையால் அர்ச்சனை செய்து, ஊமத்தம் பூவைச் சூட்டி வழிபட்டால், வீட்டில் உள்ள கெட்ட சக்தி நடமாட்டம் மற்றும் கண் திருஷ்டிகள் தீரும்.
பொதுவாகவே, எந்தப் பரிகாரம் என்றாலும் அதை முழு நம்பிக்கையுடன் செய்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.