காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில் நவராத்திரி உத்ஸவம்!

காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில் நவராத்திரி உத்ஸவம்!
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

லரில் சிறந்தது ஜாதி மல்லி, ஆண்களில் சிறந்தவர் மகாவிஷ்ணு, பெண்களில் அழகு ரம்பா, ஊர்களில் அழகு காஞ்சி என்பது காளிதாசன் கூற்று. ஏழு மோட்சபுரிகளில் தென்னிந்தியாவில் உள்ள ஒரே திருத்தலமான காஞ்சி, பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. உத்தமமான பதினெட்டு பீடங்களில் ஒட்டியான பீடமாக விளங்குவது காஞ்சி காமாக்ஷியம்மன் கோயிலாகும். விண்ணுலகை விடவும் பெருமையும் புகழும் வாய்ந்த காஞ்சியில், காணும் கண்களுக்கேற்ப, வழிபடும் தெய்வமாகவும், பெற்ற மகளாகவும், உற்ற தோழியாகவும் விளங்குகிறாள் அன்னை காமாக்ஷி.

முப்பெரும் அன்னையராம் தாயார் மகாலக்ஷ்மி, சரஸ்வதி தேவி மற்றும் பார்வதி தேவியின் ஒருசேர்ந்த உருவமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது ஸ்ரீ காமாக்ஷி அம்மனின் தனிச்சிறப்பு. ‘கா’ என்றால் சரஸ்வதி, ‘மா’ என்றால் லக்ஷ்மி, ‘அக்ஷி’ என்றால் திருவிழி நோக்கால் அருள்புரிபவள் எனும் பொருள்படும்படியாக அன்னை காமாக்ஷி இத்திருத்தலத்தில் அருள் சுரந்து வருவது விசேஷம்.

அன்னை காமாக்ஷி காஞ்சியில் பாலை வடிவில் (குழந்தையாக) உறைந்திருப்பதாக ஐதீகம். ஸ்ரீ காமாக்ஷி அம்மன் இத்தலத்தில், காரணம் (பிலாஹாசம்), பிம்பம் (காமகோடி காமாக்ஷி), சூக்ஷ்மம் (ஸ்ரீயந்திரம்) எனும் முப்பெரும் ஸ்வரூபமாக வீற்றிருக்கிறாள்.

ஆதி காமாக்ஷி, காமகோடி காமாக்ஷி, தபஸ் காமாக்ஷி என பல பெயர்களில் அருளும் ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ சாரதா நவராத்திரி மகோத்ஸவம் நாளை 15.10.2023 முதல் 24.10.2023 வரை மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நாட்களில் அன்னை காமாக்ஷி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளாள். மேலும், நவராத்திரி உத்ஸவத்தையொட்டி, பல்வேறு மலர்களைக் கொண்டு லட்சார்ச்சனையும், 1008 கன்யா பூஜையும் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி, தினமும் காலை 10.30 மணிக்கு நவாவரண பூஜையும் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்:
மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் நவராத்திரி அலங்காரங்கள்!
காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில் நவராத்திரி உத்ஸவம்!

ஸ்ரீ சாரதா நவராத்திரி உத்ஸவத்தை முன்னிட்டு பிரதி தினம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்களும், நவாவரண பூஜை, கன்யா பூஜை, ஸுவாஸினி பூஜை முதலியவைகளும், இரவில் ஸ்ரீ அம்பாளை கொலு மண்டபத்தில் எழுந்தருளச் செய்வித்து, சூரசம்ஹார உத்ஸவமும், சங்கீதக் கச்சேரிகளும், தீபாராதனையும் நடைபெறும். ஸ்ரீ தேவிக்கு முக்கிய நாளாகிய நவராத்திரி உத்ஸவத்தை முன்னிட்டு லக்ஷார்ச்சனை நடைபெறும்.

அனைத்து நாட்களிலும் அன்னை காமாக்ஷியை வழிபடுவது சிறப்பு என்றாலும், நவராத்திரி ஒன்பது நாட்களில் அம்பிகையை தரிசித்து வணங்குவது, முப்பெரும் தேவியரை வழிபடும் பலனோடு பல்வேறு நலன்களையும் சேர்ப்பதாகும். மேற்படி நவராத்திரி வைபவங்களில் கலந்து கொண்டு ஸ்ரீ அம்பாளை தரிசனம் செய்து ஸ்ரீ காமாக்ஷி அம்பாளின் பரிபூரண கிருபாகடாக்ஷத்துக்கு பாத்திரராகும்படியாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com