அதிசயங்கள் நிறைந்த காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில்!

காஞ்சி வரதராஜ பெருமாள்
காஞ்சி வரதராஜ பெருமாள்
Published on

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவையின்போது அலங்காரம் முடிந்து பெருமாள் புறப்படும் நேரத்தில் ஒரு வினாடி பொழுது திருக்குடைகளால் மறைப்பார்கள். இது இங்கு மட்டுமே நடைபெறும் வழக்கமாகும். இதற்கு, ‘ஒரு வினாடி தரிசனம்’ என்று பெயர். இதற்குக் காரணம் முற்காலத்தில் சோளிங்கர் நகரில் வாழ்ந்த தொட்டாச்சாரியார் என்ற விஷ்ணு பக்தர் காஞ்சியில் நடைபெறும் அனைத்து சேவைகளையும் தவறாது தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரால் ஒரு முறை காஞ்சிபுரம் கருட சேவைக்கு செல்ல முடியவில்லை. அதனால் மனம் வேதனையுற்றது. அவர் சோளிங்கரிலிருந்தபடியே பெருமாளை பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.

தனது பக்தனுக்கு பெருமாள் மனம் இறங்கி சோளிங்கரில் அவருக்குக் கருட தரிசனம் தந்தார். இதனை கருத்தில் கொண்டே இன்றும் கருட சேவை நடைபெறும்போது திருக்குடைகளால் ஒரு வினாடி பொழுது மறைக்கிறார்கள்.

ராபர்ட் கிளைவ் என்னும் ஆங்கில அதிகாரி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி உருவாகக் காரணமாக இருந்தவர். காஞ்சிபுரத்தில் ஒரு கருட சேவையின்போது வரதராஜ பெருமாள் ராபர்ட் கிளைவின் ஆணவத்தை  நீக்கி தனது பக்தனாக்கிய நிகழ்வு   மிகவும் சுவையானது.

ஒரு வருடம் வரதராஜ பெருமாள் கருடனில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருளிக்கொண்டு பவனி வரும்போது குதிரையில் வந்த ராபர்ட் கிளைவ் பவனியை நிறுத்துமாறு ஆணையிட்டான். அதற்கு பட்டர்கள், ‘வெயில் அதிகமாக உள்ளதால் பெருமாளுக்கு ஆகாது. அவர் உடனடியாக திருக்கோயிலுக்குத் திரும்ப வேண்டும்’ என்று பதில் அளித்தனர். இதைக் கேட்ட  ராபர்ட் கிளைவ் அதை எள்ளி நகையாடினான். ‘இது ஒரு சிலை. இதற்கு என்ன வெயில்’ என்று பரிகாசம் செய்தான்.

கோபம் கொண்ட ஒரு பட்டர் அவனிடமிருந்து ஒரு துணியைப் பெற்று பெருமானின் திருமேனியை ஒற்றி அவனிடம் தந்தார். ‘சொத சொத’ என்று பெருமாளின் வேர்வையால்  நனைந்த அந்தத் துணியைத் தொட்ட ராபர்ட் கிளைவ் மின்னல் தாக்கியது போல் உணர்ந்தான். அவன் மனம் மாறியது. அதைத் தொடர்ந்து அவன் பெருமாளின் பக்தனானான். பெருமாளுக்கு ஒரு விலை உயர்ந்த மகர கண்டியை சமர்ப்பணம் செய்து வணங்கினான். இன்றும் இந்த மகர கண்ணாடி பெருமாளுக்கு சிறப்பு நாட்களில் அணிவிக்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்:
வீட்டில் கரையான் பிரச்சனையை சமாளிக்கும் தந்திரங்கள்! 
காஞ்சி வரதராஜ பெருமாள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்க பல்லி வெள்ளி பல்லி தரிசனம் மற்றொரு சிறப்பு வாய்ந்ததாகும். கொங்கண தேசத்தில் சிருங்கிபேரர் என்பவருக்கு ஹேமன் மற்றும் சுக்லன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இருவரும் கௌதம முனிவரிடம் வேதம் கற்று வந்தனர். இவர்களின் அன்றாட வேலை என்னவென்றால் முனிவர் பூஜைக்கு தேவையான நீரும், யாகம் செய்ய குச்சிகளும் கொண்டு வந்து தருவதாகும்.

ஒரு சமயம் அவர்கள் இருவரும் கொண்டு வந்த நீரில் இரண்டு பல்லிகள் இருந்ததை முனிவர் கண்டார். இதனால் கோபம் அடைந்த முனிவர், இருவரையும் பல்லிகளாக மாறும்படி சாபமிட்டார். மகன்களும் தங்களது தவறினை உணர்ந்து மன்னிக்கும்படி வேண்டினர். முனிவரும் மனமிரங்கி, ‘நீங்கள் இருவரும் அத்திகிரி மலையில் உள்ள வரதராஜரை நோக்கி தவம் செய்யுங்கள். அவர் உங்களை காப்பாற்றுவார். சாப விமோசனமும் கொடுப்பார்’ என்று கூறினார்.

மகன்களும்  காஞ்சிபுரம் வந்து வரதராஜ பெருமாளை வழிபட்டனர். அவர்களின் பக்தியை மெச்சிய வரதராஜ பெருமாள் அவர்களுக்கு  சாப விமோசனம் அளித்தார். மேலும், ‘இருவரின் ஆத்மா வைகுண்டம் செல்லும் அதேநேரம் உங்களின் சரீரம் பஞ்ச உலோகங்களாக எனக்கு பின்புறம் இருக்கட்டும். என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்க பெறுவார்கள்’ என்றும் அருளினார். அதன்படி இந்த ஆலயத்தில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லி உருவங்கள் பஞ்ச உலோகங்களால் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தங்க முலாமும், மற்றொன்று வெள்ளி முலாமும் பூசப்பட்டுள்ளது. பக்தர்கள் அதைத் தொட்டு வணங்கிச் சென்றால் சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com