
‘குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் குடிகொண்டு இருப்பார்’ என்போம். ஆனால் குன்றையே (மலையை) குடைந்து அமையபெற்ற புண்ணிய தலமாக திருப்பரங்குன்றம் அமைந்து உள்ளது. முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருந்தபோதிலும் எந்த தலத்திலும் காணக்கிடைக்காத ஒன்றாக முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் சாந்தமாக தெய்வானை அம்பாளுடன் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்ககூடிய ஒரே தலமாக திருப்பரங்குன்றம் அமைந்து உள்ளது.
இந்த கோவிலின் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாள் திருமணக்கோலம், துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர், சத்யகிரீஸ்வரர் (சிவபெருமான்), பவளக்கனிவாய் பெருமாள் என்று தனித்தனியாக 5 சன்னதிகள் அமைய பெற்றுள்ளது. சிவபெருமான் சன்னதிக்கு எதிரே நந்தி வாகனம் அமைந்து இருக்கும். ஆனால் இங்கு சிவபெருமானுக்கு நேர் எதிராக பவளக்கனிவாய் பெருமாள் சன்னதி அமைந்து இருக்கிறது. இது இந்த கோவிலின் தனிச்சிறப்பாக போற்றப்படுகிறது.
முருகப்பெருமானின் வாகனமான மயிலும், சிவபெருமானின் வாகனமான நந்தியும், கற்பக விநாயகரின் வாகனமான மூஞ்சுறும் ஒரே சேராக கோவிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தில் அமைய பெற்று இருப்பதையும் தனிச்சிறப்பாக கருதுகிறார்கள். குடைவரை கோவிலாக இருப்பதால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் கிடையாது.
அதே சமயம் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் இங்கு "வேல்" மகிமை பெறுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மலைமேல் குமரருக்கு வேல் எடுத்து செல்லப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழாவில் சூரனை வதம் செய்ய முருகப்பெருமான் தன் தாயாரிடம் சக்திவேல் பெறக்கூடிய வேல் வாங்குதல் நடக்கிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடந்த முடிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 36 லட்சத்தில் 20 கோவிலில் திருப்பணிகள் நடந்தது. அதில் ரூ.90 லட்சத்தில் கம்பீரமான சுமார் 125 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்திற்கு பஞ்சவர்ணம் பூசப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. கோவிலின் கருவறையில் ‘கல்கம்’ என்று சொல்லக்கூடிய 55 வகையான மூலிகையை கொண்டு மருந்து சாத்தப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.
கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள சஷ்டி மண்டபம் மற்றும் வள்ளி தேவஸ்தான மண்டபம் வளாகத்தில் 75 குண்டங்கள் அமைத்து கடந்த 10-ந் தேதி யாக சாலை அமைக்கப்பட்டு முதல் கால வேள்விகள் தொடங்கியதுடன் இன்று அதிகாலை 3.30 மணிக்கு 8-ம் கால யாக வேள்விகள் நிறைவு பெற்றது.
இந்த யாகசாலை பூஜையில் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்து 150 சிவாச்சாரியர்கள் வந்து பூஜைகளை செய்தனர்.
அதிகாலையில் 8-ம் கால பூஜை முடிந்து அதிகாலை 4.30 மணியளவில் மேள தாளங்கள் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க யாகசாலையில் இருந்து தங்கம், வெள்ளி கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து முருகப்பெருமானின் தாய், தந்தையரான மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அருள்பார்வையில் பரிவார மூர்த்திகள் மற்றும் கோவிலின் கம்பீரமான 7 நிலை கொண்ட 125 அடி உயரமுள்ள ராஜகோபுரம் மற்றும் கோவர்த்தனாம்பிகை விமானம், விநாயகர் விமானம், பசுபதி ஈசுவரர் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின் போது ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா‘ என லட்சக்கணக்கான பக்தர்கள் கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட புனிதநீர், 10க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டன.
இதேபோல் கோவிலின் கருவறையில் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு மகா அபிஷேகம் நடபெற்றது. மேலும் கருவறையில் உள்ள துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய விக்ரகங்களுக்கும் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை பார்க்க மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்துள்ளனர். எங்கு நோக்கினும் மனித தலைகளாகவே தென்பட்டது. இதனால் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டது.