அசுரன் சூரபத்மனை முருகக் கடவுள் சம்ஹாரம் செய்யும் சம்பவமே கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா வருடந்தோறும் ஐப்பசி மாத அமாவாசையை அடுத்த (தீபாவளி) பிரதமை திதியன்று ஆரம்பிக்கிறது. இந்த நாள் முதல் ஆறு நாட்கள் வரை கந்தசஷ்டி விரதம் அனுசரிக்கப்படும். ஆறு நாட்கள் கழித்து சஷ்டி திதியன்று சூரசம்ஹாரம் நடைபெறும். சூரசம்ஹார பெருவிழாவை பற்றி கந்தபுராணத்தில், சைவ சித்தாந்தத்தில் குறிப்பிடப்படும் மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை என்பதன் குறியீடாக சூரபத்மன், சிங்கமுகன், தாராகாசுரன் ஆகிய அசுரர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். ஆறு நாட்கள் நடைபெறும் சூரசம்ஹாரத்தின் முடிவில் முருகன் மாமரமாக நின்ற சூரபத்மனை தனது சக்தி வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும் சேவலை கொடியாகவும், மயிலை வாகனமாகவும் ஏற்றுக் கொண்டார்.
பிரம்மதேவனின் மகனான காசிபன் கடுந்தவம் புரிந்து சிவனிடமிருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஆனால், ஒரு நாள் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரால் ஏவப்பட்ட ‘மாயை' என்னும் அரக்கப் பெண்ணிடம் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான். காசிபனுக்கும் மாயைக்கும் மனித உருவத்தில் சூரபத்மனும், சிங்கமுகம் கொண்ட சிங்காசுரனும், யானை முகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்னும் அசுர குணம் கொண்ட பிள்ளைகள் பிறந்தனர்.
இவர்களுள் சூரபத்மன் சர்வ லோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளைப் பெற எண்ணி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் அரசாளும் வரத்தையும், பெண்ணால் பிறக்காத ஒருவரால் அன்றி வேறு ஒரு சக்தியாலும் தன்னை மாய்க்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தின் பயனாக தன்னைப் போல பல அசுரர்களை உருவாக்கி அண்ட சராசரங்களையும் ஆண்டு வந்தான்.
சூரபத்மன் தான் பெற்ற வரத்தால் ஆணவம் மிகுந்து அதர்ம வழியில் ஆட்சிபுரிந்து இந்திரனின் மகனை சிறையில் அடைத்து தேவர்களையெல்லாம் துன்புறுத்தினான். உலகிலுள்ள எல்லா நல்லுயிர்களையுமே துன்பப்படுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தங்களுக்குத் தீங்கிழைக்கும் சூரபத்மனைப் பற்றி முறையிட்டனர்.
இவர்களைக் காக்க திருவுளம் கொண்ட சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு நெருப்புப் பொறிகளை உண்டாக்கினார். அதனை வாயு பகவான் சரவணப் பொய்கையில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்டிரிடம் வளர்ந்தனர். பார்வதி தேவி அவர்கள் ஆறு பேரையும் ஒருசேரத் தழுவியபோது அவர்கள் ஒரே குழந்தையாக ஆறு தலை பன்னிரண்டு கரங்களுடன் சண்முகன் ஆனான்.
சிக்கல் என்னும் ஊரில் பார்வதி தேவியிடமிருந்து சக்திவேலைப் பெற்ற சிங்காரவேலன் சூரபத்மனை போரில் அழித்தான். 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்று இதைச் சொல்கின்றனர். கந்தசஷ்டியின் ஐந்தாம் நாள் சிக்கலில் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. முதலில் மாயையே உருவான யானைமுகனையும், பின்னர் சிங்கமுகாசுரனையும் தொடர்ந்து, ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜயந்திநாதர் தமது சக்திவேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்கிறார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வரும் சூரபத்மனை சேவலும் மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார். இந்தப் போரில் வீரபாகு உள்ளிட்ட வீரர்கள் முருகனுக்கு உதவியாக இருந்தனர். முருகப்பெருமான் சூரபத்மனை அழித்த நாள்தான் வருடத்தில் ஒருமுறை சூரசம்ஹாரத் திருவிழா என்று கொண்டாடப்படுகிறது. மொத்தத்தில், சூரபத்மன் என்னும் இந்த அரக்கனை அழிக்கவே முருகனின் அவதாரம் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் போர் மூன்று இடங்களில், தரை வழிப்போராக திருப்பரங்குன்றத்திலும், விண்வழிப் போராக திருப்போரூரிலும் மற்றும் கடல் வழிப்போராக திருச்செந்தூரிலும் நடைபெற்றதாம்.
இந்த கந்தசஷ்டி திருவிழா ஆறு நாட்களில் முருக பக்தர்கள் பல்வேறு வகையில் விரதமிருந்து இறைவனை முழுவதுமாக சரணடைந்து பல்வேறு கோரிக்கைகளை மனதில் வைத்து வழிபடுவார்கள். முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளிலும் கந்தசஷ்டி கொண்டாடப்பட்டாலும், திருச்செந்தூரில், அது சூரசம்ஹாரம் நடந்த இடம் என்பதால், கந்தசஷ்டி விழா இங்கு மிக விமரிசையாக வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. சஷ்டி திதியான இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தன்று நாமும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு எல்லா நன்மைகளையும் அடைவோம்.

