கண்விழித்து பூஜித்தால் கைமேல் பலன் தரும் சிவராத்திரி விரதம்!

Kanvizhithu Poojithaal Kaimel Palan tharum Sivarathri Viratham!
Kanvizhithu Poojithaal Kaimel Palan tharum Sivarathri Viratham!https://www.youtube.com

மாதம்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் வரும் சிவராத்திரியை மகாசிவராத்திரி என்று போற்றி வழிபடுகிறோம். இது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவபெருமானுக்குரிய ஒரு சிறந்த விரதமாகும்.  இந்த விரதம் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் அனுசரிக்கப்படுகிறது. திரயோதசி, சதுர்த்தசி ஆகிய இரண்டு திதிகளுமே விசேஷமானவை.

திரயோதசி அன்னை பார்வதியின் வடிவம் என்றும், சதுர்த்தசி சிவபெருமானின் வடிவம் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. மகாபிரளய காலத்துக்குப் பின் சிவனுள் சக்தி ஒடுங்கி நின்ற தினமே மகாசிவராத்திரி. பிரபஞ்சத்தின் சக்தியாகிய அன்னையும் பிரபஞ்ச பெருவெளியாகிய ஐயனும் ஆகிய இந்த இரண்டு மகாசக்திகளும் இணைந்து அருளும் தினம்தான் சிவராத்திரி என்பதால் இந்த தினம் மகா சிறப்பு வாய்ந்தது.

இந்த உலகில் நன்மை, தீமைகளைத் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் கிடைக்கும் பலன் ஒன்றுதான். சிவராத்திரி நமக்குச் சொல்லும் பாடம் இதுதான். இதற்கு உதாரணமாக புராணத்தில் கதை ஒன்றிருக்கிறது. குரங்கு ஒன்று ஒரு வில்வ மரத்தின் மீதமர்ந்து இரவு முழுவதும் இலைகளைப் பறித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தது. இலைகள் விழுந்த இடமோ லிங்கத் திருமேனி! அன்றைய நாளோ சிவராத்திரி. சிவராத்திரி இரவில் அறியாமல் செய்த வில்வார்ச்சனைக்கு பலனாய் இறைவன் குரங்கை மறுபிறவியில் முசுகுந்த சக்ரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார்.

சிவராத்திரிக்கென்றே மற்றொரு பிரசித்தி பெற்ற கதையும் உண்டு.  மகாசிவராத்திரி அன்று வியாதன் என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். நாள் முழுவதும் அலைந்தும் ஒரு மிருகம் கூட அவன் கண்ணுக்குத் தென்படவில்லை. அப்பொழுது திடீரென்று ஒரு புலி அவனைத் துரத்திக் கொண்டு வர, அவன் பயந்து போய் அருகிலிருந்த ஒரு மரத்தின் மீது ஏறி ஒரு உயரமான கிளையில் அமர்ந்து கொண்டான். புலி கீழேயே நின்றிருந்தது. சற்று நேரத்தில் வேடனுக்குத் தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டு வந்தது. கீழே விழுந்து விடுவோமோ என்று பயமாக இருந்தது. தூங்காமல் விழிப்போடு இருக்க அந்த மரத்திலிருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டான். 

அந்த மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்ததோ, தான் பறித்துப் போட்டது வில்வ இலைகள் என்பதோ அவனுக்குத் தெரியாது. இரவு முழுவதும் தூங்காமல் வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்த அந்த வேடனுக்கு புலி உருவத்தில் மரத்தடியில் நின்றிருந்த சிவபெருமான் காட்சியளித்ததோடு, அவனுக்கு மோட்சமும் அளித்தார். அடுத்தப் பிறவியில் அவன் இஷ்வாஹு குலத்தில் சித்ரபானு என்னும் சக்ரவர்த்தியாகப் பிறந்தான். ஒன்றும் அறியாமலேயே சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்ததன் பயன்தான் அது என்று அஷ்டவக்ர மகரிஷி சித்ரபானுவிடம் கூறினார்.

https://www.youtube.com

நான்கு வேதங்களில் நடுநாயகமாகத் திகழும் வேத பாகம், யஜுர்வேத ஸ்ரீ ருத்ரம். அந்த ஸ்ரீ ருத்ரத்தின் மத்தியில் இருக்கும் சொல், 'சிவ' என்பது.  எல்லோராலும் எளிதில் சொல்லக்கூடிய இந்த, ‘சிவ’ என்னும் வார்த்தையைச் சொல்ல சகல வேதங்களையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவராத்திரி அனைத்து சிவன் கோயில்களிலும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மிகவும் விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது. பௌர்ணமி கிரிவலம் போல் சிவராத்திரி அன்றிரவு செய்யப்படும் கிரிவலமும் திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பௌர்ணமியை போல லட்சக்கணக்கில் இல்லாமல் சில ஆயிரம் பேர்கள் மட்டுமே அக்கம் பக்க ஊர்களிலிருந்து வந்து இன்று கிரிவலம் செய்வதை பார்க்கலாம். சிவராத்திரி இரவு கண் விழித்து ஈசனை தொழுவார்கள். உறங்காமல் இருப்பது என்றால் ஆன்மா விழித்திருப்பது என்று பொருள். அன்றிரவு முழுவதும் மலையை வலம் வந்தால் கண் விழித்த பலனும் உண்டு, இறைவனை இடைவிடாது தொடர்ந்து தொழுத பலனும் உண்டு.

இதையும் படியுங்கள்:
மகா சிவராத்திரி - ஒரே நாளில் வழிபட வேண்டிய 4 கோவில்கள்!
Kanvizhithu Poojithaal Kaimel Palan tharum Sivarathri Viratham!

சிவராத்திரி அன்று விரதம் அனுசரிப்பவர்கள், அன்று ஒரு நாள் பழங்கள் மட்டும் சாப்பிட்டு இரவு தூங்காமல் தேவாரம், சிவபுராணம், திருவாசகம், பெரிய புராணம் ஆகியவற்றை படிப்பதோடு, சிவன் தோத்திரப் பாடல்களைப் பாடலாம்.

இன்று (மார்ச் 8ம்தேதி, வெள்ளிக்கிழமை) மகாசிவராத்திரி விரதம் அனுசரிக்கப்படுகிறது. முடிந்தவர்கள் வீட்டுக்கு அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று அங்கே சிவபெருமானுக்கு நான்கு ஜாமங்களிலும் நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளை கண்குளிர தரிசித்து ஈசனின் அருளைப் பெறலாம்.

சிவராத்திரி விரதம் இருந்து, 'சிவாய நம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை' என்ற வாக்கிற்கேற்ப சிவபெருமானை வழிபட்டால், வாழ்வில் செல்வம், புகழ், உயர்ந்த வாழ்க்கை, குடும்ப ஒற்றுமை என்று அனைத்து வளங்களையும் ஈசனின் அருளால் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com