
சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதைப் பற்றி படித்திருப்போம் கேட்டிருப்போம் அத்தலங்களுக்கு நேரில் சென்று தரிசித்திருப்போம். ஆனால், பெருமாள் சுயம்புவாக தோன்றிய காரமடை ரங்கநாதரைப் பற்றித் தெரியுமா? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ஒருமுறை கருடாழ்வாருக்கு திருமால் - மகாலக்ஷ்மியின் திருமணக் கோலத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அவருடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக காரமடையில் பெருமாள் தனது திருமணக் கோலத்தை காட்டியருளினார். கருடாள்வாருக்கு காட்சிதந்த பெருமாள், காரமடையிலேயே சுயம்பு மூர்த்தியாக ஏழுந்தருளினார்.
முற்காலத்தில் காரைமடை பகுதியில் அதிகமான காரை செடிகள் இருக்கும். அதனால் இப்பகுதிக்கு ‘காரைவனம்’ என்ற பெயர் வந்தது. அதுவே நாளடைவில் மருவி ‘காரைமடை’ என்றானது. தொட்டியன் ஒருவன் தன் மாடுகளை மேய்ச்சலுக்காக இப்பகுதிக்கு கூட்டிக்கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தான். மாலை மாடுகளோடு வீடு திரும்பும் போது ஒரு மாட்டினுடைய மடியில் மட்டும் பால் இல்லாததைப் பார்க்கிறான். இது தினம்தோறும் நடந்துக் கொண்டேயிருக்கிறது.
ஒருநாள் அவன் மாட்டின் பின் சென்றுப் பார்க்கிறான். அப்போது அந்த காராம் பசு ஒரு புதருக்கு கீழ் நின்று தன்னிச்சையாக பால் பொழிய ஆரம்பிக்கிறது. ‘அந்த புதருக்குள் என்ன இருக்கிறது?’ என்று பார்ப்பதற்காக தொட்டியான் அரிவாளால் அந்த புதரை வெட்டுகிறான். அப்போது புதருக்குள் இருந்து ரத்தம் பீரிட்டு வருகிறது. அதைப் பார்த்த தொட்டியான் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுகிறான்.
இரவு நேரம் ஆகியும் தொட்டியான் ஊருக்கு வரவில்லை என்று ஊர் மக்கள் தொட்டியானைத் தேடி வருகிறார்கள். அப்போது தொட்டியான் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறான். பக்கத்திலேயே புதரிலிருந்து ரத்தம் வந்துக்கொண்டிருப்பதை காண்கிறார்கள். அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு அருள் வந்து, ‘பெருமாள் சுயம்பு மூர்த்தியாக இங்கு அருள்பாலிக்கிறார்’ என்று சொல்கிறார்.
அந்த இடத்தை மக்கள் சுத்தம் செய்துப் பார்க்கிறார்கள். அங்கே அரங்கநாதர் சதுர வடிவமாக சுயம்பு மூர்த்தியாக காட்சித் தந்தார். மக்கள் மகிழ்ச்சியில் ஆடிப்பாடுகிறார்கள். அந்த இடத்திலேயே பெருமாளுக்கு கோவில் கட்டி வழிப்படுகிறார்கள். இக்கோவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு சென்று பெருமாளின் அருளைப் பெறுவதை நன்மையைத் தரும்.