
சென்னை மயிலையில் இருக்கும் கற்பகாம்பாள் நாம் கேட்ட வரங்கள் மட்டுமல்லாமல், கேட்க மறந்ததையும் நமக்கு தருவாள். இப்பதிவில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில் உருவான கதையைப் பற்றி பார்ப்போம்.
ஒருமுறை கைலாயத்தில் பார்வதிதேவிக்கு சிவபெருமான் நமசிவாய மந்திரத்தின் பொருளை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரின் லீலைப்படி அவரின் அருகில் மயில் ஒன்று தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. உடனே பார்வதி தேவியின் கவனம் அந்த மயிலின் மீது போகிறது. இதைப் பார்த்த சிவபெருமானுக்கு கோபம் வந்து விடுகிறது.
'நீ எதைப் பார்த்தாயோ அதாகவே மாறி பூலோகம் செல்வாய்!' என்று சாபம் கொடுத்து விடுகிறார். பார்வதிதேவி சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். அதற்கு சிவனோ, 'பூலோகம் சென்று என்னை நோக்கி தவம் புரிந்து மீண்டும் என்னை வந்து சேர்வாய்!' என்று சாபவிமோசனம் தருகிறார்.
பார்வதிதேவியும் மயில் வடிவத்தில் பூலோகம் வந்து, மயிலாப்பூரில் புன்னை மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தை பல காலம் பூஜித்து, சிவனை நோக்கி தவம் புரிகிறார். ஒருவழியாக சிவபெருமானும் பங்குனி உத்திரம் அன்று மயில் வடிவத்தில் இருந்த பார்வதிதேவிக்கு காட்சித்தந்து சாபவிமோசனம் தந்து தன்னுடனே சேர்த்துக் கொண்டார்.
அதனால் தான் இந்த ஊருக்கு 'மயிலாப்பூர்' என்ற பெயரும் வந்தது. பார்வதிதேவி சிவப்பெருமானை நோக்கி மயில் வடிவத்தில் தவமிருந்ததால் இத்தலத்திற்கு ‘திருமயிலை’ என்ற பெயரும் உண்டு.
நாம் கேட்ட வரங்களை எல்லாம் தரும் கற்பக மரமாய் அம்பிகை இருப்பதால் இந்த அம்மனுக்கு 'கற்பகாம்பிகை' என்ற பெயர் வந்தது. 'கயிலையே மயிலை, மயிலையே கயிலை' என்று சிறப்பித்து கூறப்படும் இடம் தான் இத்திருத்தலமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நீங்களும் வாழ்வில் ஒருமுறையாது சென்று வருவது நன்மையைத் தரும்.