கார்த்திகை தீபத் திருவிழா: மும்மூர்த்திகளை வழிபடும் ஆன்மீக ரகசியங்கள்!

கார்த்திகை தீபத்தின்போது சிவபெருமான், முருகன் மற்றும் விஷ்ணு எவ்வாறு வழிபடப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
கார்த்திகை தீபம் - Karthigai Deepam
கார்த்திகை தீபம் - Karthigai Deepam
மும்பை மீனலதா

ஆர்.மீனலதா பன்முகத் திறமை கொண்ட படைப்பாளி. மும்பையைச் சேர்ந்த சிறந்த தமிழ் எழுத்தாளர். விளையாட்டு, இசை, ஆகியவைகளில் ஆர்வமுடையவர். நாடகக் கலைஞர், நாடக ஆசிரியர் மற்றும் இயக்குநர், பல போட்டிகளுக்கு நடுவர்.கல்கி குழுமத்துடன் 25 ஆண்டுகள் தொடர்பு. கல்கி குழும இணைய தளத்துக்கு பல்வேறு தலைப்புக்களில், கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறார்.

Updated on: 

கார்த்திகை தீபவிழாவின்போது மூவருக்கும் வழிபாடு நடைபெறுகிறது. யாருக்கெல்லாம்..? எவ்வாறு..? பார்க்கலாமா..?

கார்த்திகை தீபத்தன்று, சிவ பக்தர்கள், சிவனை ஜோதி வடிவில் வழிபடுகின்றனர்.

முருக பக்தர்கள், பரணி தீபம் ஏற்றி முருகக்கடவுளை வழிபடுகின்றனர்.

வைணவ பக்தர்கள், விஷ்ணு தீபம் ஏற்றி விஷ்ணுவை வழிபடுகின்றனர்.

சிவபெருமான் - கார்த்திகை ஜோதி வழிபாடு

ஒரு சமயம், பிரம்ம தேவனுக்கும், விஷ்ணுவிற்கும் நடுவே யார் பெரியவர் என்கிற போட்டி எழுந்தது. அப்போது  சிவபெருமான், தன்னுடைய அடி அல்லது முடியை முதலில் காண்பவர் பெரியவர் எனத் தெரிவிக்கையில், இறைவனின் முடியைத்தேடி, பிரம்மதேவன் அன்னப் பறவை வடிவம் எடுத்து வானில் பறந்து சென்றார். விஷ்ணுவோ இறைவனின் மலரடியைக்காண, வராக அவதாரமெடுத்துப் பாதாள உலகம் சென்றார்.

பிரம்மா- விஷ்ணு இருவராலும் அடி - முடியைக்காண இயலாதபோது, இறைவன் ஜோதி வடிவமாக காட்சியளித்தார். அந்த இடமே திருவண்ணாமலை எனப் புராண வரலாறு கூறுகிறது. கல்விச் செல்வமளிக்கும் பிரம்மா, செல்வத்தை அளிக்கும் விஷ்ணு ஆகிய இருவராலும், சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதன் உட்பொருள், கல்வி மற்றும் செல்வச்செருக்கு கொண்டவர்களால், பரம்பொருளான இறைவனை உணரமுடியாது என்பதாகும்.

சிவபெருமான் ஜோதி வடிவாக நின்ற நிகழ்வினை நினைவு கூறும் வகையில், வருடந் தோறும் கார்த்திகைத் தீபத் திருவிழா திருவண்ணாமலையில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பெரிய செப்புக் கொப்பரையில், கிலோக் கணக்கில் நெய், துணி, கற்பூரம் கொண்டு மலை உச்சியில் அகண்ட தீபம் ஏற்றப் படுகிறது.  திருவண்ணாமலை நகர வீடுகளில் அதே நேரத்தில் தீபம் ஏற்றப்படுகின்றன.

முருகப்பெருமான் - கார்த்திகை தீப வழிபாடு

முருகப்பெருமானை, ஆறு கார்த்திகைப் பெண்கள் அருமையாக வளர்த்த கதை அனைவருக்கும் தெரியும். அந்த கார்த்திகைப் பெண்களின் சிறப்பான சேவையைப் பாராட்டும் வகையில், "உங்களுக்கு உகந்த இந்த நாளில், முருகப் பெருமானைப் போற்றி வழிபடுபவர்களுக்கு, அனைத்து நன்மைகளும் கிடைக்கும்" என்று சிவபெருமான் அருள்புரிந்தார்.

கார்த்திகை மாதம் முழுவதும் மாலை நேரத்தில், வீட்டு வாசலில் விளக்கேற்றி வைப்பது வழக்கமாக உள்ளது. கார்த்திகைத் திருநாளில், முருகப் பெருமானை துதித்து விரதமிருப்பது நல்ல பலனை அளிக்கும்.

இதையும் படியுங்கள்:
ஏன் சிவனுக்கு வில்வம் மட்டும் இவ்வளவு ஸ்பெஷல்? இதோ அதன் பின்னணி!
கார்த்திகை தீபம் - Karthigai Deepam

பெருமாள் - விஷ்ணு* கார்த்திகை வழிபாடு

திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி வடிவமாக அமர்ந்திருப்பதைப்போல, பெருமாள் ஜோதி வடிவமாக காஞ்சிபுரத்தில் தீபப் பிரகாசர் கோவிலில் எழுந்தருளி உள்ளார். ஒரு சமயம் பெருமாள் பிரம்ம யாகம் செய்கையில், சரஸ்வதி சிறிது இடைஞ்சலை ஏற்படுத்தினார். அச்சமயம், பெருமாள் ஜோதி வடிவில் காணப்பட்டதால், விளக்கொளிப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார்.

வைணவ பக்தர்கள், கார்த்திகையன்று விளக்கொளிப் பெருமாளுக்கு, விளக்கேற்றிக் கொண்டாடுகின்றனர். இது பெருமாள் கார்த்திகையென கூறப்படுகிறது.

கார்த்திகை தீபம் - Karthigai Deepam
கார்த்திகை தீபம் - Karthigai Deepam

உபரி தகவல்கள்;

சிவபெருமானை ஜோதி வடிவாக பார்க்கும் வண்ணம் சொக்கப்பானை கொளுத்தப்படுகிறது.

 சிவனைக் குறிக்கும் சொல்லாகிய சொக்கனை நெருப்பில் பார்ப்பதுதான் சொக்கப்பானை.

கார்த்திகை தீபத்தன்று, ஆலயங்களில் பனை ஓலை, பனைமரம், சுளுந்து ஆகியவைகளை நட்டு, அவைகளுக்கு நடுவே சிறு பூச்சட்டி வெடிகளை வைத்துச் சொக்கப் பானை கொளுத்துகையில் வண்ணமயமாக எரியும்.

வீடுகளிலும் சுளுந்து குச்சிகள் வாங்குவது வழக்கம். வீட்டிலிருந்து சிறிது சுளுந்துக் குச்சிகளை எடுத்துக் கொண்டு கோவிலில் எரியவிடப்படும் சொக்கப் பானையில் இருந்து கொளுத்தி எடுத்து வந்து, வீட்டிலுள்ள கார்த்திகை தீபத்தை ஏற்றுவது கிராமப்புற வழக்கம்.(மலரும் நினைவுகளாகிய இதனை, நானும் சிறு வயதில் செய்து இருக்கிறேன்.)

கார்த்திகை தீபமேற்றுகையில் கூறப்படும் ஸ்லோகம் 

"கீடா: பதங்கா மசகாச்சா வ்ருஷா:

ஜலே ஸ்தலே யேநிவ ஸந்தி ஜீவா:

 தருஷ்ட்வா ப்ரதீபம் நச ஜன்ம பாஜா :

பவந்தி நித்யம் ச்வபசாஹி விப்ரா :

இதன் பொருள் -

 "நீர் மற்றும் நிலத்தில் வாழ்கின்ற புழு, பறவை, கொசு போன்றவைகள் கார்த்திகை தீபம் கண்டால் மறு பிறவி எடுப்பதில்லை. நாயைக் கொன்று சாப்பிடும் புலையரும் கூட, கார்த்திகை தீபம் காண உயர்ந்தோர் ஆகின்றனர்" என்பதாகும்.

இத்தகைய பல சிறப்புக்களைக்கொண்ட கார்த்திகைத் திருநாளை, கார்த்திகை மாதத்தை, தீபம் ஏற்றிக் கொண்டாடுவோம்.

இதையும் படியுங்கள்:
சிவனும் சக்தியும் ஊடல் கொண்ட கதை: திருவண்ணாமலை திருவூடல் விழாவின் பின்னணி என்ன?
கார்த்திகை தீபம் - Karthigai Deepam