

காஞ்சிபுரம் நகரத்தில் பழைமையான நூற்றியெட்டு சிவாலயங்கள் அமைந்திருப்பது தனிப்பெரும் சிறப்பாகும். இதில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ள ஒரு பழைமையான திருக்கோயில் ‘கச்சபேசம்’ என அழைக்கப்படும் அருள்மிகு சுத்தாம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோயில்.
திருமால் ஆமை வடிவத்தில் ஈசனை வழிபட்ட காரணத்தினால் இத்தலம் ‘கச்சபேசம்’ என அழைக்கப்படுகிறது. ஈசன் கச்சபேஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருளுகின்றார். வடக்கு திசை நோக்கிய அமைந்த ஏழு நிலை ராஜகோபுரம் மற்றும் ஒரே கோயிலுக்குள் இரண்டு சிவாலயங்களை உள்ளடங்கிய பெருமையும், சூரியன் வழிபட்ட தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.
காஞ்சிபுரத்தில் வரதராஜப்பெருமாள் கோயிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ‘அத்திவரதர் வைபவம்’ உலகப்புகழ் பெற்ற ஒன்றாகும். அதுபோல, கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் ‘கடைஞாயிறு விழா’ மிகவும் பிரத்தியேகமானது மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு விழாவாகும்.
எந்த ஒரு தமிழ் மாதத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு கார்த்திகை மாதத்திற்கு உண்டு. பொதுவாக, ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு குறிப்பிட்ட மாதம் உகந்ததாகத் திகழ்கிறது. ஆனால், கார்த்திகை மாதமானது ஈசன், முருகப்பெருமான், ஐயப்பன், விநாயகர் என அனைத்துக் கடவுள்களுக்கும் உகந்த ஒரு புனிதமான மாதமாக விளங்குகிறது.
கார்த்திகை மாதங்களில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைஞாயிறு விழா காஞ்சி கச்சபேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வருகிறது. இந்த கடைஞாயிறு விழா காஞ்சி கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் மட்டுமே நடைபெறுவது சிறப்பு.
பச்சரிசி மாவு மற்றும் வெல்லம் இரண்டையும் கலந்து அதில் அகல் விளக்கு செய்து நெய் தீபம் ஏற்றி அதை ஒரு மண் சட்டியில் வைத்து தலையில் ஏந்தியபடி கோயிலுக்குள் பக்தர்கள் வலம் வரும் விழாவே கடைஞாயிறு விழா என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தைத் தவிர வேறெந்த திருத்தலத்திலும் இந்த விழா நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஞாயிறுகளில் மண்டை விளக்கு ஏற்றி திருக்கோயிலை வலம் வந்தால் தலை மற்றும் காது தொடர்பான நோய்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும், திருமணத் தடைகள் நீங்க, குழந்தை வரம் கிடைக்க, கடன் தொல்லைகள் அகல பக்தர்கள் வேண்டுதல்களை சமர்ப்பித்து தமது வேண்டுதல்கள் நிறைவேறியதும் இத்தலத்திற்கு வந்து மண்டை விளக்கு ஏற்றி திருக்கோயிலை வலம் வந்து கடைஞாயிறு விழா நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
குறிப்பாக, தலை சம்பந்தமான நோய்கள் நீங்க வேண்டும் என்பதற்காகவே பக்தர்கள் இந்த வேண்டுதலை மேற்கொள்ளுகிறார்கள். பக்தர்கள் ஒரு வருடம் அல்லது தொடர்ந்து மூன்று வருடம் இந்த நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். சில பக்தர்கள் ஒரே ஆண்டில் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்திற்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகையில் நவம்பர் 23, டிசம்பர் 7, 14 தேதிகளில் ஞாயிறுகடை விழா காஞ்சி கச்சபேஸ்வரர் கோயிலில் விமரிசையாக நடைபெறுகிறது.