

தமிழ் மாதங்கள் தோறும் 15 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாறி மாறி வருகின்றன. கார்த்திகை மாதம் பல்வேறு ஆன்மிக சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. ஆனாலும், கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருநாள் மிகவும் விசேஷம். சிவபெருமான் அடி, முடி காண முடியாத அருட்பெருஞ்சோதியாக பிரம்மா மற்றும் மகாவிஷ்ணுவுக்கு காட்சி தந்த திருநாள். இந்நாளில் மலை மீது ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க புண்ணியங்கள் சேரும்.
நெருப்பு சொரூபமாகக் காட்சி தரும் இறைவன் ஈசனை இத்திருநாளில் கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பு. மற்ற தமிழ் மாதங்களில் வரும் பௌர்ணமியை விட கார்த்திகை மாத பௌர்ணமி அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முப்பத்து முக்கோடி முனிவர்களும் தேவர்களும் இன்று திருவண்ணாமலையை கிரிவலம் வருவதாக ஐதீகம்.
சக்தி அதிகம் கொண்ட பௌர்ணமி நாளில் இறைவன் குடியிருக்கும் மலையை பக்தியுடன் சுற்றி வரும் கிரிவலம் நன்மைகளைத் தரும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிரிவலம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது உலகப் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்தான். பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்கும் சிறப்பு கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கோயிலையொட்டி அமைந்துள்ள மலையைச் சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
திருவண்ணாமலை கோயில் பல்வேறு புராண வரலாறு மற்றும் யோகிகள் வாழ்ந்த சிறப்புகளுக்குப் பெயர் பெற்றிருந்தாலும், இந்த மலையை மக்கள் முக்கண் முதல்வனாக வணங்கப்படும் சிவனின் அம்சமாக எண்ணி வழிபடுவதுதான் சிறப்பு. காரணம், லிங்கமே இங்கு மலையாக அமைந்திருப்பதாக ஐதீகம். இதனால்தான் நம் முன்னோரும் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இப்படி சிறப்பு மிக்க திருவண்ணாமலையை சுற்றி வருவதை ஈஸ்வரனை சுற்றி வருவதாகவே எண்ணி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொள்கின்றனர்.
கிரிவலம் செல்வதால் கால்களில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு, களைப்பு நீங்கி, உடல் ஆரோக்கியம் வலு பெறுகிறது. மேலும், வேண்டுதல்கள் மற்றும் இறை நம்பிக்கை மூலம் கிரிவலம் செல்வதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து நினைத்தது அனைத்தும் நிறைவேறும். மன நலம், உடல் நலம் இரண்டும் தரும் கிரிவலத்தை கார்த்திகை தீபத் திருநாளில் வாய்ப்பிருக்கும் அனைவரும் மேற்கொண்டு ஈசன் அருள் பெறலாம்.