சுவாமி ஐயப்பன் பயன்படுத்திய 18 ஆயுதங்களும் 18 படிகள் ஆனது எப்படி?

Swamy Ayyappa Temple Padi Poojai
Swamy Ayyappa Temple Padi Poojai
Published on

கார்த்திகை மாதம் மாலை அணிந்து, நேர்த்தியாக விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் 18 படிகள் ஏறி தரிசனம் செய்வார்கள். சபரிமலையில் நடைபெறும் படி பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. 18 என்ற எண்ணுக்கு எப்போதும் வரலாற்று சிறப்பு உண்டு. பாரதப் போர் நடைபெற்றது 18 நாட்கள், இராமாயணப் போர் நடைபெற்றது 18 மாதங்கள். தேவ அசுரப் போர் நடைபெற்றது 18 ஆண்டுகள். பகவத் கீதை அத்தியாயங்கள் 18, சபரி மலையைச் சுற்றியுள்ள மலைகள் 18 என, 18 என்ற எண் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயில் என்றாலே பக்தர்களின் எண்ணத்தில் முதலில் தோன்றுவது 18 படிகள்தான். விரதம் இருந்து, இருமுடி சுமந்து பக்தர்கள் ஐயப்பனை பதினெட்டு படிகளும் ஏறிச் சென்று தரிசிப்பது மிகவும் சிறப்பான ஒன்று. இதற்காக ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் இருந்து ஐயப்பனை தரிசிப்பார்கள். சபரிமலை கோயிலில் உள்ள 18 படிகளும் தெய்வம்சம் நிறைந்தவை. இங்கு நடைபெறும் படி பூஜையும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

இதையும் படியுங்கள்:
அசுரனின் உடலே ரத்தினமான அதிசயம்: கருட புராணம் சொல்லும் அதிர வைக்கும் உண்மை!
Swamy Ayyappa Temple Padi Poojai

சுவாமி ஐயப்பன் கொடிய அரக்கியான மகிஷியை வதம் செய்தபோது பயன்படுத்திய ஆயுதங்கள் 18. அவை: வில், வாள், வேல், கதை, அங்குசம், பரசு, பிந்திபாவம், பரிசை, குந்தகம், ஈட்டி, கைவாள், சுக்குமாந்தடி, கடுத்திவை, பாசம், சக்கரம், ஹலம், மழுக், முஸல என 18 வகை ஆயுதங்களும் 18 படிகளாக அமையப்பெற்றன என்பது ஐதீகம். இந்த 18 படிகளும் ஐயப்பனின் திருநாமங்களால் அழைக்கப்படுகின்றன. இனி, ஒன்று முதல் 18 வரை ஐயப்பனின் திருநாமங்களைக் காண்போம்.

1. குளத்தூர் பாலன், 2. ஆரியங்காவு அனந்த ரூபன், 3. எரிமேலி ஏழைப்பங்காளன், 4. ஐந்துமலைத் தேவன், 5. ஐங்கரன் சோதரன், 6. கலியுக வரதன், 7. கருணாகரதேவன், 8. சத்திய பரிபாலகன், 9. சற்குணசீலன், 10. சபரிமலை வாசன், 11. வீரமணிகண்டன், 12. விண்ணவர் தேவன், 13. மோகினி பாலன், 14. சாந்த ஸ்வரூபன், 15. சற்குணநாதன், 16. நற்குணக் கொழுந்தன், 17. உள்ளத்தமர்வோன், 18. ஸ்ரீ ஐயப்பன் ஆகியவையாகும். மேலும். 18 படிகளை இந்திரியங்கள் 5, புலன்கள் 5, கோசங்கள் 5, குணங்கள் 3 என்றும் கூறுவர்.

இதையும் படியுங்கள்:
தூங்குவதற்கு முன்பு தலையணை கீழ் இந்த மங்கலப் பொருட்களை வைத்தால் வாழ்க்கை தரம் மாறும்!
Swamy Ayyappa Temple Padi Poojai

இந்திரியங்கள் ஐந்து: கண், காது, மூக்கு, நாக்கு, கை கால்கள் என 5 இந்திரியங்களை ‘பஞ்சேந்திரியம்’ என்று கூறுவர்.

ஐம்புலன்கள் ஐந்து: பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல் என ஐந்து புலன்களை ‘ஐம்புலன்கள்’ என்று அழைப்பர்.

கோசங்கள் ஐந்து: அன்னமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணாமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம் என கோசங்கள் ஐந்தை ‘பஞ்ச கோசங்கள்’ என்று கூறுவர்.

குணங்கள் மூன்று: சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் மூன்றையும் ‘த்ரி குணங்கள்’ என்று அழைப்பர். இந்த பதினெட்டையும் கட்டுப்படுத்தி வாழ சபரிமலையின் 18 படிகளை ஏற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
திருவண்ணாமலை மகா தீபத்தின்போது மலையின் உள்ளே கேட்கும் சத்தத்தின் ரகசியம்!
Swamy Ayyappa Temple Padi Poojai

சபரிமலை படி பூஜையின் சிறப்புகள்: சபரிமலையில் படி பூஜை மிகவும் விசேஷம். சிறப்பான முறையில் படி பூஜை செய்யப்படுகிறது. படி பூஜை நடைபெறும் சமயத்தில் 18 படிகளையும் பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றிற்கு கீழே 18 படி ஏறுமிடத்தில் பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்களை வைத்து படி பூஜை செய்வார். 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் செய்து நீராஞ்சன தீபம் காட்டப்படும். நைவேத்தியம் செய்து தீபாராதனை காண்பித்ததும் தந்திரியும், மேல் சாந்தியும் படியேறிச் சென்று சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணை பாயசம் நைவேத்தியம் செய்து தீபாராதனை நடைபெறும்.

சபரிமலை 18 படிகளும் ஒரே கல்லினால் ஆனவை. தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம் போன்ற பஞ்சலோகத்தினால் தகடுகள் செய்து படிகளின் மேல் அமைத்துள்ளனர். 18 படிகளில் இருமுடிக் கட்டு இல்லாமல் படியேறி வர சிலருக்கு மட்டுமே உரிமை உண்டு. அவர்கள் பந்தள ராஜ குடும்பத்தினர், தந்திரிகள், திருவாபரண பெட்டி சுமந்து வருபவர்கள், படி பூஜையின்பொழுது மேல்சாந்தி, தந்திரி, கீழ்சாந்தி போன்றவர்கள் இருமுடிக் கட்டு இல்லாமல் படியேறி வர உரிமை உள்ளவர்கள்.

கே.எஸ்.கிருஷ்ணவேணி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com