காசி மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கால பைரவர் சன்னிதிக்கு தனிச் சிறப்பு உண்டு. காலபைரவர் காசி நகரத்தின் சேனாதிபதியாக விளங்குகிறார். காசியில் இறந்தவர்களுக்கு எமபயம் கிடையாது. ஏனெனில், இத்தலத்தில் இறப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் எமனுக்குக் கிடையாது.
பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி பிரம்மஹத்தி தோஷத்திற்கு பைரவர் ஆளாகி, முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்தபோது சிவபெருமான் காட்சி தந்து பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, காசி மாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள்புரிந்தார். இன்றும் காசி மாநகரம் பைரவர் ஆட்சி செய்யும் இடமாக உள்ளது. காசி மாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை பாதுகாத்து வருகின்றனர்.
காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரை சுற்றி நாற்பத்தைந்து கிலோ மீட்டர் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. இதற்கு ஒரு புராண கதை உள்ளது.
ஸ்ரீராமர், ராவண வதம் செய்த பின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனை காசிக்கு சென்று சுயம்பு சிவலிங்கம் கொண்டு வரும்படி பணித்தார். அனுமன் காசியை அடைந்தார். அங்கு எங்கும் லிங்கங்கள் இருந்ததால் எது சுயம்பு லிங்கம் என்று தெரியாமல் விழித்தார்.
அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டது. பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன், அந்த சிவலிங்கத்தை பெயர்த்தெடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். ‘என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்’ என்று கூறி தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி, ‘உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது. அனுமதிக்க வேண்டும்’ என்று வேண்டினார்கள்.
அதனால் பைரவர் சாந்தி அடைந்து அனுமன் சிவலிங்கத்தை கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும், தனது அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்கு துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக் கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்த சாபத்தின்படி இன்றும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை, பல்லிகளும் ஒலிப்பதில்லை.