பொதுவாக, செல்வ வளம் பெருக வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் வீட்டில் நிறைந்திருக்க வேண்டும் என்று அதிகமாக பூஜை வழிபாடுகளைச் செய்வோம். ஆனால், நம் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிறைய சில பொருட்களை வைத்திருந்தால் மட்டுமே லக்ஷ்மி கடாட்சம் வீட்டில் பெருகும். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நம் வீட்டில் நல்ல வாசனை தரக்கூடிய பொருட்கள் எப்போதும் இருக்க வேண்டும். அதாவது பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போன்றவை இருப்பது நல்லது. அதிலும் ஏலக்காயை மாலையாகக் கட்டி பூஜையறையில் இருக்கும் மகாலக்ஷ்மி படத்திற்கு போட்டுவது நல்ல வாசனையை வீடு முழுக்கப் பரப்புவதோடு செல்வ வளத்தையும் பெருக்கும்.
பச்சை கற்பூரத்தை வீட்டில் ஏற்றும் விளக்கில் நுணுக்கி சேர்த்து விளக்கை ஏற்றினால், வீடு முழுக்க நல்ல நறுமணத்தைப் பரப்பும். கிராம்பும் நல்ல நறுமணம் தரக்கூடிய பொருள். இதையும் மாலையாகப் பயன்படுத்தலாம். விளக்கேற்றும்போது 1, 3, 5, 7, 9 என்ற ஒற்றைப்படையில் விளக்கில் போட்டு ஏற்றினால் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
நம் வீடுகளில் தினமும் பயன்படுத்தக்கூடிய பச்சரிசி, கல் உப்பு, விராலி மஞ்சள் போன்றவை செல்வத்தை அதிகரிக்கக்கூடிய பொருட்களாகும். வெண்மை நிறம் கொண்ட பச்சரிசி மகாலக்ஷ்மியின் அம்சத்தைக் கொண்டது. பாற்கடலைக் கடையும்போது அதிலிருந்து மகாலக்ஷ்மி தோன்றினாள். கல் உப்பும் அப்போதே தோன்றியதால், இது மகாலக்ஷ்மியின் அம்சமாகக் கருதப்படுகிறது.
வீட்டை சுத்தம் செய்யும்போதும், குளிக்கும்போதும் ஒரு கைப்பிடி கல் உப்பை சேர்த்து பயன்படுத்தினால், எதிர்மறையான ஆற்றல் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை அன்று கல் உப்பை வாங்கும்போது சுக்கிர ஓரையில் வாங்கும் பழக்கம் இருந்தால், ஐஸ்வர்யம் பெருகும் என்று சொல்லப்படுகிறது.
அத்துடன், விரலி மஞ்சள் சேர்த்து வாங்குவது மிகவும் விசேஷமாகும். இவை இரண்டையும் பூஜையறையில் வைக்கும்போது வீட்டில் செல்வ வளம், நகை, சொத்து ஆகியவை அதிகரிக்கும். பால் மகாலக்ஷ்மியின் அம்சமாகக் கருதப்படுகிறது. காய்ச்சிய பாலில் சிறிது சர்க்கரை சேர்த்து நிவேதனமாகக் கடவுளுக்குப் படைக்கும்போது வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த 7 பொருட்களும் உங்கள் வீட்டில் இருக்கிறதா? என்று சொல்லுங்கள்.