
தமிழ்நாட்டில் கன்னியாக்குமரி மாவட்டம் கேரளபுரத்தில், ஸ்ரீ மகாதேவர் ஆலயத்தில் உள்ள திறந்தவெளியில் இருக்கிறார் அரசமரத்தடி விநாயகர்.
இந்த விநாயகர் முதல் ஆறு மாதங்கள் ஒரு நிறத்திலும், அடுத்த ஆறு மாதங்கள் இன்னொரு நிறத்திலும் இருப்பார். இந்த விநாயகர் சிலை 2300 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது. நிறம் மாறும் இந்த அதிசய விநாயகரை தரிசித்தால், நம் வாழ்விலும் அதிசயம் நிகழும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
உத்தராயணம் காலமான தை முதல் ஆனி வரை விநாயகர் கருப்பாகவும், தட்சிணாயனம் காலமான ஆடி முதல் மார்கழி வரை விநாயர் வெண்மையாகவும் காட்சியளிக்கிறார். ஆடி மாதம் வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக வெண்மை நிறத்திற்கு மாறிவிடுவார் விநாயகர். அதைப்போல உத்தராயணம் காலம் தொடங்கும் போது விநாயகர் மீது சின்ன கருப்பு புள்ளிகள் விழத்தொடங்கி, கருமை நிறத்திற்கு மாறிவிடுவார்.
திருவிதாங்கூர் மன்னனாக இருந்த கேரளவர்மன் தம்புரான் ராமேஸ்வரம் கடலில் புனித நீராடிய போது கிடைத்தவர் தான் இந்த அதிசய விநாயகர். ஆறு அங்குலத்தில் இருந்த விநாயகரை இங்கே வைத்த பிறகு மெல்ல வளர்ந்து விட்டதாக சொல்லப்படுகிறது. விநாயகர் சிலை நிறம் மாறுவதற்கான காரணம் இச்சிலை சந்திரகாந்தம் என்ற அபூர்வ கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுதான்.
இக்கோவிலில் இருக்கும் இன்னொரு அதிசயம், இங்கு அமைந்திருக்கும் கிணற்று நீர். விநாயர் தான் நிறம் மாறிக்கொண்டிருக்கிறார் என்றால், இந்த கிணற்று நீரும் நிறம் மாறிக்கொண்டேயிருக்கிறது. விநாயகர் வெண்மையாக இருக்கும் போது கிணற்று நீர் கருமையாகவும், விநாயகர் கருமையாக இருக்கும் போது கிணற்று நீர் நன்றாக தெளிந்து வெண்மையாக இருப்பதாக சொல்லப்படுகிறது.