கேட்ட வரத்தைக் கொடுக்கும் கார்த்திகை சோமவார விரதம்!

Karthigai Somavara Viratham
Karthigai Somavara Viratham
Published on

வாராவாரம் வரும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது. சோமவார வழிபாடு என்று இது சிறப்பித்து சிவபெருமானுக்கு வழிபாடு நடத்தப்பெறுகிறது.  அன்றைய தினம் பிரதோஷம் வந்தால் அது சோமவார பிரதோஷம் என்று மேலும் சிறப்பித்து சொல்லப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. ஆனால், கார்த்திகை மாதம் வரும் சோமவாரமோ சிவனுக்கு மிக  மிக விசேஷமானது. அன்று சிவபெருமானை விரதம் இருந்து  வணங்கி வழிபாடு செய்பவர்களுக்கு கேட்ட வரத்தைக் கொடுப்பாராம் சிவபெருமான்.

பொதுவாக, மாதத்தில் நான்கு அல்லது ஐந்து திங்கட்கிழமைகள் வரும். நாளைய தினம் கார்த்திகை மாத இரண்டாம் சோம வாரம். ஜாதகத்தில் சந்திரன் நீசமாக இருந்தால் ஒருவருக்கு எப்போதும் எல்லா விஷயத்திலும் மனக்குழப்பம் இருக்கும் என்று சொல்வார்கள். இவர்கள் இன்றைய தினம் சிவனை விரதம் இருந்து வழிபட்டால் இவர்களுக்கு மனக்குழப்பம் முற்றிலும் நீங்கும் என்று உறுதியாக சொல்லப்படுகிறது. சோமவாரத்தில் 'சோமன்' என்பது சந்திரனை குறிக்கிறது.

புராணத்தின்படி, சந்திரன் தனது 27 மனைவிகளை (தட்சனின் புதல்விகள்) சமமாக நடத்தாததால், தட்சனால் சபிக்கப்பட்டார். அதனால் அவரது பொலிவு மங்கத் தொடங்கியது. அவர் தன்னைக் காப்பாற்றும்படி சிவபெருமானிடம் வேண்டினார். அவரது பிரார்த்தனையில் மகிழ்ந்த சிவபெருமான் அவரை சாபத்திலிருந்து விடுவித்ததோடு மட்டுமல்லாமல், தனது சிரசில் அவரை பிறை சந்திரனாக சூடி அவர் மதிப்பை உயர்த்தினார். சிவபெருமான் தனது தலையை அலங்கரிக்கும் பிறையுடன் 'சந்திரமௌலீஸ்வரர்' மற்றும் 'சோமேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.  கார்த்திகை மாத சோமவாரத்தன்று சந்திரனுக்கு சாப விமோசனம் கிடைத்ததாக நம்பப்படுகிறது.

கார்த்திகை சோம வாரத்தன்று வீட்டில் இருந்தபடியே 'ஓம் நமசிவாய' என்று சொன்னாலே ஈஸ்வரனின் அருள் உங்களுக்குக் கிடைக்கும். கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பவர்கள் அங்கே நடைபெறும் சங்காபிஷேகத்தை கண் குளிரக் காணலாம். ஈஸ்வரன் நெருப்பு வடிவத்தில் இந்த மாதத்தில் தோன்றியதால் அவரைக் குளிர்விக்கவே அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. சங்காபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கு ஈஸ்வரனின் பாதத்தில் இடம் கிடைக்குமாம்.

கார்த்திகை சோமவாரத்தன்று சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்த வழிபாடாகக் கருதப்படுகிறது. மங்கலகரமான கார்த்திகை சோமவார பூஜை மற்றும் விரதம் அனுஷ்டிப்பதால் நல்ல வாழ்க்கைத்துணையை அடையலாம். நீண்ட ஆயுளையும் பெறலாம். நல்ல ஆரோக்கியம், செல்வச் செழிப்பு, கடனில்லா வழ்க்கை, தொழிலில் அபிவிருத்தி ஆகிய எல்லா நன்மைகளையும் அடையலாம்.

இதையும் படியுங்கள்:
சிக்கனமும் சேமிப்பும் வீட்டின் இரு கண்கள்!
Karthigai Somavara Viratham

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் ஐந்து சோமவாரங்கள் வருகின்றன. பொதுவாக, ஒரு மாதத்தில் நான்கு வாரங்கள்தான் வரும். ஆனால், கார்த்திகை சோமவாரத்திற்கு மட்டும் மார்கழி மாதத்தில் வரும் முதல் திங்கட்கிழமையையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஐந்து என்பது சிவபெருமானுக்குரிய எண்ணாகும். பஞ்ச பூதங்களின் வடிவமாகவும், பஞ்சாட்சரத்தின் சாரமாகவும் இருக்கக்கூடியவர் சிவபெருமான் என்பதால் அவருக்கு கார்த்திகை மாதத்தில் 5 சோமவாரங்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

கார்த்திகை சோமவார விரதம் இருப்பவர்கள் சிவபெருமான் படத்தை அலங்கரித்து வைத்து அதற்கு முன்பு அஷ்டோத்திரம் சொல்லி வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். கூடவே கார்த்திகை மாதம் முருகப்பெருமானுக்கும் விசேஷமானதால், அவர் படத்தையும் வைத்து வில்வ இலைகளால் அர்ச்சிக்கலாம்.  நைவேத்தியமாக பால், பழம், கற்கண்டு என்று எது வேண்டுமானலும் படைக்கலாம்.  முடிந்தவர்கள் முழு நேரமும் உபவாசமாக இருக்கலாம். முடியாதவர்கள் ஒரு வேளை சாப்பிட்டோ அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டோ விரதத்தை கடைபிடிக்கலாம்.

பொதுவாக, எல்லோருமே ஏதாவது ஒரு கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான் வேண்டிக்கொண்டு விரதம் இருப்போம். சோமவாரத்தில், திங்கட்கிழமை விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா நன்மைகளும்  கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், கார்த்திகை மாத சோமவாரத்தில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது பக்தர்களின் பரவலான நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com