கர்ச்சிப் பூசை - 7 நாட்கள் பூசை; பதினான்கு தெய்வங்கள் வழிபாடு!

kharchi pooja
Kharchi pooja
Published on

இந்தியாவின் திரிபுராவில் அகர்தலா நகருக்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கைர்நகர் அருகே பதினான்கு தெய்வங்களின் கோயில் உள்ளது. இந்தக் கோவில் மஹாராஜா கிருஷ்ண மாணிக்யாவின் ஆட்சியின் போது, ​​உதய்பூரிலிருந்து புராண்ஹவேலி அல்லது பழைய அகர்தலாவிற்குத் தனது தலைநகரை மாற்றியதன் மூலம், பதினான்கு கடவுள்கள் கோயிலும் கி.பி 1760 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 

இக்கோயில் வளாகத்தில், ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் கர்ச்சிப் பூசை (Kharchi Puja) எனும் திருவிழா நடைபெறுகிறது. ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் வரும் அமாவாசையின் எட்டாவது நாளில் தொடங்கி, ஒரு வார காலம் கொண்டாடப்படும் அரச பூசையான, கர்ச்சிப் பூசைத் திருவிழாவில் திரிபுரா மக்களின் வம்சத் தெய்வங்களான பதினான்கு கடவுள்களின் வழிபாடு நடைபெறுகிறது. இந்தப் பூசையுடன் தொடர்புடைய பல்வேறு புராணக்கதைகள் உள்ளன. 

'கர்ச்சி' என்ற பெயர் கோக்போரோக் மொழியில் இருந்து வந்தது. இதன் பொருள் 'மங்களகரமான காலம்' அல்லது 'சுபச்சடங்கு' என்பதாகும். கர்ச்சி பூசை பழங்காலத்தில் உருவானது மற்றும் திரிபுராவின் அரச குடும்பங்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் முதலில் கிரகத்தையும் மனிதக் குலத்தையும் பாவங்களிலிருந்து சுத்தப்படுத்துவதற்காக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்கான வேண்டுதல்களையும் முன் வைக்கிறது. 

திரிபுரி புராணங்களின் படி, 'அமா பேச்சி' என்பது தாய் தெய்வம் அல்லது பூமி தாய்க்கு கர்ச்சி பூசை செய்யப்படுகிறது. 'கர்ச்சி' என்ற வார்த்தை 'கியா' என்ற வார்த்தையிலிருந்து உருவானது. அதாவது, 'பூமி' என்று பொருள். கர்ச்சி பூசை அடிப்படையில் பூமியை வணங்குவதற்காகச் செய்யப்படுகிறது என்றும் சொல்கின்றனர். 

திரிபுராவின் கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் ஆன்மீக பக்தியின் அற்புதமான திருவிழாவாக கர்ச்சி பூசை காலப்போக்கில் வளர்ந்துள்ளது. இப்பூசையில் செய்யப்படும் அனைத்துச் சடங்குகளும் பழங்குடி மரபு வழியைச் சேர்ந்தவை. இதில், சிவன், விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, கார்த்திகேயர், விநாயகர், பூமி, கங்கை, அக்னி, காமா, ஹிமவான் மற்றும் வருணன் எனும் பதினான்கு கடவுள்கள் அடங்குவர். இவர்களை ‘சதுர்தச தேவர்கள்’ என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப் பூசையானது, தொடர்ந்து ஏழு நாட்கள் பாவங்களைப் போக்குவதற்காக நடத்தப்படுகிறது. இந்தக் காலத்தில் திரிபுரா முழுவதும் யாருமே உழவு செய்வதோ, கட்டிடம் கட்டுவதோக் கிடையாது.

இந்தப் பூசை நாளில், பதினான்கு கடவுள்களையும், 'சாய்த்ரா' நதிக்கு சாந்தை உறுப்பினர்கள் கொண்டு செல்கின்றனர். அவர்களைப் புனித நீரில் குளிக்கச் செய்து மீண்டும் கோவிலுக்குக் கொண்டு வருகின்றனர். அதன் பிறகு, கோவிலில் பூசை செய்து, மலர்கள் மற்றும் படையல்களை வழங்கி, பதினான்கு தெய்வங்களுக்கும் வழிபாடு நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் ஆடு மற்றும் புறாக்களைப் பலியிடும் விலங்குப் பலியும் ஒரு முக்கியப் பகுதியாக இருக்கிறது. மக்கள் இனிப்புகளையும், பலி இறைச்சியையும் கடவுளுக்குப் படைத்து வழிபடுகின்றனர். இப்பூசையில் பழங்குடியினர் மட்டுமின்றி, பழங்குடியினர் அல்லாதவர்களும் கலந்து கொண்டு, திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்ற்னர்.  

இதையும் படியுங்கள்:
தலையெழுத்தையே மாற்றி அற்புதம் செய்யும் சிவாலய கைங்கர்யம்!
kharchi pooja

இந்த ஏழு பூசை நாட்களில் மட்டும் பதினான்கு தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. மீதமுள்ள ஆண்டு முழுவதும் சிவன், துர்க்கை மற்றும் விஷ்ணு எனும் மூன்று தெய்வங்களுக்கு மட்டுமே வழிபாடு நடைபெறும். மீதமுள்ள பதினொன்று தெய்வங்களும் ஒரு மரப்பெட்டியில் பூட்டி சாந்தையின் பராமரிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுவிடும். இந்த விழாக் காலத்தில், இங்கு பெரிய கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com