எமதர்மனின் பாசப்பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. அத்தகைய மரண பயத்தைப் போக்கும் திருத்தலம்தான் ஸ்ரீவாஞ்சியம் எனும் திருவாஞ்சியம். இந்த ஆலயத்தில் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி என்ற திருப்பெயர் கொண்டு இறைவன் அருள்பாலித்து வருகிறார். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை என்பதாகும். ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயரும் அம்பிகைக்கு உண்டு.
ஒரு சமயம் சிவபெருமான் உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது அம்பிகைக்கு பல திருத்தலங்களைக் காட்டி அவற்றின் சிறப்புகளை எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன். காசி, காஞ்சிபுரம், காளகஸ்தி என பல திருத்தலங்களை காட்டிய ஈசன், ஸ்ரீவாஞ்சியத்தின் மகிமையை கூறும்போது, ‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலமிது. இங்குள்ள தீர்த்தமான குப்த கங்கை, கங்கையை விடவும் புனிதமானது. இந்தத் தலத்தில் ஓர் இரவு தங்கியிருந்தாலே கயிலாயத்தில் சிவகணமாய் இருக்கும் புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார். இதையடுத்து, திருவாஞ்சியத்தில் தங்கியிருக்க உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான் இந்தத் தல அம்பிகைக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர் வந்தது.
ஒரு சமயம் மகாலட்சுமி தாயார், மகாவிஷ்ணுவிடம் கோபம் கொண்டு பிரிந்து சென்றாள். திருமகள் இல்லாததால் வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் மகாவிஷ்ணு. சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார். இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச் செய்து மகாவிஷ்ணுவுடன் சேர்த்து வைத்தார்.
‘திரு’ என்று அழைக்கப்படும் திருமகளை மகாவிஷ்ணு வாஞ்சையாய் விரும்பி சேர்ந்த இடம் என்பதால் இந்தத் தலம் திருவாஞ்சியம் என்று பெயர் பெற்றது. கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி இங்கு வந்து இறைவனை வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.
காசியில் வழங்கப்படுவது போல், ஸ்ரீவாஞ்சியத்திலும் காசிக் கயிறு எனும் கருப்பு கயிறு வழங்கப்படுகிறது. காசியில் பாவமும் புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன. அதனால் நம் பாவங்களுக்கு ஏற்ப காசியில் பைரவர் தண்டனை வழங்குகிறார். ஆனால், திருவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது. அதனால் பைரவர் தண்டனை இத்தலத்தில் இல்லை. இத்தல பைரவர் தண்டத்தைக் கீழே வைத்துவிட்டு தியான நிலையில் யோக பைரவராக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அவருடன் நாய் வாகனமும் இல்லை.
இத்தலத்தில் உள்ள குப்த கங்கை என்னும் தீர்த்தம், சிவபெருமானின் சூலத்தால் கங்கையின் பாவங்களைப் போக்கிட உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. காசியில் தன்னிடம் வந்து நீராடுபவர்களின் பாவங்களை கங்கை ஏற்கிறாள். தனது ஆயிரம் கலைகளில் ஒன்றை மட்டும் காசியில் விட்டு விட்டு, மீதமுள்ள 999 கலைகளுடன் இந்த குப்த கங்கையில் ரகசியமாக உறைகிறாள். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகள் அதிகாலை நேரத்தில் இந்த குப்த கங்கையில் நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கி, சிவபெருமான் அம்பிகை சமேதராக அவர்களுக்கு அருள்பாலிக்கிறார்.