
ஒவ்வொரு அமாவாசையன்றும், நீத்தார் கடனை நிறைவேற்றும்போது,
‘ஏ ஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந சபாந்தவஹா
தே சர்வே த்ருப்திம் ஆயாந்து மயா
உச்ரிஷ்டைஹி குஸௌதஹைஹி
த்ருப்யத் த்ருப்யத் த்ருப்யத்’
என உச்சரிக்கப்படும் ஸ்லோகத்தின் பொருள் என்ன தெரியுமா? ‘எனக்குத் தாயாகவோ, தந்தையாகவோ, சகோதரராகவோ, பிற உறவினராகவோ இல்லாவிட்டாலும் கூட, இவ்வுலகை விட்டு நீங்கியவர்களின் ஆன்மாக்கள் புண்ணியமடைய, இந்த அமாவாசை தினத்தில், தர்ப்பையோடு கலந்த நீரை அர்ப்பணிக்கிறேன்’ என்பதாகும்.
அமாவாசையன்று செய்யப்படும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளின் வழியாக, முன்னோர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. வருடந்தோறும் வரும் தை மற்றும் ஆடி என இரு அமாவாசைகள் முக்கியமென்றாலும், நவராத்திரியின் ஆரம்பத்தைக் குறிக்க மூன்றாவதாக வரும் மஹாளய பட்ச அமாவாசையும் முக்கியம் வாய்ந்ததாகும்.
‘மறந்தவனுக்கு மஹாளயத்தில் கொடு’ என்கிற மாதிரி, தை மற்றும் ஆடி மாத அமாவாசைகளில் தர்ப்பணம் செய்யாதவர்கள், மஹாளய பட்ச காலத்தில் நீத்தார் கடனை செய்கையில், முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழ்ந்து, ஆசிகளை வழங்குவார்கள்.
புரட்டாசி மாத ஆரம்பத்தில் வரும் அமாவாசை, மஹாளய பட்ச அமாவாசை ஆகும். அமாவாசைக்கு 15 நாட்கள் முந்திய பிரதமை திதியில் ஆரம்பித்து 15 நாட்களும், முன்னோர்களை வழிபட, பல வகை பலன்கள் கிடைக்கும். பிரதமையைத் தொடர்ந்து வரும் 15 திதி நாட்களில், குறிப்பிட்ட திதி நாளில் ஒரு முறையும், மஹாளாய அமாவாசையன்று ஒரு முறையுமாக இரு நாட்கள் மஹாளய பட்ச சமயம், நீத்தார் கடனைத் தீர்க்க தர்ப்பணம் செய்வது சிறந்ததாகும். ‘காருண்ய பிதாக்கள்’ என அழைக்கப்படும் முன்னோர்களின் ஆசிகளின் மூலம், பித்ரு தோஷம் மற்றும் பிற தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.
மஹாளய பட்ச காலத்தில், முன்னோர்கள் மட்டுமல்ல; நாம் அளிக்கும் தர்ப்பணத்தை ஏற்பதற்காக தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அநேகர் காத்திருப்பது உண்டு. எல்லோருக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்து மஹாளய பட்ச தர்ப்பண வழிபாட்டை மேற்கொள்கையில், அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையும். மஹாளய பட்ச தர்ப்பணத்தை நீர் நிலைகள், கடலோரங்கள் போன்ற இடங்களில் செய்து, முடிந்தவற்றை தானம் செய்வதோடு, வாயில்லா பிராணிகள், பறவைகளுக்கு உணவளிப்பது மிகவும் அவசியமாகும்.
மஹாளய பட்ச காலத்தில் மகாபரணி, மத்யாஷ்டமி, வைதிருதி, மகாவிய தீபாதம், அமிர்தா நவமி ஆகிய தினங்கள் தர்ப்பணம் செய்ய மிக உகந்ததாகும். இந்நாட்களில் செய்ய இயலாதவர்கள் ஏதாவது ஒரு நாளில் செய்யலாம்.
கொடை வள்ளல் கர்ணன், தன்னுடைய முன்னோர்களுக்கு சிராத்தம் செய்யாததால், அவர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. எனவே, முன்னோர்கள் கர்ணனுக்கு சாபமிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு சொர்க்கத்திற்கு சென்ற கர்ணனுக்கும் சாப்பாடு கிடைக்கவில்லை. பொன்னும், பொருளுமே தட்டில் விழுந்தன. யமதர்ம ராஜனிடம் இதற்குப் பரிகாரம் கேட்கையில், பூலோகம் சென்று, மஹாளய பட்ச சமயம், நீத்தார் கடன் தீர்க்க வழி கூறினார். கர்ணனும் அவ்வாறே செய்ய, பித்ரு கடன் அடைபட்டு சொர்க்கத்திற்கு திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கர்ணன் பூமியில் தங்கி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த 15 நாட்களே மஹாளய பட்ச காலமென அழைக்கப்படுகிறது.
எவ்வளவுதான் தான தர்மம் செய்தாலும், பித்ரு கடன் வழிபாடு செய்யாவிட்டால் பலன் கிடைக்காது. மஹாளய பட்ச 15 நாட்களும் உணவில் எளிமையைக் கடைப்பிடிப்பதோடு, அன்னதானம் அளித்து, இறை வழிபாடு செய்வது நன்மையை அளிக்கும்.