20 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற கோம்பை திருமலைராயப் பெருமாள் கோயில் தேரோட்டம்!

Kombai Thirumalairaya Perumal temple Therottam
Kombai Thirumalairaya Perumal temple Therottam

தேனி மாவட்டம், கோம்பையில் ராமக்கல் மலையில் தெற்குத் திசையில் தலையை வைத்து, வடக்குதிசை நோக்கிக் கால் நீட்டியபடி, கோம்பை நகரைப் பார்த்தபடி திருமலைராயப் பெருமாள் கிடந்த (சயன) நிலையில் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் திருமலைராயப் பெருமாள் கோயில் இருக்கிறது.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திர நாளில் நடத்தப் பெற்று வந்த இக்கோயிலுக்கான தேரோட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக நின்று போனது. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த கோயில் தேரோட்டத்தை இப்பகுதி ஜமீன்தாரும், பரம்பரை அறங்காவலருமான சீனிவாசராயர் தலைமையில் இந்த ஆண்டு நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

இக்கோயில் தேரோட்டத்திற்கான கொடியேற்றம் கடந்த மே 12 அன்று நடைபெற்றது. கொடியேற்ற நாளில், ஜமீன் வீட்டிலிருந்து செங்கோல் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அன்றிலிருந்து ஜூன் மாதம் 5 ஆம் நாள் வரை இக்கோயிலில் நாள்தோறும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறவிருக்கின்றன.

ஜமீன் வீட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோலுடன், திருமலைராயப் பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி ஆகியோருடன் வலம் வரும் தேரோட்ட நிகழ்வு கிழக்கு ரத வீதியிலிருந்து மே 23 அன்று மாலை 4.10 மணிக்குத் தொடங்கியது. தெற்கு ரத வீதி வழியாக மேற்கு ரத வீதிக்கு வந்த தேர் கோயிலருகில் மாலை 5.45 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மே 24 அன்று மதியம் மீண்டும் மேற்கு ரத வீதியிலிருந்து தேரோட்டம் தொடங்கப்பெற்று வடக்கு ரத வீதி வழியாகக் கிழக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்:
யாருக்கும் கடனாகக் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
Kombai Thirumalairaya Perumal temple Therottam

தமிழகத்திலுள்ள கோயில்களில் இருக்கும் 12 மிகப்பெரிய தேர்களில் ஒன்றாக இருக்கும் கோம்பை திருமலைராயப்பெருமாள் கோயில் தேரோட்டம் 20 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்றதால், தேரோட்ட நிகழ்வில் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

இத்தேரோட்ட நிகழ்வில் கோம்பை ஜமீன் சீனிவாசராயர், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என். ராமகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, கோயில் செயல் அலுவலர் அருணாதேவி உட்பட ஊரில் முக்கியமானவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com