வைணவத்தைக் காக்க கண்களை இழந்த கூரத்தாழ்வான்!

Koorathazhwan
Koorathazhwan
Published on

காஞ்சி மாநகருக்கு வடமேற்கு திசையில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கூரம் என்ற ஊரில் கி.பி.1010ம் அண்டில் பிறந்தவர் கூரத்தாழ்வான். தந்தையார் பெயர் அனந்தர் என்கிற கூரத்தாழ்வார். தாயார் பெருந்தேவி நாயகி. பிறந்தபோது பெற்றோர் சூட்டிய பெயர் ஸ்ரீவத்சாங்கர் என்கிற திருமறுமார்பன்.

உறையூரை ஆண்டு வந்த கிருமிகண்ட சோழன் சைவ சமயத்தைச் சார்ந்தவன். அவனிடம் இராமானுஜர் வைணவ சமயத்தைப் பரப்புகிறார் என்று கூறி இராமானுஜரை அழைத்து. ‘சிவனுக்கு மேலானதொரு கடவுள் இல்லை’ என்று எழுதி அவ்வோலையில் கையொப்பம் வாங்கும்படியும் வற்புறுத்தினர். சோழ மன்னனும் இதை ஏற்று காவலாளிகளை அனுப்பி இராமானுஜரை அழைத்து வரும்படி கட்டளையிட்டான்.

காவலாளிகள் இராமானுஜரின் இருப்பிடத்திற்குச் சென்றார்கள். ஆபத்தை அறிந்த கூரத்தாழ்வானும் பெரியநம்பியும் இராமானுஜரைக் காப்பாற்ற முடிவு செய்தார்கள். அந்த ஏற்பாட்டின்படி இராமானுஜர் வெள்ளை உடை அணிந்து மேல்கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றார். கூரத்தாழ்வான் காவி உடையை உடுத்தி இராமானுஜராக காவலர்களுடன் புறப்பட்டார். அவருடன் பெரியநம்பியும் சென்றார்.

சோழ மன்னன் கூரத்தாழ்வானிடம் ஒரு ஓலைச்சுவடியைக் கொடுத்து அதில் ‘சிவாத் பரதரம் நாஸதி’ அதாவது, ‘சிவனைக் காட்டிலும் மேலான தெய்வம் இல்லை’ என்று எழுதிய வாசகத்தின் கீழ் கையொப்பமிடச் சொன்னான். கூரத்தாழ்வான் அந்த ஓலையை வாங்கி மன்னன் எழுதிய வாக்கியத்தின் கீழே ‘த்ரோணமஸ்தி த்த:பரம்’ சிவனைக் காட்டிலும் மேலான தெய்வம் உள்ளது என்று பொருள்படும்படி எழுதி கையொப்பமிட்டார்.

மன்னன் இராமானுஜரை முன்பின் பார்த்ததில்லை. கோபம் கொண்ட சோழ மன்னன் பெரியநம்பியை அழைத்து அவரை எழுதி கையொப்பமிடச் சொன்னான். அவரும் ‘ஸ்ரீமந்நாராயணனே பரம் பொருள்’ என்று எழுதி கையொப்பமிட்டார்.

இந்த சமயத்தில் நாலூரான் என்பவன் வந்திருப்பவர் இராமானுஜர் அல்ல. அவருடைய சிஷ்யர் கூரத்தாழ்வான் என்று மன்னனிடம் காட்டிக் கொடுத்தான். கோபத்தில் இருந்த மன்னன் வெகுண்டெழுந்து, ‘இருவருடைய கண்களையும் பிடுங்கி எறியுங்கள்’ என்று ஆணையிட்டான்.

“உன்னைப் போன்ற வெறி பிடித்த மன்னனைக் கண்டதற்காக எனது கண்களை நானே பிடுங்கிக் கொள்கிறேன்” என்று கூறி, தனது கண்களை தானே பிடுங்கி எறிந்தார் கூரத்தாழ்வான். காவலாளிகள் உடன் வந்த பெரியநம்பியின் கண்களைப் பிடுங்கினார்கள். இருவரையும் ஊர் எல்லைக்குக் கொண்டு சென்று விட்டுவிட்டார்கள். இருவரும் திருவரங்கம் நோக்கி நடக்கலானார்கள். பெரியநம்பி வழியிலேயே திருநாடு அடைந்தார். கூரத்தாழ்வான் திருவரங்கம் வந்து சேர்ந்தார்.

இராமானுஜரின் சிஷ்யர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்ற மன்னன் உத்தரவின் பேரில் சேவகர்கள் இந்த விஷயத்தை கூரத்தாழ்வானிடம் தெரிவித்தார்கள். ஆனாலும், கூரத்தாழ்வானை கோயிலுக்குள் அனுமதித்தார்கள். ஆனால் கூரத்தாழ்வானோ, “நான் கோயிலுக்குள் சென்றால் இராமானுஜரின் சிஷ்யன் இல்லை என்றாகி விடும்” என்று கோயிலுக்குச் செல்ல மறுத்து திருமாலிருஞ்சோலைக்குச் சென்றார். சில காலத்திற்குப் பின்னர் சோழ மன்னன் இறந்து விட்டான் என்றதை அறிந்து மீண்டும் திருவரங்கம் வந்தடைந்தார்.

இராமானுஜரும் திருவரங்கம் திரும்பினார். கூரத்தாழ்வான் கண்களை இழந்த விஷயத்தை அறிந்து அவரை சந்திக்கச் சென்றார். இராமானுஜர் தன்னைக் காண வந்திருக்கிறார் என்பதை அறிந்ததும் கூரேசர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

“கூரேசரே, வரதராஜப்பெருமாள் குறித்து நீர் ஒரு ஸ்தோத்திரம் பாட வேண்டும். இருவரும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை தரிசித்து உமக்குக் கண்களைத் தரும்படி வேண்டுவோம்” என்றார்.

இதையும் படியுங்கள்:
ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்னைக்கு எளிய வீட்டு வைத்தியம்!
Koorathazhwan

கூரத்தாழ்வானுக்கு இழந்த கண்களைத் திரும்பப் பெறுவதில் விருப்பமில்லை. இராமானுஜர் கேட்டுக்கொண்டபடி வரதராஜஸ்வத்தை இயற்றினார். காஞ்சி வரதர் சன்னிதியில் கூரத்தாழ்வான் வரதராஜஸ்தவத்தைப் பாட, அதில் மயங்கிய வரதர், ‘வேண்டும் வரம் யாது?’ என்று கேட்க, உடையவர் விரும்பியபடி தனக்குக் கண்கள் வேண்டும் என்று கேட்காமல் “நான் பெறப்போகும் பேற்றை நாலூரானும் பெற வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.

இதை அறிந்த உடையவர் வருத்தமுற்றார். பெருமாளிடம் தனக்குப் பார்வை வேண்டும் என்று கேட்பதை விட்டு துரோகம் செய்த நாலூரானுக்கு நற்கதி கிடைக்க பெருமாளிடம் வரம் வேண்டியதைக் கேட்டு வருந்தினார். உடையவர் மனம் வருந்தியதைக் கண்ட வரதராஜர் “ஆழ்வான் எம்மையும் உம்மையும் காணும்படியாக கட்கண்ணைத் தருகிறேன்” என்று வரமளித்தார். இதைக்கேட்ட இராமானுஜர் ஒருவாறு மகிழ்ந்து பின்னர் இருவரும் திருவரங்கம் திரும்பினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com