
சேலம் நகரில் மணிமுத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோட்டை பெருமாள் கோவிலில் (Kottai Perumal Temple) அழகிரி நாத பெருமாள் சுந்தரவல்லித் தாயாரோடு காட்சி தருகிறார். இது 108 அபிமான க்ஷேத்திரங்களில் ஒன்றாகும். இங்குள்ள தீர்த்தம் வஞ்சுள புஷ்கரிணி 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி. பி 12ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. பிறகு சோழ மன்னன் ராஜகேசரிவர்மனால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு ஆதிவேணுகோபாலன் நின்ற கோலத்தில் அழகிரிநாதனாக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. தாயார் சுந்தரவல்லி பத்மாசனத்தில் யோக வடிவில் அமர்ந்து தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார். இத்தல வரலாறு படி வைகுந்தத்தில் மகாலக்ஷ்மியுடன் விஷ்ணு பேசிக்கொண்டிருக்க, பிருகு முனிவர் வருகிறார். விஷ்ணு முனிவரை கவனிக்காததால் கோபம் கொண்டு முனிவர் பெருமாள் மார்பில் உதைக்க கோபம் கொண்ட லக்ஷ்மி, வெளியேறுகிறார். தவறை உணர்ந்து ப்ருகு மன்னிப்பு கேட்கிறார். தவம் இருந்தால் கோபித்த தாயார் மன்னிப்பார் என பெருமாள் கூற, முனிவர் தவம் இருந்தார்.
ஒரு நாள் வில்வ மரத்தடியில் ஒரு பெண் குழந்தை அழுது கொண்டிருந்ததைப் பார்த்து அதற்கு சுந்தரவல்லி என பெயரிட்டு வளர்த்தார். அந்த பெண் பருவ வயதை அடைந்ததும் விஷ்ணுவே அழகிய நாதராக வந்து மணந்து கொண்டார். பிறகு முனிவருக்கு இருவரும் காட்சி தந்தனர்.
பண்டைக்காலத்தில் அழகிரிநாதர் கோவில்முன் திருமணிமுத்தாறு கரைபுரண்டு ஓடியது. இக்கோவில் சிற்பக்கலைக்காக தனிச்சிறப்பைப் பெற்றது. மணிமுத்தாறில் நீராடி பெருமாளை துதிக்க துயரங்கள் தூரவிலகும் என்று நம்பப்டுகிறது. மலை சூழ்ந்த நகரமான சேலத்தில் இறைவன் சௌந்தரராஜன்தான் பிற்காலத்தில் அழகியநாதராக அழைக்கப்பட்டார்.
சோழர்களை மதுரை மன்னன் சுந்தரபாண்டியன் வீழ்த்திய வெற்றி குறித்து கல்வெட்டில் உள்ளது. இக்கோவிலில் உள்ள ஆஞ்சனேயர் வரலாற்று காலத்தில் இருந்து உருவத்தில் மூன்றாம் இடம் வகிக்கிறார். நாமக்கல் ஆஞ்சனேயர் முதலாவதாகவும், சுசீந்த்ரம் தாணுமாலய ஆஞ்சனேயர் இரண்டாவதாகவும், கோட்டை அழகிரி நாதர் ஆஞ்சனேயர் மூன்றாவதாகவும், குறிப்பிடுகின்றனர்.
இங்கு பெருமாள் திருமண கோலத்தில் காட்சி தருவதால் இங்கு வந்தால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பேறு கிட்டும். இங்கு தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. சேலத்தில் உள்ள வைணவ கோவில்களுக்கெல்லாம் தலைமையாக கருதப்படுவது கோட்டை அழகிரிநாதர்.