
வாரத்தின் ஏழு நாட்களில் பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள் சனிக்கிழமைதான். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகள் என்றால் அதன் விசேஷமே தனிதான். ஒரு புரட்டாசி சனிக்கிழமை நன்னாளில், திருவோண நட்சத்திரம் கூடிய தினத்தில்தான் எம்பெருமான், ஏழுமலையின் மீது ஆவிர்பவித்ததாக பல ஆசார்ய பெருமக்கள் நமக்குக் காட்டித் தந்திருக்கிறார்கள். சனிக்கிழமை திருமால் வழிபாட்டுக்கு உகந்த நாளாக எப்படி மாறிபோனது என்பதை இந்தப் பதிவில் அறிவோம்.
நவகிரகங்களில் சனீஸ்வரன் என்ற பெயரை கேட்டாலே எல்லோருமே நடுங்கித்தான் போவோம். ‘சனைஸ்சரன்’ அதாவது, மெதுவாக சஞ்சரிக்கும் சனீஸ்வரனுக்கு நீண்ட நாட்களாக மனதில் ஒரு குறை இருந்து வந்ததாம். தன்னைக் கண்டாலோ அல்லது தனது பெயரைக் கேட்டாலோ எல்லோருமே பயப்படுகிறார்கள். தன்னை அமங்கலமானவன் என்றே சொல்கிறார்களே, இந்தக் குறையை தீர்த்துக்கொள்ள என்ன செய்வது என்று நாரத முனிவரிடம் கேட்டாராம்.
நாரத முனிவர் சனீஸ்வரரை திருவாய்ப்பாடிக்கு அழைத்துச் சென்றாராம். திருவாய்ப்பாடியில் அன்றைய தினம் ஹோலி பண்டிகைக்கு முன் தினமான, ‘ஹோலிகா தகனம்’ நடைபெற்றது. ஹோலிகா என்பவள் ஹிரண்யகசிபுவின் தங்கை. பிரகலாதனை கொல்வதற்காக ஹிரண்யகசிபு, பிரகலாதனை நெருப்பில் போட, அந்த நெருப்பில் இருந்த ஹோலிகாவின் பிடியிலிருந்தும் தீயின் பிடியிலிருந்தும் ஹரியின் ஸ்மரணத்தால் எப்படி பிரகலாதன் தப்பித்தான் என்பதைக் கொண்டாடும் விதமாகவே ஹோலிகா தகனத்தை வட இந்தியர்கள் கொண்டாடுவார்கள்.
ஹோலிகா தகனத்துக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கொள்ளி கட்டைகளை சனீஸ்வரனும் நாரத முனிவரும் பார்த்தார்கள். அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த கொள்ளிக் கட்டைகளுக்கு நடுவே கண்ணனை கொல்ல வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு ஹோலிகா தீயில் அமர்ந்திருப்பதாக சனீஸ்வரனிடம் சொன்ன நாரதர், “சனீஸ்வரா, பெருமாளுக்கு நாம் எப்போதுமே ஒரு சிறு உதவி (கைங்கர்யம்) செய்துவிட்டால் போதும், அதற்கு பதிலாக அவர் நமக்கு பேருதவி செய்து விடுவார். அவரது சுபாவமே அதுதான். அன்று பிரகலாதனை காப்பாற்றிய அந்த நாராயணன்தான் இன்று கண்ணனாக திருவாய்ப்பாடியில் இருக்கிறான் என்பதை அறிந்துதான் அவனை பழி தீர்க்க ஹோலிகா இந்தத் தீயில் இன்று அமர்ந்திருக்கிறாள். அவளது கண் கண்ணணை நெருங்குவதற்குள் உனது கண் அவளை நெருங்கட்டும். அவள் கண்ணனுக்கு தீங்கு செய்யாத வண்ணம் நீ காத்து விடு” என நாரதர் சொல்ல, உடனே சனீஸ்வரன் அங்கே பார்க்க, அங்கே ஹோலிகா கட்டைகளின் நடுவில் அமர்ந்திருந்தாள்.
சனீஸ்வரனின் பார்வையின் பலமும், பலனும் உலகமே அறிந்ததுதானே? சனீஸ்வரனின் பார்வை பட்டதுமே அந்த கொள்ளி கட்டையிலேயே பொசுங்கிப் போய் விட்டாள் ஹோலிகா. நாரதர் உடனே சனீஸ்வரரை ஸ்ரீகிருஷ்ணரிடம் அழைத்துச் சென்று, “எல்லாம் அறிந்த எம்பெருமானே, உங்களை அழிக்க வந்த ஹோலிகாவை அழித்து உங்களுக்கு கைங்கர்யம் செய்திருக்கிறார் இந்த சனீஸ்வரன். அவருக்கு நீங்கள் அனுக்ரஹம் செய்து வரங்களைத் தர வேண்டும்” என்றார்.
உடனே மாயவன் கண்ணபிரான் தனக்காக, ஹோலிகாவை அழித்த சனீஸ்வரனிடம், “சனீஸ்வரா, உனக்கு இரண்டு வரங்கள் தருகிறேன். சனிக்கிழமைகளில் விடியற்காலை பொழுது இனி, ‘சனி உஷஸ் வேளை’ என்றே அழைக்கப்படும். எந்த ஒரு நல்ல விஷயம் செய்வதற்கும் ஏற்ற காலமாக, நல்ல சுப வேளையாக இனி அந்தப் பொழுது விளங்கும். சனிக்கிழமை விடியற்காலைக்கே உரிய ஒரு தனி ஏற்றத்தை இதோ முதல் வரமாக உனக்கு தருகிறேன். இதோ இந்த யுகம் முடிந்ததும், நான் அடுத்த யுகத்திலே திருமலையிலே எழுந்தருளப்போகிறேன். நீ எனக்குப் பிரியமான ஒரு உதவி செய்ததால், எனக்கு மிகவும் பிரியமான நாளாக உனது நாளையே நான் கொண்டாடப்போகிறேன். திருமலையில் என்னை சனிக்கிழமை வழிபடுவோரையும், சனிக்கிழமைகளில் என்னை மனதில் நிறுத்துவோரையும் நான் நிச்சயம் காத்தருள்வேன்” என்றார்.
சனீஸ்வரனுக்கு அந்தத் திருமாலே திருவாய் மலர்ந்து கொடுத்தருளிய வரங்களால் சனிக்கிழமை, பெருமாள் வழிபாட்டுக்குரிய நாளாக இன்றளவும் போற்றப்படுகிறது. நாமும் அனைத்து நாட்களிலும் திருமாலை துதிப்போம், சனிக்கிழமைகளில் கூடுதலாக பெருமாளை வழிபடுவோம்.