ஐப்பசி மாதத்தை ‘துலா மாதம்’ என்று கூறுகிறோம். அதுபோல, இறை வழிபாட்டில் பல வகையான வழிபாட்டு முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் துலாபாரம் நேர்த்திக்கடன் வழிபாடு. இந்த வழிபாடு மன்னர் காலத்தில் இருந்து இருக்கக்கூடியதாகும்.
துலாபாரம் என்பது ஒருவர் வாழ்வில் கொடுக்கக்கூடிய 16 பெரிய வரங்களில் (ஷோடஷ மஹாதானம்) ஒன்றாக சாஸ்திரங்களால் கூறப்பட்டுள்ளது. துலாபாரம் கொடுப்பதன் மூலம் மனதில் இருக்கும் கவலைகள், பயங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
இறைவனும் அவனது திருநாமத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது. பக்தியுடன் ஒரு சிறு துளசி இலையை சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணர் பேரன்போடு அதை ஏற்றுக்கொள்வார். ருக்மணியும் சத்தியபாமாவும் கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை சோதித்துப் பார்க்க விரும்பி அவர்களுடைய கருத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.
கிருஷ்ணரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, உடனே அங்கு ஒரு துலாபாரம் (தராசு) கொண்டுவரப்பட்டு, கிருஷ்ணர் அதில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். கிருஷ்ணரும் மறுவார்த்தை ஏதும் பேசாமல் துலாபாரத்தில் அமர்ந்து அமைதியாக ஏதும் அறியாதவர் போல் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.
முதலில் சத்தியபாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள். ஆனால், கண்ணன் அமர்ந்திருந்த தராசு கீழிறங்கவில்லை. தனது முயற்சியில் சற்றும் தளராது சத்தியபாமா மேலும் தனது கழுத்தில், காதில், உடலில் அணிந்திருந்த எல்லா நகைகளையும் எடுத்து தராசில் வைத்தாள். அப்போதும் நகைகள் வைக்கப்பட்ட தட்டு கீழே வரவில்லை. சத்தியபாமா வெட்கத்தால் தலை குனிந்தாள்.
இந்த நிகழ்ச்சியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி தராசின் அருகில் வந்து கிருஷ்ணரை பிரார்த்தித்து வணங்கினாள். பின்பு ஒரு துளசி இலையில் கிருஷ்ணரின் நாமத்தை எழுதி, தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள். வைத்தவுடன் நிகழ்ந்த ஆச்சர்யத்தில் ருக்மணி மெய்சிலிர்த்து அப்படியே நின்றாள். என்ன ஆச்சரியம்! அது கிருஷ்ணனுடைய எடைக்கு சமமாக நின்றது.
இறைவனுக்கும், அவனது திருநாமத்துக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது என்பது இந்நிகழ்வின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. மேலும் பக்தியுடன் பகவான் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார். கலியுகத்தில், அதனால்தான் நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதுவே கிருஷ்ண துலாபாரம் என அழைக்கப்படுகிறது.